23 August, 2010

தற்செயல்



நண்பனின் மனவியல் பயங்கரவாதம் தந்த மகாவெடிப்பிலிருந்து கொஞ்சம் ஒருங்கிணையத்தொடங்கியிருக்கிறேன். இரண்டு நாளாய் தேனி வாசம். வசந்தம். காலைக்குளிர். பனி. பச்சையம் அப்பிய நிலம். குடும்பத்தின் இனிய hospitality. வானத்தின் இளம் பொழியல். பால்யநினைவுகளில் கொஞ்சம் முயங்கி பின் எனது ஊரின் அசுர வளர்ச்சி கண்டு சற்று மிரண்டு போய் இருக்கிறேன். கொஞ்சம் காய்ச்சல் வேறு.



வாழ்க்கை மீதான எனது ஒட்டுமொத்த புரிதல்களையும் கலைத்துப்போட்டுவிட்டது டிஸ்கவரி சேனலில் பார்த்த life தொடர். எவ்வளவு அற்புதம் இவ்வுலகம், விம்மித்தவிக்கிறது. விஞ்ஞானிகள் இவ்வுலகம் ஓர் தற்செயல் என்கிறார்கள். அப்படி என்றால், நானும் ஒரு தற்செயல். இப்படி ஒரு பிரமாண்ட தற்செயலுக்குள்ளே எத்தனை எத்தனை திட்ட வகைமைகளுடன் வாழ்ந்து தொலைக்கிறோம்.



கடந்த மாதத்தில் புத்தகம் ஒன்றும் படிக்கவில்லை. பத்மாவின் படிப்புவேகம் கொஞ்சம் ஆச்சர்யம்தான். கௌசல்யா தனது தளத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். நோட்டிஸ் போர்டில் இணைத்துவிட்டேன். அக்குழந்தையை தத்து எடுக்க மனம் விரும்புகிறது. but, practical difficults.. ? ஒரு குழந்தையை தத்தெடுக்க நினைக்கும் ஒரு நபருக்கு அரசாங்கம் மிகக்கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் நல்லது என்றாலும் அவை ஒரு வாழ்நாள் விதிமுறைகள். ஆனால் மனிதர்களுக்கு சுலபமான வழிமுறைகள் தெரிந்தே இருக்கிறது. சில நூறு ரூபாய்களுக்கு விற்றுவிடுகிறார்கள் குழந்தைகளை. இனிய நண்பன் பாலன் ஓவியாவை தத்தெடுத்து இருக்கிறான். சிலர் குழந்தைகள் காப்பகத்தில் ஸ்பான்சர் செய்கிறார்கள். அவரவர்களுக்கு அவரவர் சூழல். சில பேருக்கு ஒரு நொடியில் எல்லாம் சாத்தியமாகிவிடுகிறது. சிலபேருக்கு வாழ்நாள் முழுதும் எதுவும் சாத்தியமாவதில்லை. இதை நான் தற்செயல் என்று மட்டுமே நம்புகிறேன்.
****************

20 August, 2010

செய்வாயா தேவனே



பற்றிக்கொண்ட ஒவ்வொன்றும் இற்றுப்போகச்செய்கிறது விரல் நுனிகளை. மீட்பர் இருக்குமிடத்தில் பாவம் என்பது கடமையெனவே விரிகிறது வாழ்வு. கைகளை விரித்து பூமியை அணைக்கிற அன்பிருக்குமிடத்தில் பிரம்பெடுத்து விளாசுகிறது வன்மங்களின் குழந்தை. ஒற்றை நூலில் உருவாக்க முடிகிற அனைத்தையும் ஒற்றை இழுவையில் அவிழ்த்து விடுகிற நுட்பம் தெரிந்தே இருக்கிறது வாழ்விற்கு. நன்று தேவனே அவர்களுக்கு தங்களது வாகனத்தின் பின் இருக்கையில் யாரை அமரவைக்கவேண்டும் என்று தெரிந்தே இருக்கிறது. அமர்ந்தவர்களை எங்கு இறக்கிவிடவேண்டும் என்கிற ரகசியத்தை வைத்துக்கொண்டு அலைகிறேன் நான். இல்லாத ஒன்றிற்காக உன்னில் அறையப்படும் ஆணியின் மீது இயங்கும் சுத்தியலாக நானிருக்கும்போது நீ என்னை மன்னிப்பாயா .... தேவனே.

16 August, 2010

பரிதி காய்தல்

நண்ப

இடைவெளிகளின் பீடபூமியில் பூத்து தளும்புகின்றன மௌனங்கள் வாதை மணம் வீசி. சொற்கரைசலினால் ஆன பானம் தீர்ந்த பார்வைக்குடங்களில் நிரம்பி வழிகிறது வெறுமையின் துயர் கணங்கள். சமரற்ற நிமிடங்களில் தூர்த்த வாளொப்ப களிப்பிழந்து தவிக்கிறது நிணம் தோய்ந்த சிறுவுயிர். நிலவு காய்கிறது.

நண்ப
துணை போன காலங்கள் இனிய பழங்கள். மிருதுவான தோல்கள் இளம்பச்சை. உவர்ப்புக்கும் துவர்ப்புக்கும் இடையேயான இனிப்பு. ஷ்பரிசங்கலாளான ஆன பொன்மஞ்சள் சுளை. நினைவுகளில் மழை கிளப்பும் மணம். மீண்டும் பறிக்க ஏலா அக்காலப்பழங்களை விளைவிக்கிறது பாலை மணற்துகள். வெம்பிக்காய்கிறது பரிதிக்கிரணம்.
நண்ப
நிறைமாத நாட்கள்.
குடம் உடைய பனி இரவாகிறது.
நினைவு வெயிலாகிறது.

15 August, 2010

புனலூரும் வன தேவதை

நுதல் மறைத்த குழல் ஒலிக்கும் மணம் அக்கணம் விரியும் அளம் அரித்த விழிக்குளம் வளம் குறையா காயநிலம் நெகிழும் மனம் குழைவிதழ் பூக்கும் நிறம் கீழ்வானின் குணம் ஒற்றை மூச்சு பாலை வெப்பம் கந்தகமடங்கும் உமிழ்நீர்கடல் வெளியேறி விசும்பில் துடிக்கும் உயிர் தெறித்து விழும் திசையற்ற சேலுடலம் விளித்து நிலைக்கும் அகண்ட கருவிழிப் படலம் கொல்வன்மம் கொண்டலையும் நீள்விரல் நகநரிகள் சொல்விசம்பரித்த திண்பல்வரிசை கிழித்தெறியும் கங்குபொறி வேட்கை நன்குசொல் நன்குசொல்லென நாபி துப்பும் ஒலிக்குழப்பம் தீராது தீராது தீராதுயிர் தாகம் புனலூரும் வனமுன் முன் நிலம் வீழும் தொழும்.

13 August, 2010

மாறுதிசை

இதை ஜெகனின் தளத்திலிருந்து பார்த்த பிறகுதான் எழுதுகிறேன். கீழே எழுதப்பட்டிருக்கும் கதையின் கரு முன்பதிவுகளில் வந்திருந்தால் வருந்துகிறேன்.
**************************


ஓடு பாதையிலிருந்து பறக்கும் பாதைக்கு நிலை கொள்ள அவ்விமானம் எண்பத்தேழு விநாடிகளை எடுத்துக்கொண்டது. பணிப்பெண்ணின் குரலில் தங்களது இருக்கை கச்சைகளை தளர்த்தினார்கள் பயணிகள். வணிகவகுப்பில் ஹால் கிளமென்ட் தனது கைபேசியை எடுத்து எண்களை அழுத்தினான். எதிர்முனையில் தமிழ்வாணன் பதில் சொன்னான்.


"நாளை இரவு ஏழு இருபதுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.. ஹால்.. நான் உன்னை மணக்க அது தகுந்த நேரம்தான் இல்லையா.. வா இனிய பையா.. நமது எதிர்காலம் சென்னையின் கடற்கரையில் தொடங்கட்டும். என்ன தேனினிய அன்பே. இனிவரும் நாட்களில் உனக்கு தூங்க நேரமிருக்காது.. நன்றாக உறங்கிக்கொண்டு வா.. என்ன .. ஹா ... ஹா .. நாளை இரவு நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நாம் இல்லை என்றால் இன்னும் இருநூற்று நாற்பத்து ஆறு வருடங்களுக்கு நம்மால் திருமணம் செய்து கொள்ள முடியாது.. உனக்குத்தான் தெரியுமே எனக்கு ஜென்மங்களின் மேல் நம்பிக்கை இல்லை என.."

