15 March, 2010

வழை

நண்பர் சுரேஷ் தனது நண்பருடன் பேசும்போது வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு கருத்தை விவாதித்ததாக சொன்னார். அதன் சாரம் ஒரு கேள்வியாக இருக்கிறது. வலைப்பதிவில் கருத்துக்களைப் பதிவதற்கும் பகிர்வதற்கும் கட்டணம் வாங்கினால் எத்தனைப்பேர் பதிவுலகில் தங்கள் எண்ணங்களைப் பகிர்வார்கள்? முக்கியமான கேள்விதான் இல்லையா ? வலைப்பதிவர்கள் இணைய வலையில்/வளையில் இரண்டுவிதமாக மாட்டிக்கொள்கிறார்கள் என்று படுகிறது. இலவசமாய் பதிவுவெளியை அளிப்பதின் மூலம் சர்வதேச நிறுவனங்கள் விரிக்கும் வலை ஒன்றிலும், தொடர்ந்து பதிவு மற்றும் பகிர்வு செய்வதில் கிடைக்கும் மனச்சுகிப்பிற்கு ஒன்றிலுமாக. இத்தகைய பதிவுவெளி சேவை இலவசமாக கிடைக்காவிட்டால் நாம் எத்தனை பேர் கைக்காசு செலவு செய்து நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்?

பதிவு வழக்கம் மெல்லியதொரு போதைப்பழக்கமாக உருவகிக்க தொடங்குவதை பதிவர்கள் கண்டுகொள்ளக்கூடும். முதலில் எண்ணத்தைப் பகிர நல்ல களமாய் இருக்கும் இவ்வெளி தன்னை இட்டு நிரப்ப ஏதேனும் ஒரு கருத்துக்கும் அதன் தொடர்ச்சியாக ஒரு சார்புக்கும் பதிவர்களை நிர்பந்திக்கிறது. இச்செயல்பாடு படிப்படியாக நிகழும். ஒருவரின் வேலை மற்றும் சூழல் சார்ந்தே இதன் தன்மை காலவெளியை எடுத்துக்கொள்ளும். ஆனால் தொழிநுட்ப யுகத்தில் நாம் இதிலிருந்து தப்ப முடியாது.

ஏற்கனவே நமது பருண்மையுலகில் இணையத்தின் வழியாக ஒரு பிரபஞ்ச வெளியைப் போன்ற தன்மையில் ஒரு மாயச்சமூகம் மனித எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நாம் நமது சமூகத்தில் ஒரு உறுப்பினர் போன்றே இந்த மாயச்சமூகத்திலும் உறுப்பினர்கள். நமது கட்டற்ற எண்ணங்களை மிகச்சுலபமாக பரப்ப முடிகிற வெளியாய் இது தன்னை தொடர்ச்சியாக விரிவு செய்து கொள்கிறது. அதைவிட ஒரு சிறப்பம்சம் உண்மைச்சமூகத்தில் ஒரு தனிமனிதனுக்கு சாத்தியப்படாத பன்மை நுழைவுத்தன்மை இந்த மாயச்சமூகத்தில் சாத்தியமாகிறது.

அதாவது, ஒருவர் இச்சமூகத்தில் எத்தனை பேராகவும் உறுப்பினராக்கிக்கொள்ளலாம். அனாலும் இது உண்மைச்சமூகத்தின் ஒரு புள்ளி மாற்றமற்ற மாயப்பிரதியாக மட்டுமே இருக்கிறது. மொத்தத்தில் ஒரு தனியறையில் தன்னை யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு தனிமனிதன் செய்யும் அத்தனைக்காரியங்களையும் எல்லாம் அறிகிறபடி தன்னை யாரென்று வெளிக்காட்டிக்கொள்ளாமல் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை இவ்வெளி நமக்கு அளிக்கிறது.

என்னவொரு பயங்கரம்!

***********

வலை/வளை இரண்டு வார்த்தைக்குப் பிறகு 'வழை' என்கிற வார்த்தை இருக்கிறதா என்று தேடினேன். இருக்கிறது. வழை என்றால் இளமை என்ற ஒரு அர்த்தமும் புதுமை என்ற ஒரு அர்த்தமும் இருக்கிறது வர்த்தமானன் தமிழ் - தமிழ் அகராதியில்.

********

No comments: