18 February, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் 1


ஒரு மொழிபெயர்ப்பு - கத்தியை நட்டுவைத்து அதன் மேல் உட்காரப்போகிறேன். என்ன நடக்குமென்று தெரியவில்லை. பார்க்கலாம்.
(Xiaolu Guo's Novel: Twenty Fragments of a Ravenous Youth) *********************************************************************************

பசித்த இளமையின் இருபது சுளைகள்


சுளை ஒன்று.
பென்பாங் - ன் குணஇயல்புகள், துண்டுக் காகிதத்தில் பதியபட்டவாறு..


இருபத்தியொரு வயதில் தொடங்கியது என் இளமை. குறைந்தது அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என முடிவுசெய்தேன். அந்த காலத்தில்தான் வாழ்கையின் பிரகாசமான விசயங்களில் சில எனக்கானதாக இருந்திருக்கக் கூடும். இளமை தொடங்குவதற்கு இருபத்தியொரு வயது என்பது சற்று தாமதம் என்று நினைப்பீர்களானால், யோசித்துப்பாருங்கள்.. குழந்தைப் பருவத்திலிருந்து நேரடியாக மத்தியப் பருவத்திற்கு தாவிய ஒரு சராசரி சீன விவசாயப் பெண்ணை. எதை நான் தவறவிட்டிருக்கக் கூடும் எனது தொடக்க வயதுகளைத் தவிர. நான் திட்டமிட்டிருந்தேன்: இளமையுடன் இரு இல்லாவிட்டால் இற.
நான் அறியாமைவாய்ந்த நாட்டுபுற பெண்ணாயிருந்தேன். நிலத்தில் சீனிக்கிழங்குகளை தோண்டுவது அல்லது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது அல்லது தொழிற்கூடங்களில் லீவர்களை இழுப்பது போன்ற வேலைகள் தவிர வேறொன்றும் தெரியாது . இருபத்தியொரு வயதில் நான் பூர்த்தி செய்த ஒரு விண்ணப்ப படிவம் என் வாழ்கையை மாற்றியது. இருக்கட்டும் அப்போது நான் பீஜிங் கிற்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தன.. ஆனாலும் இன்னும் நான் விவசாயப் பெண்ணாகவே இருந்தேன்.
ஒரு வெப்பம் மிகுந்த மதியப் பொழுதில் 'பீஜிங் பிலிம் ஸ்டுடியோ' வேலைவாய்ப்பு வளாகத்தில் அந்த முக்கியமான நிலைமாற்றம் நடந்தது. வளாகத்தின் சுவர்களில் இன்னும் அழுக்கு படிந்த நிலையில் "மக்களுக்கு சேவை செய்யுங்கள்" என்கிற மாவோவின் வாசகங்கள் தெரிந்தன. உணவுப் பாத்திரத்தினருகில் சிதறிய நூடுல்ஸ் மீதங்கள் மீது பச்சைத் தலை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதற்கு பின்னால் ஒரு நாற்காலியில் ஒருவன் ஒரு மந்த தூக்கத்தில் அமர்ந்து இருந்தான். அவன் உதிரி நடிகர்களின் மேற்பார்வையாலனாக இருக்கவேண்டும். அந்த நிலை அவனை மிகவும் பாதிப்புற செய்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையாக தெரிந்தது. எங்கள் மீது அவனுக்கு எந்த கவனமும் இல்லை. அங்கு நாங்களும் ஈக்கள் போலவே இருந்தோம்.
என்னைத்தவிர அங்கு மூன்று பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தால் பதற்றப் படுபவர்கள் போலில்லை. சாயம்பூசிய கூந்தல், பச்சை குத்தப்பட்ட தோள்கள், போலி தோல்பைகள், துளையிடப்பட்ட ஜீன்ஸ்சுகள் போன்று அவர்களிடம் இன்னும் நிறைய இருந்தாலும் உள்ளில் அவர்கள் என்போலவே மரநிற சருமம் கொண்ட, மஞ்சள் புழுதி படிந்த மாகாணத்திலிருந்து வந்த விவசாயப்பெண்களே.

