23 May, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை - 2

நான் உயிரோடு இருப்பது வரை இறக்கப்போவது இல்லை. நான் இறந்த பின் உயிரோடு இருக்கப்போவது இல்லை - கிருஷ்ணகுமாரின் சொற்பொழிவில் எப்பவோ கேட்டது.

*****************************

மருத்துவம் மரணத்தை எப்படி வரையறுக்கிறது: சாதாரண உடலியக்கம் நின்றுபோதல். திரும்பப்பெறவியலாத பிரக்ஞை (conciousness) மற்றும் விழிப்புணர்வு(awareness).

மரணம் நிகழ்ந்த உடன் முதலில் இதயம் இயக்கத்தை நிறுத்திவிடுகிறது. இதனால் மூச்சு விடுவது, குருதியோட்டம், வளர்சிதைமாற்றம் மற்றும் துடிப்பு ஆகியவை நிறுத்தப்படுகிறது. இதன் பிறகு உடல் ஆறு வகையான படிநிலைகளை கடந்து கூடாகிறது.

மரணம் ஏற்பட்ட பதினைந்து முதல் நூற்றி இருபது நிமிடங்களில் உடல் வெளிறி விடும். இதை pallor martis என்கிறார்கள். இந்நிலை எதற்கு ஏற்படுகிறதென்றால் உடலில் ரத்தஓட்டம் நின்று அனைத்து ரத்தமும் புவியீர்ப்பின் விதியில் உடல் எந்த நிலையில் இருக்கிறதோ அதன் அடிப்பாகத்தில் சென்று தேங்கிவிடுவதால்தான். இந்த நிலைக்கு livor martis என்று பெயர். இறந்து நூற்றி இருபது நிமிடத்திலிருந்து நூற்றி நூற்றி என்பது நிமிடத்தில் உடல் தனது சாதாரண வெப்பநிலையில் இருந்து முற்றிலும் குறைந்து உடல் சில்லிட்டுப்போகிறது. சில்லிட்ட உடம்பின் நிலையை algor martis என்கிறார்கள். பின்னான மூன்றாவது மணியிலிருந்து பனிரெண்டாவது மணிவரை உடல் தசை நார்கள் முழுவதும் விறைத்து காணப்படும் நிலையை rigor martis என்கிறார்கள். பனிரெண்டாவது மணியிலிருந்து குழைவடையத்தொடங்கும் உடல் சிதைவடயத்தொடங்குகிறது (decomposition ). இச்சமயத்தில் அழுகிய தசையின் நாற்றத்தில் ஈர்க்கப்பட்டு பூச்சிகள் தங்களது முட்டைகளை உடலின் மேல் இட்டுசெல்கின்றன. அவற்றின் முட்டைகளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான புழுக்கள்தால் maggots எனப்பெயர் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஏறக்குறைய மூன்று வாரங்களில் skelitonization என சொல்லப்படுகிற அனைத்து தசைப்பகுதிகளும் காலாவதியாகி வெற்று எலும்பு கூடாய் ஆகிவிடுகிறது உடல். எலும்புகள் சீதோசன நிலைக்கேற்ப தனது சிதைவுத்தன்மையை வருடக்கணக்கில் வைத்துக்கொள்கிறது.

ஆக ஒரு விலங்குக்கும் உலகில் மிகவும் அசாதாரணமாய் பரிணாமவளர்ச்சி பெற்று சுயம் என்ற ஒன்றை அறிந்து கொண்டதாய் நம்பும் மனிதனுக்கும் உடல் ரீதியிலான மரணம் என்பது ஒரே மாதிரிதான் நிகழ்கிறது.

விலங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே வித்தியாசம் என்வென்றால் அவை இறக்கிறோம் என்று தெரியாமல் சாகின்றன. மனிதன் இறக்கிறோம் என அறிந்தே சாகிறான். இந்த முதல் புரிதல்தான் ஒட்டுமொத்த மனித புலத்தையும் ஒரு புள்ளியில் இருத்தி வரலாற்றை தொடக்கியது. என்றாவது ஒரு நாள் நாம் இறந்தே ஆகவேண்டும் என்கிற அடுத்த புரிதல் அவனுக்கு உண்மையான பயத்தை உருவாக்குகிறது. அதுவரை நாம் விலங்குகள் போலமட்டுமே பயந்து கொண்டிருந்தோம்.