விமானம் வடஅமெரிக்காவின் மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை எட்டு ஐம்பதுக்கு புறப்பட்டிருந்தது. 9219 நாட்டிகல் மைல்கள் கடந்து அது மறுநாள் காலை ஆறு ஐம்பதுக்கு சென்னை சர்வதேச முனையத்தில் தரை இறங்கும். 23 மணி நேர இடைநில்லாப்பயணம். ஹாலும் தமிழும் மூன்று வருட காதலர்கள். திருமணம் செய்ய முடிவு செய்ததும் ஹால் புளங்காகிதம் அடைந்து விட்டிருந்தான். ஒரு பாரம்பரிய திருமண முறையை அவர்கள் மேற்கொள்ள சென்னைக்கு வர முடிவு செய்து தமிழ் ஒரு மாதத்திற்கு முன்னமே சென்னை வந்து ஏற்பாடுகளை செய்யத்தொடங்கியிருந்தான். ஷாம்பைனின் இரண்டு பெரிசுகளை குடித்து விட்டு தூங்கத்தொடங்கினான் ஹால். நேரம் காலை ஒன்பது முப்பத்து ஐந்து.

அந்த நொடிக்கு சரியாய் 36 நேரங்களுக்கு முன்னாள்:

பூமியின் தேதி 19.09.2035.

பால்வீதியின் விளிம்பில் ஒரு சிறு வெடிப்பு நிகழ்ந்து இருபத்து ஏழு மைல் நீளமும், நாலு மைல் அகலமுமாய் கடும் அழுத்த அழுக்கு பாறை ஒன்று ஒன்றுமில்லாததிலிருந்து ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் விடுபட்டது. தொடர்ந்து அதன் வேகம் அதிகரித்தது. நாநோவினாடிகளில் அது ஒளியின் பதின்ம மடங்குகளை தொட்டுத் தொடர்ந்தது. அதன் இருப்பு துலக்கம் (transparant). பூமி இருப்பின் சொல்லவொண்ணா தற்செயல் போலவே வேறு எதிலும் இடித்துக்கொள்ளாமல் அது நேரடியாக வளிமண்டலத்தின் விளிம்பிலிருந்து பூமிக்கும் மேலே நிலவின் சுற்றுப்பாதையில் தாண்டி 666 மைல் தொலைவிலான ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருந்தது. பூமியினை அப்பாதையில் அந்த பாறை கடந்து சென்ற போது பூமியில் தேதி 22.09.2035. காலை ஆறு பதினைந்து. அந்த பாறையின் வேகம் மணிக்கு 786 ஒளி ஆண்டுகள்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஹால் ஒரு கடுமையான உலுப்பலில் கண்விழித்தான் ஹால். விமானமே எதோ குழப்பத்தில் இருந்தது. என்ன நடந்தது என யாருக்கும் புரியவில்லை. நான்கு நிமிடங்கள் கழித்து விமானி தனது ஒலிபெருக்கியில் சொன்னார்: பயணிகளே.. நிலைமை என்னவென்று விளங்கவில்லை.. நான் இப்போது கீழே பார்ப்பது மெம்பிஷின் சர்வதேச விமான தளத்தை... அங்கு தரையிறக்க கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ள முயல்கிறேன்.. ம்ம் .. நான் நினைக்கிறேன் .. நாம் ஒரு நாளை தொலைத்து விட்டோமென்று.."

***********************

அடிக்க வராதீர்கள் சாமிகளா...