மேசையிலிருந்து பேனாவை எடுத்தேன். ஹீரோ பேனா. பழைய கம்யூனிய வாதிகள் இன்னும் இந்த ஹீரோ பேனாவைத்தான் உபயோகிக்கிறார்கள். பயன்பாடுகள் ஏதுமற்ற அவர்களை நான் ஒரு போதும் விரும்பியது இல்லை. நான் எழுதத்தொடங்கியதும் பேனாவிலிருந்து மை கசிந்து எனது உள்ளங்கையையும் விண்ணப்ப படிவத்தையும் கரையாகியது. கரை படிந்த உள்ளங்கை உள்ளங்கை வீட்டிற்கு தீவைக்கும் என்று எனது அம்மா சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நான் கரை படிந்த உள்ளங்கைக்கும் எனது வரப்போகிற துரதிஷ்டத்துக்கும் சேர்த்து வருத்தப்பட்டேன்.

அந்த அலுவலக வளாகம் முழுவதும் விண்ணப்ப படிவங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தரையிலிருந்து கூரை வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தூசுகள் பால்வீதியில் அலைவது போல வளாகத்தில் மிதந்தலைந்து கொண்டிருந்தது. விண்ணப்பத்தின் வலது மேல் முனையில் எனது புகைப்படத்தை ஓட்டினேன்.

*************************************************************************************

பீஜிங் பிலிம் ஸ்டுடியோ - உதிரிகள் சேர்க்கை படிவம்



  1. பெயர் - பென்பாங் வாங்

  2. பாலினம் - பெண் பால்

  3. பிறந்த தேதி - 1980

  4. பறந்த இடம் - இஞ்சி மலை கிராமம், மஞ்சள் பாறை தாலுகா, சிஜாங் மாகாணம்

  5. பெற்றோர் சமூக நிலை - உழவு, கம்யூனிசம் அல்லாதவர்.

  6. படிப்பு - நடுநிலை படிப்பு பட்டம்.

  7. உயரம் - 168 Cm

  8. மார்பு சுற்றளவு - 85 Cm

  9. மேலுடை சுற்றளவு - 69Cm

  10. கீழிடை சுற்றளவு - 90 Cm

  11. குருதிப் பிரிவு - ஆ

  12. ராசி - குரங்கு

  13. நட்சத்திரம் - தேள்

  14. ஆளுமை - வளைந்து போகும் தன்மையில் வெளிநிலையிலும் உள்நிலையிலும் பணி புரிதல், வெளிப்படையாகவோ அல்லது கூச்ச சுபாவத்துடனோ.
  15. தொடர்பான அனுபவங்கள் - 'தின மக்கள்' விடுதியில் துப்புரவாளர், தொழிற்கூட பணி, யங் பயனீர் திரையரங்கத்தில் இருக்கைகள் பரிசோதிக்கும் பணி.
  16. தனி திறமை - தட்டச்சு இரண்டாம் நிலை ஆங்கிலம், தொழிற்கூடங்களில் தகர டப்பாக்களை தயாரிப்பது (நாற்பத்தியைந்து வினாடிகளில் ஐந்து டப்பாக்கள்)
  17. அளவீடுகள் - ஏதுமில்லை.
  18. பொழுதுபோக்கு - சினிமா பார்ப்பது, முக்கியமாக அமெரிக்க ஆங்கில படங்கள், மேற்கிலிருந்து மொழிபெயர்க்கப் படும் நாவல்களைப் படிப்பது.

*************************************************************************************

புகைப்படத்தை ஒட்டிய போது மந்தமாக தூங்கிக்கொண்டிருந்த நாற்காலிக்காரன் எழுந்தவுடன் நேராக சென்று ஒரு மின்சார ஈ ஓட்டியை எடுத்து வந்து தனது உணவு டப்பாவினருகில் ரீங்கரித்துக்கொண்டிருந்த ஈக்களை பார்த்து வீசினான். பாம்.. முதல் வீசில் ஒரு ஈ. பாம்.. ரெண்டாவது வீசில் ஒரு ஈ. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்த மூன்று பெண்களும் அந்த திடீர் வன்முறையை பயந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் மறுபடியும் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவன் முன்னாள் இருந்த மேசையில் இரண்டு இறந்த உடல்கள் கிடந்தன.

