17 January, 2010

ஜனவரி 17

*************

இப்போதைக்கு நான் ரசிக்கும் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் ஒருத்தர் கூட இல்லை. (பாவாடை தாவணியில் பார்த்த ஜமுனா ராணி, ஊர்பட்ட திறமையை வைத்துக்கொண்டு மொக்கையான ஹீரோக்களுடன் குத்தாட்டம் போட்ட ஷோபனா, எவர்க்ரீன் ஷோபா, எலும்பே இல்லை என்று பாடிவிட்டு போன சில்க் ஸ்மீதா (சில பெண்கள் பெயர் தெரியாது, ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனவர்களை நான் கணக்கில் கொள்ளவில்லை) ஆகியோர் தவிர்த்து). பழைய ஹிந்தி பாட்டி நர்கிஸ், கொஞ்சம் வயசாகிப்போன நந்திதாதாஸ், தபு போன்ற தேவதைகளை சினிமாவில் நான் அடக்கவில்லை. மற்றபடிக்கு நான் தமிழிலும் ஹிந்தியிலும் மிகக்குறைவாகவே படங்கள் பார்க்கிறேன். அதனால் பல வாய்ப்புகளை நான் இழந்திருக்கக்கூடும்! சரி உலக சினிமாக்களில் என்னை கொன்று கொண்டிருக்கும் இரண்டு பெயர்கள், சல்மா ஹையக், பெனலோப் க்ரூஸ்

இதையெல்லாம் படித்தால் உங்களக்கு என்ன தெரிகிறது?

நான் நாற்பது வயதை தொட இன்னும் இரண்டே முக்கால் வருடம் முழுதாக இருக்கிறது என்பது தெரிகிறது!

*************

எனக்கு பிடித்த நடிகர் கண்டியில் பிறந்த மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். விழுப்புரம் சின்னையாபிள்ளை மன்றாயர் கணேசனை எனக்கு பிடிக்காது. மேற்படி மருதூறார் தான் நடித்த திருடாதே படத்தில் 'திருடாதே பாப்பா திருடாதே' என்ற பாடலுக்கு தனது உடலசைவுகளை வெளிப்படுத்தும் விதம் என்னக்கு பெரும் சிலாக்கியத்தை ஏற்படுத்தும். நிறைய படங்களில் அவரின் துல்லிய உடலசைவுகள் பெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. தனது மொத்த தேவைகளையும் முன் தீர்மானித்து மிகத்துல்லியமான திட்டமிடுதலால் இயக்கப்பட்டு, அவைகள் அவரால் நிறைவேற்றப்பட்டது. உண்மையிலேயே ஓர் ஆணழகன். அவருக்கு மீசை பொருந்தாமல் போனது வரலாற்று நகைமுரண். மன்றாயர் ஒரு மண்ணாங்கட்டி என்று சொல்வதை விட களிமண் என்கிற வார்த்தை சரியாக இருக்கும் - எல்லா இயக்குனர்களும் அவரவர்களுக்கு தேவையான பாத்திரத்தை தங்கள் கைகளாலேயே செய்து கொண்டார்கள். நாட்டியபேரொளி பத்மினியின் நடனத்தை மறைந்திருந்து பார்த்த போது கலை பொம்மை, ஸ்ரீதேவியுடன் டூயட் பாடும்போது பிழை பொம்மை. மன்றாயர் சாகும் வரை காரோட்டத்தெரியாது என்று சொல்கிறார்கள் - உண்மையாய் இருக்குமானால் அது முரண் நகையின் வரலாறு.

*******

சிரிப்பு நடிகர்கள்: சந்திரபாபு, நாகேஷ், காக்கா, தவிர்க்கமுடியாமல் வடிவேலு. இவர்கள் எல்லாம் பெரும் ஆளுமைகள். தமிழ் சினிமாவால் உலக அரங்கிற்கு செல்ல முடியாமல் வீணாய்ப்போனவர்கள்.

சரளாவையும் ஆச்சியையும் விட்டால் தமிழில் சிரிப்பு நடிகைகள் என்ற வகைக்கு ஆளே இல்லை. துயரம். இரண்டு பெரும் அவுட் ஆப் பீல்ட். குஷ்பூ போன்ற காமடிகளை நான் கணக்கில் சேர்க்கவில்லை.

********

இப்போதைய தமிழ் சினிமாவில் செக்ஸி வுமன் என்று என்னைக்கேட்டால் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் படங்களின் கதாநாயகி. இதை எழுதும்போது அவரது பெயர் தெரியவில்லை.

********

இன்றைக்கு மருதூறார் பிறந்த தினம். அவரைப்பற்றி எழுதலாமென்று நினைத்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா என்றாலும் ராமச்சந்திரன் என்றாலும் மோகன் ராஜகோபால நாயுடு ராதாகிருஷ்ணனை மறக்கமுடியாது. வாழ்க அன்னார்களது நாமம்.

*********

No comments: