ஒரு அற்புதமான மனித உறவுமுறை, பண்பாட்டு கலாசார வளர்ச்சி மற்றும் பொருளாதார பரிமாற்றம் புன்னகைததும்பும் காதல் என பலவற்றையும் அரசியல் செயல்பாடுகளில் சிதிலமடைய செய்வதற்கான பொறியை கேரளா அ-வாதிகள் உருவாக்கி விட்டார்கள். அறியாமை கொண்ட ஆட்டு மந்தைகள் போல ஊர்கூடி போருக்கு அழைக்கிறார்கள் இரு மாநில மக்களும். ஆரம்பத்தில் தன்னெழுச்சியான போராட்டம் இப்பொழுது சுய அடையாளத்தை நிறுவும் குழு நிகழ்வாக மாறத் தொடங்கியிருக்கிறது. கட்சி பேனர் தவிர்த்து அனைத்து மத ஜாதி தொழிற் சங்கங்களின் போஸ்டர்களை அடித்து பிரஸ் வியாபாரம் கடுமையாய் கொழித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மைக்கு 'உன்மை' என்றும் இறைவனின் பெயரால் இடுக்கியை மீட்போம் என்றும் வந்த போஸ்டர்கள் இன்றைய சுவாரஷ்யம்.
இப்படி ஒரு கலவையான மனித அனுபவத்தை நான் எங்கும் அனுபவித்ததில்லை. அது எனக்கு கடந்த 6 நாட்களாக கூடலூரில் வாய்த்தது. எத்தனை விதமான மனிதர்கள் ! அவர்களது பேச்சுக்கள் ! அசந்துபோனேன்.
எழுபதுகளில் முல்லைப்பெரியார் அணையில் கொத்தனாராக பணி செய்த ராமர் போயன் மகன் பாண்டிய போயனை பார்த்து பேசியது ஒரு அனுபவம்.
கி. பி 640 களில் பாண்டியன் குலசேகர பெருமாளும் சேரன் புலியூத்தி மகாராஜாவும் இணைந்து கட்டியதாக சொல்லப்படும் கூடலழக பெருமாள் கோவிலில் பரம்பரை பட்டரால் செழுமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அக்கோவிலில் இருக்கும் பாண்டிய சேர இலச்சினை உருவமும் சேர பாண்டிய பெண்களின் சிலைகளும் கலாச்சார பொக்கிசங்கள்.
பெருமாள் கோவிலில் குலசேகரனின் நில தான கல்வெட்டு இன்னும் உள்ளது. தானம் செய்யப்பட்ட நிலம்தான் இப்போது எவரெவர் கையில் இருக்கிறது என்று தெரியவில்லை.
சேர பாண்டியர்கள் பெண் கொடுத்து பெண் எடுப்பதை சிலர் நினைவு கூர்கிறார்கள். மேற்கண்ட சிலைகளில் சேரத்தி யார் பாண்டியத்தி யார் என்பதை கேட்டால் அவர்கள் அணிந்திருக்கும் காதணிகளின் வித்தியாசத்தை காட்டுகிர்ரர்கள். வட்டம் சேரம். நீளம் பாண்டியம்.
பெருமாள் இப்படி கொழித்திருக்க அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஈஸ்வரன் பாழடைந்து கொண்டிருக்கிறான். இரண்டும் சம காலங்களில் கட்டப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால் அற்புதமான சில கோபுர சிலைகளை கொண்ட இந்த சிறிய கோயில் பராமரிப்பற்று பார்த்தீனியம் சூழ நாசமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கென வழங்கப்பட்ட பதினைந்து கலம் நிலம் போன இடம் தெரியவில்லை. அழகானதொரு தாமரைக் குளம் இப்போது தூர்த்துப் போய்விட்டதாம்.
இதன் கோபுரத்தில் நான் கண்ட சிலைகளில் இருக்கும் புன்னகையும் ஒரு உன்மத்த அல்லது வெற்றி கழிப்போ.. அல்லது வேதனையின் வெளிப்பாடோ என அறியமுடியாத மகோன்னதச்சிரிப்பை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டின் சிரிப்பு அது..
கேட்பாரற்று கிடக்கும் இந்த வரலாற்றுச் சின்னத்தின் மற்றொரு அற்புதமான படம் இங்கே..
எனது ஆட்டோ போகஸ் கேமராவில் இன்னும் நிறையப்படங்கள் எடுத்திருக்கிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment