ஒரு வேளை நாளை எனது பயணத்தை தொடங்கிவிடலாம். கிழக்கின் தூர நிலத்தின் கதகதப்பான அமைதி தேடி. காலைபனி கசியும் மிருதுவான நிலத்தில் சில கிழங்குகள் எனக்கு கிடைக்கலாம். ஒரு பகலின் ஏகாந்தம் புல்முனையில் வெளியேறும் காற்றின் ஒலியால் கிடைக்கலாம். வெயிலின் மஞ்சளில் எனது முகம் உருகி சில சொட்டுகள் ஆவியாகலாம். களைப்பற்ற மாலையில் கரும்பாறை சூட்டில் என் நிர்வாணம் குளிர் காயலாம்.
அல்லது
ஒரு இரவு என்னில் நுழையலாம். ஒற்றைக்கரு தானியமாய் சிறகு நீண்ட இளமஞ்சள் கழுத்து நிற பறவையின் அலகில் கவ்வப்பட்டு அதன் இருள்வயிர் சேரலாம். அதன் உதிரம் கலந்து பழுப்பு கழிவாய் அரண்மனை சுவரில் விதைபடலாம். பெருமரமாய் நீண்டு அரண்மனைகதவுகளை பிளக்கலாம். வெட்டுண்டு மரதுண்டுகளாய் மிதக்கலாம் தலைகீழாய் ஓடும் நதியொன்றில்.
அல்லது
ஒரு வேளை நாளை நானொரு பதில் சொல்ல நேரலாம். அதன் விளைவால் எனது நேரங்கள் பறிக்கப்பட்டு எனதுடல் ஒரு பெண்டுலமாய் நடமாட தொடங்கலாம். பனிமூச்செரியும் ஓநாயின் நாவுகள் எனது பாதங்களை சுவைக்கலாம். அதன் சுவை புணரப்பட்ட பிணத்திற்கு உயிர் ஊட்டலாம்.
அன்பே
அதற்குமுன் உனது சாயலை என்னிடமிருந்து எடுத்துவிடு. அது என்னை சாஸ்வதமாகுகிறது. சுயசாயலற்ற உயிரின் காலமாய் வெடிக்கசெய்கிறது. வெளியெங்கும் நிரம்பும் ஒளிதுகலாக்குகிறது. என்னையும் மற்றமையையும் ஒன்றாக்குகிறது. தாங்கவொண்ணா குதூகலத்தின் நீர்துளியாகின்றது. ஆம் அன்பே ... உன் சாயல் ...என்னை மகாவெடிப்பின் காரணியாக்குகிறது..
அன்பே
இன்று மாலை போதுமெனக்கு. ஒரு வேளை நாளை நான்.....
**********************
No comments:
Post a Comment