வேனிலில் நிகழ்ந்தது வாதை
வானம் புத்தனைப் பொழிவது போல
மண்கீறி இருஇலைநீட்டிவெளியேறும் துரோகம்
போல. ஒரு சட்டத்தில் அடைக்கப்பட்ட
மலையடிப்புணலில் மிதக்கும் ஏழாம் நிலா போல
ஒன்றுமறியா குழந்தைபோல புன்னகைக்கும் தனிமைபோல ...
வாதை உருவாக்குகிறது ஒரு சொல்லை
மென்மயிர் பெண்ணின் குழிநாபி போல. மேய்ந்துறங்கும்
குதிரையின் மடுவீச்சம் போல. தொலைந்தலையும்
கிடைக்குட்டியின் தேடல் போல. சாவின்
கருணை நிறைந்த விழியீரம் போல..
சொல்லிலிருந்து பிறக்கிறது ஏதுமற்ற
மற்றொரு சொல். அர்த்தமில்லாமல்.
சொல்.
பிறகு அர்த்தமில்லாமல் போய்விடும்போது
பறவை கூடைகிறது சில தானிய மணிகளுடன் ...
தனிமை தன்தீரா பசிக்கு யாசிக்கிறது சொல்லை
அதற்காக நிலத்தில் அது தனது பாதத்தை
இருத்துகிறது. தனது நிழலை எனக்கு
திண்ணக்குடுக்கிறது.
பசியற்றுப்போய் விடுகிற துரோகத்தை
துணைக்கழைக்கிறேன்..எக்காளத்துடன்
குதூகலித்து என்னிடத்தில் அளிக்கிறது
நீண்ட நாளாய் மறைத்து வைத்திருந்த
குறுவாளை.
நான் குறுவாளை உபயோகிக்கிறேன். பீய்ச்சி
வழிகிறது சொற்கள்.
தின்று தீர்கிறது தனிமை.
**************
No comments:
Post a Comment