பாதுகாப்பின்மை யுணர்ந்த
கணத்தில் உண்ணக்கிடைத்ததொரு
பச்சை ஆப்பிள்
இளம் அடர் பச்சைகள்
வழுவழுத்த தோலின் மணம்
கோளத்தில் கடித்த இடத்தில்
விழுந்தது எறிகல்லின் பள்ளம்
நானுணியை. பின் பரவியது
உடல்முழுதும் துவர்ப்பின் சுவை
விண்டு விழுங்கி முடிந்தபோது
தவறி உடன் நுழைந்துவிட்ட
விதை நொடியில் பரப்புகிறது
வன்மத்தின் வேர்களை வயிறு
முழுவதும் ஆப்பிளின் பசியாய்
குவியமிழந்த பார்வையின்
வழியே தெரிந்ததெல்லாம்
பச்சையமற்ற வெண்ணிற
ஆப்பிள் அளித்ததொரு சாபம்
ஆவாய் என
நீரிலும் நிலத்திலும் தேடித்திரிகிறேன்
அந்திமம் கடத்தும் ஒற்றை பழத்தை
புணர்சிக்கழைக்கும் ஆதிக்கிழத்தியின்
சூல்நீர் வாசனையுடன்.
No comments:
Post a Comment