**********************

12 August, 2010

ரசமிழக்கும் கண்ணாடி 3


some flashes:

ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவும் வந்தது நிலவும் வந்தது... அன்புள்ள மான்விழியே - பாடலில் ஜமுனாவின் கண்களில் மிளிரும் நூறு சத காதலை தொலைக்காட்டினார்கள். புல்லரித்துப்போய் நின்றேன். எடிசன் பல்பு எரிவதை பார்த்தவுடன் எப்படி ஆச்சர்யத்தில் பார்த்திருப்பானோ அந்தமாதிரி!
*************
வெவ்வேறு சந்தர்பங்களில் சமீபத்தில் மூன்று ஹாலிவுட் படங்களைப் பார்த்தேன். மனதிற்கு இனியவர்களான ஏஞ்சலீனா ஜோலி யும் கேமரூன் டயஸ் உம் தங்களது முகங்களை வயோதிகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். வருத்தமாய் இருக்கிறது. day and knight, salt, the last air bender ஆகிய மூன்று படங்கள். முதல் படத்தில் டாம் க்ரூஸ் டயஸ் இணைகள். இரண்டு படங்களும் அமெரிக்காவின் பிரபல ஏஜென்சிகளைப் பற்றியவை. தங்களது ஆட்களுக்குள் ஏற்படும் ஈகோ அல்லது ரசிய/ரகசிய உளவுகளின் செயல்பாட்டு முறிப்பு என்பது போன்ற மிக மிக ஆதி காலத்து கொடுமைகள். ஆனால் தொழிநுட்பம் பிரமிக்க வைக்கிறது. ஆக்ஸன் பிரியர்களுக்கு கொண்டாட்டமான படங்கள். மூன்றாவது ஷ்யாமளனின் படம். ஐந்து பூதங்களும் மிக உயர்வகை தொழில்நுட்பத்தில் சண்டையிட வைத்திருக்கிறார். தீ அனைத்தையும் அடக்கி ஆள நினைக்கிறது. படத்தின் கடைசி பிரேமில் தோன்றும் ஒரு பதின்மச்சிறுமியின் முக பாவம் கொடுத்த காசுக்கு போதுமானதாக இருந்தது. இதில் சொல்லாமல் விட்ட மற்றொரு படம் deception. ரூம் போட்டு யோசிப்பது என்றால் என்னவென்று தெரியவேண்டுமென்றால் இந்த படத்தை பரிந்துரைக்கிறேன்.
**********
நண்பன் ஸ்ரீதர் தனது சகாக்களான ஏறக்குறைய முன்னூறு உதவி இயக்குனர்கர்களை ஒன்று சேர்த்து ஒரு திரைப்பட நிறுவனத்தை சாப்ளின் என்கிற பெயரில் தொடங்கி உயர் தொழில்நுட்ப வல்லுனர்களால் தங்களது முதல் படத்தை தயாரிக்கப்போவதாக சொன்னான். நல்ல மற்றும் உருப்படியான முயற்சி. பிரபல வல்லுனர்கள் தங்களது இலவச சேவையை முதல் படத்திற்கு அளிக்க முன்வந்துள்ளது அவர்களுக்கு பெருமை. வாழ்த்தும் நன்றியும்.
****************
திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு பயங்கரத்தை உணர்ந்தேன். ஒருமணிநேரத்தில் நான் கண்ட எந்தவொரு தனியான பெண்ணும் சும்மா உட்காரவில்லை. எல்லோரும் செல் போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய நான் எண்ணியது மட்டும் அறுபத்திமூன்று பேர்கள். இணையுடனோ உறவினர்களுடனோ வந்த பெண்களும் முக்கியமாக பதின்ம வயது பெண்கள் போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆக மக்களே இனிய ஆண் மக்களே எந்த பெண்ணையும் நீங்கள் தனிமையில் விட்டு வைக்கவில்லை என்பதை நினைக்கும் போது பெருமையாய் இருக்கிறது என்று சொல்ல ஆசைதான். ஆனால் நான் பார்த்த ஆண்களில் மூன்றே பேரைத்தவிர யாரும் செல்லில் பேசிக்கொண்டிருக்கவில்லை. ஆக ... இனிய பெண்களே அப்படி யாருடன்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.! இனி cellphone அடுத்த தலைமுறையினரின் ஜீனில் இருக்கும். பிறக்கும்போதே மினியேச்சர் டவரை காதுக்கு பின்னே துளைபோட்டு செருகிவிடுவார்கள் போல. சில பையன்கள் பத்து சிம் கார்டுகளை வைத்திருப்பதை பார்க்கும் பொது கொஞ்சம் உதறலெடுக்கிறது. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிற போது ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவது இந்த காலகட்டத்தின் திணிக்கப்பட்ட பொதுவிதி. அதே சூத்திரம் இந்த ஆண் பெண் இணைதேடும் நிகழ்வுப்போக்கிலும் இருக்கிறது. அதற்கென பெருமளவு உபயோகமாய் இருப்பது தகவல் தொடர்புகளுக்கான விஞ்ஞான தொழில் நுட்பங்கள்.
***************
திருவரங்கம் சென்றேன். காவிரி குளியல். சிற்றுண்டி உண்பதற்கு தேடிச்சென்ற கடை பெயர் "பில்டர் காப்பிகடை ". அருமையான நெய் கேசரி மற்றும் கீரை வடையுடன் ரகளையான காப்பி. குளித்த களிப்பில் மற்றும் களைப்பில் உண்டி தேவாமிருதமாய் இருந்தது.
***************