நான் விண்ணப்ப பணம் பதினைந்து யுவானை கொடுத்தேன். தொடர்ந்து என்னை கவனிக்காமல் அவன் அந்த படிவத்தை வாங்கிக்கொண்டு இடுப்பில் கட்டியிருந்த வாரில் இருந்த சாவிக்கொத்தை எடுத்து முன்னாள் குனிந்து அந்த பழைய மேசை இழுவையை திறந்தான். உள்ளே இருந்து ரப்பர் ஸ்டாம்ப்பை எடுத்து சில எண்களைத் திருத்தி எனது படிவத்தில் குத்தினான். உதிரி 6787 . ஆக நான் பீஜிங்கின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையில் வேலை வேண்டுவோரில் ஆறாயிரத்து எழுநூத்து எம்பத்து ஏழாவது ஆளாய் இருந்தேன். எனக்கு முன்னால் இளமை-அழகுமாய் அல்லது முதிய - அசிங்கமானதுமாய் 6786 பேர்கள் இருந்தார்கள். நினைத்துப்பார்த்தேன், சீன மக்கள் தொகையில் (ஒன்றரை பில்லியன்) இந்த எண்ணிக்கை ஒன்றும் பெரிதில்லைதான்.. எனது கிராமத்து மக்கள் தொகை அளவுதான்.. இந்த கிராமத்தை ஆளும் ஒரு பேரவா எனக்குள் எழுந்தது.

இன்னும் என்னை நேராய் பார்க்காமல் மைக்கரை படிந்த படிவத்தில் எனது புகைப்படத்தை பார்த்த ஈயோட்டி சொன்னான் ;

"பாதகமில்லை சிறுபெண்ணே..உனது முகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிட்டுப்பார்க்க உனது நெற்றி சற்று வித்தியாசமாய் இருக்கிறது.. அது தியானமென் சதுக்கம் மாதிரி அகண்டு.. பிறகு உன் தாடை.. அதுவும் பரவாயில்லை.. நம்பு என்னை .. அது உனக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் .. சதுர தாடை நல்லது செய்யும்.. அதுபோலவே காத்து மடல்களும் தடிமனாக - புத்தனுக்கு இருப்பது போல - எவ்வளவு தடிமனோ அவ்வளவு அதிர்ஷ்டம்.. தெரியுமா.. ம்ம்ம் .. நீயொன்றும் அவ்வளவு அசிங்கமில்லை.. இங்கே வரும் அசிங்கமானவர்களின் எண்ணிக்கையை உன்னால் கற்பனை கூட செய்ய முடியாது.. அவர்கள் தங்களை கண்ணாடியில் பார்ப்பார்களா என்று கூட எனக்கு தெரியவில்லை.. "

நான் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். பின்பு மற்ற மூன்று பெண்களுக்கும் வழிவிட்டு அவனிடம் நன்றி சொல்லி வெளியில் வந்து தெருவில் நடக்கத்தொடங்கினேன். மதிய நேர காட்டமான வெயில் எனது தலைமுடியை பொசுக்கத்தொடங்கியது. கடும் வெப்பம் கான்க்ரீட் நடைமேடை லிருந்து கிளம்பிப்பரவியது. வெப்பம் மிகுந்த அந்த சந்தடி நிரம்பிய தெருவில் ஏறக்குறைய மயங்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன். நிஜமாவே நான் மயங்கி விழுந்திருக்கலாம்.. நினைவில்லை. ஆனால் அன்றைய முக்கியம் எனக்கு என்னவென்றால், எனக்கென ஒரு எண் ஒதுக்கப்பட்டது. அந்த நாளிலிருந்து நான் ஒருபோதும் கரிய மண்ணுக்கடியில் மறந்து விடப்பட்ட சீனிக்கிழங்கு போல வாழமாட்டேன் என தீர்மானித்தேன்.

*******

தொடரும் ...

*********

No comments: