06 November, 2009

நீள்வலி

தெருவெல்லாம் சிதறிக்கிடந்தன அந்த பெண்ணின் தலையில் வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூக்கள். குழந்தைகள் யாரும் விளையாடாத வண்ணம் தெருவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஊர் பாலத்தை தாண்டியதும் அந்த பெண்ணுடைய அம்மாவின் ஓலம் அம்பட்டையனின் சங்கொலியில் அமுங்கியது. அந்திக்கு மேல் புகை வாடை சுவாசித்து வெளியேறின சில அரவங்கள். கங்கு பொரிந்த சிதைக்குள் வெந்து கொண்டிருந்தது அந்த பெண்ணின் உடல். கீழ் வான சிவப்பில் கன்றியது மயானம்.

காட்சி ஒன்று:

சாட்சி:

பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிகூட தெரு. சில மனிதர்கள். அவர்களின் மூதாதையர்களின் ஆவி. பேரக்குழந்தைகள். பேரக்குழந்தைகளின் அறியாமை. நான்கு மாடுகள். பதிமூன்று ஆடுகள். இரண்டு வைக்கோல்போர்கள். காக்கை பித்ருக்கள். கருப்பசாமி சிலைகல். சில சுவர்கள். மதியநேரதிலும் ஈரப்பதம் உணர்த்தும் காத்து. மனிதர்களின் மனவெளியில் இயங்கும் கருப்பு. சில பூச்சிகள். சம்பவம் நடந்த கணம்.

உரையாடல் ஒன்று:

"இந்த தடவ ங்கொம்மா ஏன் அவள அனுப்பல.."

"போன தடவ என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு தெரியாதா.."

"வகுத்துபிள்ளகாரிக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு கேட்டா பிகு பன்றயே.."

"ஒத்தாசைக்கு வந்தவள கொளுந்தியானு பாக்காம கூப்ட ஆளுதான நீயி.."

"ஆமாமா ரெண்டு பேரும் ரம்பா ஊர்வசின்னு நெனப்பு.."

"இல்லைனாலும் உன் பவுசு தெரியாதாக்கும்.. வாத்தியார்னுதான் பேரு.. பள்ளிக்கூட பிள்ளைகளபாக்குறதே சரியில்ல.."

"நிறுத்துடி.. நீ மட்டும் யோக்கியமாக்கும் .. ஊர் மேயத்தான டிரான்ச்பிர்ல போன.."

"இதப்பாருங்க இப்படியெல்லாம் அசிங்கமா பேசாதீங்க .. என்னோட யோக்கியத என்னான்னு எனக்கு தெரியும்..எல்லாம் உங்க மாதிரியில்ல.."

"நல்லாத்தெரியுது உன் யோக்கியம்..மூத்தவளுக்கு உன்ஜாடையா போச்சு.. ஆம்பளையா பொறக்கட்டும் அடுத்து .. அப்பல்ல தெரியும் எவன் ஜாடைனு.."

"................................................."

"என்னடி பதிலக்கானோம்.."அகங்காரத்தாலும் ஆற்றாமையினாலும் கோபத்தாலும் குரூரத்தாலும் ஆன ஒன்னரைப்படி சொற்கள் தெருவில் சிதறத்தொடங்கின.உரையாடல் இரண்டு:

"எண்டா.. உப்புத்தொற பூசாரி அடுத்ததும் மகாராணிதான்னு சூடத்த ஆத்துறான்.. என்னடா செய்றது.."

"என்னத்த செய்ய சொல்ற.."

"முத்துத்தேவன்பட்டி வைத்தியச்சிக்கு நெறைய டிமாண்டாம்டா .. நாளப்பாதது இப்பவே சொல்லி வையிடா.."

"எம்மா உனக்கு அறிவே கெடையாதா.. எத.. எத.. எப்ப பேசனும்னு.. "

"ஒம்பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்குற..எங்க அவ.. அடுப்படியில ஓக்காந்து ஒட்டு கேக்குராளா.."

"சும்மாயிருக்கமாட்டியாம்மா நீயி.."

".........................."

".................................."

".................................."தேள்களும் பெருச்சாளிகளும் தின்றது போக தெருக்களில் ஓடத்தொடங்கின வீச்சமெடுத்த சொற்கள்.உரையாடல் மூன்று:

"அப்பா .. நான்தான்பா.."

".............................................."

"முடியலப்பா.."

"..................................."

"பாத்துட்டேன்.. ஒண்ணுமே செய்ய முடியல.."

".......................... ................................................"

"எல்லா வழியிலையும் பாத்துட்டேன்..முடி..."

"..............................................."

"அம்மா.."

"............................"

"அதான் அப்பாகிட்டே சொன்னேன்.. முடியலம்மா.."

"..............................................."

"காசு சரியா போச்சும்மா.. முடியல.. வெக்கிறேன்.. "உரையாடல் நான்கு:

"..........................................................................................................................................."

அவள் பேசிய பேச்சுகள் அவளை சுற்றியிருந்த யாருக்கும் விளங்காத வெறும் ஒலிகளாய் மட்டுமே இருந்ததால் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் அவற்றை காற்றில் மிதக்க விட்டார்கள். காற்று தள்ளாடியவாறு கனமான அவ்வார்த்தைகளை மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்க விட்டு சென்றன.