07 August, 2010

சொல்லுவதெல்லாம் பொய் 12

மூன்று நாளில் காடு தனது புதிர்களின் வாசல்களை காட்டத்தொடங்கிற்று. மரவல்லிக்கு வயிறு பழகிவிட்டது. சுனைநீரின் குளிர்ச்சி உடம்பிலொரு உறுதியை பரவச்செய்திருப்பதாக தோன்றியதை மார்கழரிடம் சொன்னபோது தனது பூடகச்சிரிப்பை வெளிப்படுத்தி நல்லது என்றார். மூன்றாம் பிறைவானம். தெளிவான இருளில் வெளிச்சக்கோடு நிலா. குளிர். பெருவாகையின் மீது அமர்திருந்தோம். இரவு. இல்லாத வானத்தில் கொட்டிக்கிடக்கிற மீன்கள். வெளிச்சப்புள்ளிச் சிதறல்கள்.

சென்னா .. கேள்.. மீன்கள் நமக்கு அதிகம் உபயோகம் இல்லை. அவை திசை காட்டும் கருவிகள். அவ்வளவே. நம் உயிருடன் பேசுபவை கிரகங்கள். அவைகளின் சுழற்சியை துல்லியமாக பார்ப்பவன் காலத்தை ஆள்பவன். நிலை மாறாத நிலையில் அவை சூட்சுமமாக இயங்குகின்றன. அவற்றை தொலைதூர சக்தியில் ஆட்டுவிப்பவை மீன்கள். கூர்ந்து பார். எது தெரிந்தாலும் அது விசும்பின் மொழி. கனவுகளில் நிலைக் கொள்ளும் விநோதங்களின் விடைசொல்லிகள் மீன்கள். கனவுகள் மீன்கள் மற்றும் கிரஹங்களின் கலவையில் காலத்தை கணித்தல் வித்தை. அது வெறும் பார்வையில் கைகூடாது. பார்வையில் குரோதமும் வலிமையையும் கொண்டு தூரங்களைக் கணக்கிடல் என்பதே சூத்திரம். கிரஹங்களின் ஆலகாலம் பூமி. நீலம் பாரித்த இவ்விசத்தில் முகிழ்த்தது உயிர் எனும் இயக்கம். உயிர் கொடுக்கும் உயிர் எடுக்கும் விசைச்சுழிகளின் அனுபந்தம். நிகழ்கிற போதே நிகழாமல் போகிற நிகழாமல் போகப்போகிற நிகழ்ந்து போன நிகழப்போகிற அனைத்தையும் கருக்கொள்ளும் மகா கர்ப்பக்கிரகம் பூமி. நாம் அதன் சுட்டு விரல்கள். பூமி எதை நினைக்கிறதோ அதை நாம் ... மனிதர்களாகிய நாம் சுட்டுகிறோம். மிக எளிய சுலபமான நிகழ்வு நம் இருப்பு. எப்பொழுதும் ஒரு குறிக்கோலுக்கானது. அதற்கு அதாவது தனது குறிக்கோளை செய்யும் பூமியின் எதிர்பதத்தை அறிய முனைவது சாஸ்த்திரம். பூமிக்கு எதிராக எனவே மனிதர்களுக்கு எதிரானதாக முன்னிறுத்தபடுவது சாஸ்த்திரம். சாஷ்திரத்தை உருவப்படுத்தியது மனிதகுலம். அதன் அழிவுக்கு தன்னை தானே தயாரித்துக் கொள்வது என்பது இயக்கத்தின் விதி. இல்லாத காலத்தை கணிதத்தில் அடக்கியது அதன் முதல் படி. குலம் அழிய அதன் மூலம் பூமி அழிய இறுதியில் கிரகங்கள் அழிய விசத்தாலான இப்பூமியின் விரல்கள் கண்டடைந்தது காலக்கணிதம்.

அடர்ந்த வாகையின் கிளையில் அமர்திருந்த சென்னா இவற்றை கேட்டான். ஆனால் எதுவும் விளங்கவில்லை. அதை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை. பகலின் தூக்கம் இரவில் தூக்கத்தை இல்லாமல் பண்ணியது. தூரத்தில் ஒரு உறுமல் கேட்டது. அரவக்குரல். அது ஒரு சிம்மத்தில் கசடு. இரை முடித்த சுக முனங்கள். வேறெங்கோ ஒரு யானையின் பிளிறல். கானகத்தின் உயிர்மொழிகள் இவை. இவற்றைப்பற்றி கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கேட்காத ஒலியைக் கேள் என்றார். சென்னா கோபமடைந்தான். ஏன் இந்த கோபம். ஆனால் இவற்றை கேட்காமலும் இருக்க முடியவில்லை. மோப்பமும் கேள்வியும்தான் கானக குறிகள். அவற்றிடம்தான் காடு தன்னை வெளிப்படித்தும். பார்வை வெளிச்சத்தால் ஆனது. வெளிச்சம் காட்டின் எதிரி. அதே போல புதிய சப்தமும். வெளிச்சத்தைவிட புதிய ஒலிக்கு காடு பயங்கொள்ளும். தன்னை மறைத்துக்கொள்ளும். புது ஒளியை ஒலியை வெளிப்படுத்தாத எதனிடமும் காடு பேசும். ஆனால் வானம் வேறு. ஒளியும் தூரமும் அதன் கண்ணும் செவியும். வானமும் வனமும் ஒன்றில் இணைக்கலாம். சென்னா .. மகா விந்தையது.. அவையிரண்டும் உறவுகொள்ளும் புள்ளி காலம். காலம் என்ற ஒன்று இல்லை. அதை கணிதத்தில் அடக்கியவன் மனிதன். இப்பொழுது அனைத்தும் காலத்துள் அடக்கம். என்ன விந்தை பார்.. காலம் உட்பட எல்லாம் காலத்துக்குள் அடக்கம். இங்கு பூமி என்பது பிரபஞ்ச விஷம். நீலம் அதன் வண்ணம்..

சென்னாவிற்கு இவையெல்லாம் கடும் எதிர்மறையாகப் பட்டது. பூமி விஷமாம். ஆனால் ஏனோ அவனது மனம் மட்டும் மார்கழரை எதிர்க்கும் எண்ணம் வரவில்லை. மேலும் அவர் சொல்வதில் ஒருவகை பூடக விருப்பம் இருந்தது. இவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கக்கூடாதா என்று ஆவல் எழுந்தது. பூமி நீலம். விஷம் அதன் தன்மை என்று அவர் சொல்வது எதோ ஒரு உண்மையின் பக்கம் நிற்பதாக அவனுக்குப் பட்டது. வானம் தானே நீலம். பூமி நீலமென யார் சொல்வது.. என்று கேட்டான். மார்கழர் அவனைப்பார்த்து சிரித்தார். நல்லது சென்னா.. உன் கேள்வி நல்லது. இதற்கு நான் என்னளவில் பதில் கூறும் முன் நீ சொல் சென்னா எது நிலத்தின் நிறம். சென்னா யோசித்தான். உண்மையில் அவனுக்கு தெரியாமல் போனது. ஒரு வகை மரத்தின் நிறம் என்றான். சட்டென்று மார்கழர் எழுந்து அமர்ந்தார். அவன் கண்களை உற்று நோக்கினார். இருள் கோடில் அவர் பார்வை அவனை ஊடுருவுவது தோலின் மீது ஊரும் அரவத்தை ஒத்ததைப் போல இருந்ததை உணர்ந்தான். தண்டு குளிர்ந்து. நீ தெர்தேடுக்கப்பட்டவன் என்பதை நான் மறந்துவிட்டேன். நல்லது. நீ சரியாகச்சொன்னாய். மர நிறம். மரத்திற்கு தனியாக நிலமிருக்கிறதா என்றார். அவன் விழித்தான். சிரித்தவர்.. பூமி தன்னை மறைத்திருக்கிறது சென்னா .. அழிவின் நிறத்திலிருந்து தனை விருப்பத்தின் நிறத்திற்கு ... நீலத்திற்கு. நீலம் விருப்பத்தின் நிறம். சற்று தூங்கு. உறக்கம் உனக்கு ஏதேனும் பதில் சொல்லும்.

*********


துரிதமொன்றும் இல்லை சாலை கிடக்கிறது தனியே. மிகத்தனிச்சாலையில் ஏன் உனக்கு துரிதம். நிதானமாய் வா. திசையற்ற சாலையது. ஒரு குழப்பமும் இல்லை. ஏதாவது தெரிகிறதா பார் அந்த மரத்தைத் தவிர. எதைக்கொண்டும் அளப்பதற்கு முயற்சிக்காதே. ஒரு வட்டத்தை சதுரத்தைக் கொண்டோ அல்லது ஒரு செவ்வகத்தை ஒரு சமபக்க முக்கோணம் கொண்டோ. நிலையாய் இருப்பதில் தவறு இல்லை என்பதுபோலவே எனை நோக்கி வருவதும் தவறில்லை. எல்லாவற்றிற்கும் ஒற்றை புள்ளிதான் ஆதாரமெனுபோது கோடுகள் வளைந்தால் என்ன. கோடுகள்தான் உருவத்தை அளிக்கிறதெனும்போது அமைப்புகள் பற்றிய கவலைஎதற்கு. காட்சிக்கு வெளிச்சம் ஆதாரமெனும்போது இருள் பற்றிய அறிவே நான். நிழல் பற்றிய பாடம் தேவையென ஒரு கரும் பறவை தேடி புறப்படுகிற கிளை கொண்ட மரம்தான் அங்கு நீ காண்பது. வெறுமை நிறைந்த சாலையின் ஒற்றை மரமது. காலமற்ற நீட்சியின் ஆலம். பிளிர்வேழம் கொண்ட மதமதுவுண்ட போதம் உனக்கு. சாயம் வெளுத்த புதைமணலின் பள்ளத்தாக்கு கொண்ட வெளியில் கடக்கும் ஒற்றை தனிமைச்சாலை. பறந்து போன பறவையும் நின்றிருக்கும் ஒற்றை மரமும் உனக்கு ஆயுதங்கள். நான் நிராயுதபாணி எப்பொழுதும் போல். வானம் எனது களம். அதுவே எனது ஆயுதம்... பறவை இருளில் கருமை வெளிச்சத்தில் நீலம். மரம் ஒற்றை நிறம் ... ஆயுதமேந்து விருப்பமெனும் நீலத்தை இடது பக்கத்திலும் அழிவெனும் மரநிழலை வலது பக்கத்திலும்...

********************

சென்னா ..... விழியடா.. உன் பொழுது விடிந்துவிட்டது பரிதி நிறத்தில்.

**********************

தொடரும்..

01 August, 2010

சொல்


படிக்கிற கவிதை வாழ்நாளுக்கும் போதுமாக இருக்கிறபோது மீதமுள்ள காலத்தை தலைமீது பொதிஏற்றுகிற வாழ்வை சபிக்க நடைமேடையில் அனாதையாக்கப்பட்ட சிறுமியின் அழுகைக்குப் பரிசளிக்கிறேன். இனிப்பொன்றிற்கும் சிறிய நேர நீட்சிக்கும் சிரிக்க மறுத்தவள் தாயைக் கண்டதும் என் உயிரை சிரிப்பாக்கி தருகிறாள் அவளிடம். உதிர்ந்த உயிர் தண்டவாளத்தில் படிய மெல்லிய கரி நாற்றத்தோடு தேநீர் கடை நுழைகிறேன் கவிதை சுமந்த வௌவால் போல தொங்கும் புத்ததகங்கள் அடைகாக்கும் கடை விட்டு. தேநீர் மணத்துடன் கரைந்து உரமேற்றுகிறது தாயின் நன்றியறிவித்த சொல்.