அவளை சுற்றி இருந்தவர்கள்:

சுவர்கள். பலாமரத்தாலான அலமாரி. சில காட்டன் துணிகள். துரு பிடித்த ஜன்னல் கம்பிகள். சிங்கர் சாந்து பொட்டு. ஜிமிக்கிகள். கண்ணாடி வளையல்கள். முடிகற்றை நிரம்பிய சீப்பு. சில கரப்பான்கள். அழுக்கு பெட்டியை சுற்றி கொசுக்கள். கழிப்பறை. தட தட வென்று சுற்றும் மின்விசிறி. சில பெருமூச்சுகள். புழுக்கம். சில சென்சார் செய்யப்பட்ட பொருட்கள்.காட்சி இரண்டு:

சாட்சி:
வேப்ப மரங்கள். காங்க்ரீட் கட்டிடங்கள். நாய் நுழையக்கூடிய அளவு துளைகள் கொண்ட ஜன்னல்கள். தகர கட்டில்கள். ரொட்டித்துண்டுகள். பால் வாசனை. பீடி வாசனை. அழுகுரல்கள். பெண்கள். வலுவற்ற ஆண்கள். பீதியூட்டப்பட்ட ஒரு பிணவறை. அவளின் உடல்.
உரையாடல் ஐந்து:
"போஸ்ட் மாடம் பண்ணுறதுக்கு முன்னாடி வேற பார்மாலிட்டீஸ் எதுவும் இருக்கா .."
"இல்ல சார்.. அனா விசரா எடுக்கணும் சார்.."
"எடுத்துடலாம்.."
"ரேகொசிசன் எதுவும் தேவைப்படுமா சார்.."
"வேண்டியதில்லை.. எடுத்துடலாம்.."
"தேங்க்ஸ் சார்.."
"அஞ்சு மாச பேபி ஒன்னு இருக்கு ஷ்பெசிமனுக்கு எடுத்துக்கலாமா.."
"எதுவும் பிரச்சனை வராதில்லை சார்.."
"பார்மாலிட்டீஸ் எதுவும் இல்ல .. பட் அவங்களுக்கு என்ன தெரியவா போகுது.."
"எடுத்துக்கலாம் சார்.."
"கல்யாணம் ஆகி அஞ்சு வருசம்தான் ஆகுது..ஆர்.டி.ஒ என்கொயரி சார்.."
"அப்ப வேணாம் .. எதுக்காக பண்ணிக்கிட்டாளாம்.."
"வேற எதுக்கு சார்.. வகுத்து வலிக்குதான்.."
"ஹ..ஹ..ஹா.. பி எம் முடிஞ்சதும் பியூன் பார்சல் பண்ணிடுவான் கையெழுத்த போட்டு வாங்கிகிட்டு போக சொல்லுங்க.."
"சரிங்க சார்.."

சில கேள்விகள்
பேர் விலாசம் என்ன. மொதல்ல பொணத்த பாத்தது யாரு. கடைசியா உசிரோட யார் பாத்தது. புருசனுக்கு ஒரே பொண்டாட்டியா. காது குத்தியிருக்கா. இன்சூரன்ஸ் பண்ணியிருக்கா. எந்தப்பக்கம் கெடந்துச்சு. பஞ்சாயத்து ஆளுக யாரு. பாடி வாங்க யார் கையெழுத்து போடுவா. எந்த சுடுகாடு. சொன்னத வாங்கிட்டு வந்தாச்சா.

குஷ்டம் பிடித்த சொற்கள் ஈக்களுக்கு இரையாகி கழிவுகளாய் சாக்கடையில் மிதக்கின்றன.

காட்சி மூன்று:
சாட்சி:
செழுமையாக ஒழுக்கமற்று கட்டப்பட்ட பெரிய கட்டிடம். பல அறைகள். மரத்தாலான நாற்காலிகள். வயர்கள். மரங்களை மூலக்கூறுகளாய் கொண்ட எண்ணிலடங்கா காகிதங்கள். குப்பை தொட்டிகள. தலை முடி இழந்த மனிதர்கள். திருவுருவப்படங்கள். பெரிய குளிர் பதன அறை. கண்ணாடி ஜன்னல்கள். திரைச்சீலைகள். அக்குவாபினா பாட்டில்கள். கப் அண்டு சாசர். ஆணைகள்.

உரையாடல் ஆறு:
"அடுத்த மீட்டிங் ஷெட்டியூல் என்ன.."
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பத்தினது..சார்.."
"யார் வந்திருக்கா .."
"கவுன்சலிங் டீம்..ஹெல்ப் லைன் மெம்பெர்ஸ்.. டி எஸ் பி டௌரி செல்.."
"வெல்.. அவங்கள கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லுங்க.. நாம கலால் மீட்டிங் முடிச்சிடலாம்.. "
"அசிஷ்ட்டேன்ட் கமிஷனர் கலால் .. நீங்கதான.."
"எஸ் சார்.. "
"இந்த மாசம் ஆப்டேக் என்ன.."
"ஒன் ட்வென்டி பெர்சென்ட் சார்.."
"லாஸ்ட் டைம் ஒன் சிக்ஸ்டி இருந்தது இல்ல... கேஸ்கள் எதுவும் இருக்கா.."
"இருபத்தியேழு இருக்கு சார்.. ஆல் ஆர் மைனர் இன் நேச்சர்..சார்.. "
"குட்..ட்ரை டு கீப் ரைஸ் தி ஆப்டேக்.. மீட்டிங் மே பி வின்ட் அப்.. ஸிராஸ்தார்.. அவங்கள வர சொல்லலாம்.. "

போதையேறிய சொற்கள் தெருவில் ஆண்களை அம்மணமாக்கி கிடத்தின.

உரையாடல் ஏழு:

"வெல்கம்.. இந்த மாசம் என்ன விசேசம்.. "
"ஒன்னும் இல்ல சார்.. இயர் எண்டு .. சூசைடு பர்சென்ட் அதிகமாயிருக்கு.."
"எல்லாமே பெண்களா.. "
"இல்ல சார்.. மொத்தம் நூத்திநாற்பத்துஏழுல தொன்னுத்துநாலு பெண்கள்.. ஐம்பத்துமூணு ஆண்கள்..சார்.."
இது என்ன பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல வருதா.. "
"இல்ல சார்.. பட் .. கவுன்சிலிங் டீம்ல இருந்து முறையா உங்க நோடீஷ்க்கு கொண்டு வரணும்.. அதனால்தான் சார்.. சொல்றோம்.. "
"இதுக்குன்னு தனி மீட்டிங் இருக்கில்ல அப்ப பாத்துக்கலாம்.. "
"சரிங்க சார்... ஆனா..."
"என்ன சொல்லுங்க.."
"எல்லாம் வயித்து வலியில தற்கொல பண்ணிக்கிட்டதா சொல்றாங்க சார்.. "
"எல்லாருமேவா.. "
"இல்ல சார்.. நூத்திநாற்பத்து ஏழு பேர்ல நூத்திஏழு பேரு வயித்துவலியில மனம் வெறுத்து தற்கொல பண்ணிக்கிட்டதா போலிஷ் சைடு சொல்றாங்க சார்.."
"நாங்க சொல்லலை சார்.. புகார்ல அப்படித்தான் கொடுக்குறாங்க.. நாங்க என்ன செய்றது.."
"வருசா வருஷம் சூசடு ரேட் அதிகமாயிட்டுதான் இருக்கு.. பாப்புலேசன் அதிகமாகிட்டு இருக்கில்ல.. ஹ..ஹா.. "
"சிரிக்க முடியாது.. டீ அரேஞ் பண்ணுங்க.."

வெள்ளை சட்டை போட்ட சொற்கள் கழிப்பறை குழாய்கள் வழியாக நகரை கடக்கின்றன. சொற்களை உண்டு கொழுக்கின்றன பன்றிகள்.

காட்சி நான்கு:
சாட்சி:
கடவுள் என்கிற நிகழ்வுபோக்கு. இயற்கை என்கிற அர்த்தத்தில் வருகிற அனைத்தும். எதார்த்தம் என்கிற முட்டாள்தனம். மலட்டுத்தனத்தை வெளியெங்கும் விதைத்த பிரத்தியேகமானதொரு குழுமனம். குடித்து செழித்து துடைத்து அலையும் அறிவு வாடை வீசும் எழுத்தாளர் உடல்கள். நான். அவரவர் ஊர்களில் இருக்கும் சுடுகாடு மற்றும் இடுகாடு.

உரையாடல் எட்டு:
கேட்பத்தற்கு யாரும் இல்லாததால் சொல்லப்படவில்லை.

அவளின் மகளை அவளின் தாய் அழைக்க வந்தபோது மகள் தெருவில் சிதறிக்கிடந்த பூக்கள்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள். ஆச்சர்யப்படும்படியாக தெருவெங்கும் மல்லிகை மனம் கமழ்ந்தது.

நீண்ட தெருக்கள் இருக்கின்றன. நீண்ட சாலைகள் இருக்கின்றன. தேவையற்றவை மற்றும் தேவையானவை எல்லாம் நீண்டு கிடக்கின்றன. சவ ஊர்வலங்களின் நீளம் மட்டும் குறையத்தொடங்கியுள்ளன. அதனால் காக்கை பித்ருக்கள் கவலை கொண்டு கரைந்தலைகின்றன. வெளியெங்கும் சொற்கள் தொடர்ந்து பிறந்து பரவிக்கொண்டுள்ளன. சப்தத்தினால் ஆன சொற்கள் சில மீட்டர்கள் பயணம் செய்கின்றன. காகிதங்களின் மீதும் அறிவியல் உபகரணங்களின் மீதும் அறையப்பட்ட சொற்கள் சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்கின்றன. பின்னர் ஏதோ ஒரு மர்மப்புள்ளியில் மரணித்து வீழ்கின்றன. மரணம். சுபம்.

1 comment:

padma said...

ithu naan miss panniten .
attakasam .