************


ரசமிழக்கும் கண்ணாடி 2

ஒரு அருமையான நட்பு தினம் பற்றிய பதிவை போட்டிருக்கும் க சீ சிவக்குமாருக்கு இனிய நட்பு வணக்கமுங்க. எழுத்து நடை பொறாமை கொள்ள வைக்கிறது சிவா.

இனிய நண்பர்கள் அனந்தராமகிருஷ்ணன் என்கிற ரமேஷ் மற்றும் அன்புவிடமிருந்து குறுவாழ்த்துக்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றிகள். அப்புறம் ஒரு ஹைராபாத் பிரியாணியிடமிருந்தும் வாழ்த்து வந்தது. பிரியாணிக்கு நன்றி! மற்றபடிக்கு இந்நாளைய பற்றிய எண்ணம் எனக்கும் சிவாவிற்கும் ஒன்றே.

நிற்க..

மயிலாடுதுறைக்கு இரவு பதினோரு மணியில் இறங்கி விடிவதற்குள் நாலு மணிக்கே திரும்ப நேர்ந்ததால் பதினோரு மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து ரயில்நிலையத்திற்கு தனது இருசக்கரவாகனத்தில் இறக்கிவிட்ட யாரென்று தெரியாத அந்த இளைஞன் மற்றும் அந்த நேரத்தில் என்னை மூன்றரை கிலோமீட்டர்கள் தூரம் வாகனத்தில் இறக்கிவிட்டு தனது வீட்டுக்கு செல்லும் அளவிற்கான மனநிலையை அவனுக்கு அளித்த அவனது கைபேசியின் மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த அந்த முகமறியாத யுவதிக்கும் நன்றிகள். மாயவரம்தான் மயிலாடுதுறை என்கிற பயங்கரமான வரலாற்றுத்தெளிவுடன் அங்கு நான் பார்க்க விரும்பிய திருமணஞ்சேரியை பார்காமல் திருச்சி வந்திருக்கிறேன். பார்க்கலாம்.

காலையும் நீயே .. மாலையும் நீயே என்கிற பாடலை கேட்காத இன்றைய மத்தியவயதுக்காரர்கள் இருக்கிறார்களா என்ன. அந்த பாடலின் குரலுக்கு சொந்தக்காரர் ஜிக்கியின் கணவரும் இசையமைப்பாளருமான a.m. ராஜா அவர்கள் . இனிமையும் ஆண்மையும் குழைத்த குரல். தேனிலவின் பாடல்களை கேட்டுப்பாருங்கள். ஸ்ரீனிவாசையும் ராஜாவையும் பிரித்து அறிய முடியாத மூடனாக இருந்திருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல எனது மூடத்தனத்தை அகற்றுவதற்கு உதவியதில் ரமேஷ் வைத்தியாவுக்கு நிறைய பங்கு உண்டு. இன்று பகலில் ரமேஷிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தேன். முழுக்க முழுக்க ராஜா பற்றியும் அவரது குரல் பற்றியும் அவரது ஒரிஜினல் இசையறிவு பற்றியும் நிறைய சொன்னார். இன்று ராஜாவின் நினைவு தினம். இரவு படுக்கும் முன் காலையும் நீயேவை தனிமையில் கேட்க முயலுங்கள். எல் ஆர் ஈஸ்வரி மற்றும் எம் ஆர் விஜயா ஆகியோரின் குரல் பற்றிய தனிப்பட்ட வைத்தியாவின் கமெண்டை இன்னொரு நாள் சொல்கிறேன். அறிவராசனம் சுவாமி.. என்று தொடங்கும் சமஷ்கிருதப் பாடலை கேட்டிருக்கிறோம். இந்த பாடலை எழுதியது கண்ணதாசன் என்பது சரியா தவறா. அறிந்தவர்கள் சொல்லி உதவுங்கள். இந்த பாடலின் மெட்டில் வைத்தியா எழுதிய பாடலின் முதல் வரியோடு இன்றைக்கு முடிக்கிறேன்.. கஷ்ட ஜீவியம் சுவாமி நஷ்ட ஜாதகம்.. !

************