ஒரு சிறுத்தையிடமிருந்து ஒரு மான் எதற்காக பயந்து ஓடுகிறது. சிறுத்தை தன்னை கொன்றுவிடும் என்றா. இல்லை. அது உள்ளுணர்வு. உயிர்வாழ்தலின் அடிப்படை அனிச்சை. தனதான இனப்பெருக்கத்தின் பேரவா. அவ்வகையான பயம் உயரின் மூலம். அதற்கும் நாம் என்றாவது ஒருநாள் இறந்து போவோம் என்கிற பயத்திற்கும் உள்ள இடைவெளிதான் மனிதகுலமாக சமுதாயமாக தம்மை நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயமாக சமுதாய கட்டுப்பாடுகளாக தனிமனித ஒழுக்கங்களாக அந்த ஒழுக்க விழுமியங்களின் மீதான நம்பிக்கையாக இயற்கையில் இல்லாத அறமாக உருவெடுத்தது.

இந்த பயம்தான் ஆன்மாவை ஈன்றது. அவற்றின் இறவாதன்மையை சதா அரற்றி உறுதி செய்ய போராடியது. ஆன்மீகம் என்கிற மகத்தான சொல்லைக் கண்டு பிடித்தது. இயற்கையிலிருந்து சக்கரத் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த நிகழ்வுக்கு நிகரானது மனிதன் ஆன்மீகம் என்கிற சொல்லைக் கண்டுபிடித்தது.

இறப்பில் உடல் இல்லாமல் போகிறது. இல்லாத ஆன்மா மற்றவர் நினைவுகளில் வாழத்தொடங்குகிறது. காலப்போக்கில் இந்த நினைவுகள் மனிதனின் குரோமோசோம்களில் சேகரமாவதாக எனக்கு படுகிறது. இப்படியாக மனிதனின் உள்ளுணர்வு தொடர்ந்து மதிப்பு கூட்டப்படுகிறது. இதன் மூலமாக அறம் என்கிற ஸ்தூலம் நம்பிக்கை என்கிற நுண்ணிய இணைப்புகளால் பருண்மை ஆக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த அறத்தின் எடை அதிகரித்தவாறு இருக்கிறது.

தான் உருவாக்கிய அறத்தை தன்னாலே தூக்கிச்சுமக்கிற பொதிகழுதையாய் மனிதன் மாறிவிட்டான்.

இந்த அறம் என்பதை எவ்வாறு வரையறுக்கலாம்?

************************

தொடர்கிறேன்.

****************



6 comments:

Kousalya Raj said...

//விலங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே வித்தியாசம் என்வென்றால் அவை இறக்கிறோம் என்று தெரியாமல் சாகின்றன. மனிதன் இறக்கிறோம் என அறிந்தே சாகிறான்//

இறந்து போவதை அறிவதால் தானே வாழ்வை பற்றிய பயம் நமக்கு அதிகமாக இருக்குறது!
அதனால் தானே நின்று பேச கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நல்ல பதிவு நண்பரே.

par said...

Looking good :)))

கபிலன் அருணாசலம் said...

very good information regarding death

பத்மா said...

விலங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே வித்தியாசம் என்வென்றால் அவை இறக்கிறோம் என்று தெரியாமல் சாகின்றன.

விலங்குகளுக்கு ஒரு நாள் இறப்போம் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ..ஆனால் சிறிது நேரத்தில் தனக்கு எதோ ஒன்று நடக்கப்போகின்றது என்ற உணர்வு வரும் ..அதை நாய்களிடமும் .யானைகளிடமும் ,பசுவிடமும் காணலாம் . ஆக அவையும் இறப்பிற்கு பயம் கொண்டவைகளாகவே உள்ளன..வலிக்கு பயம் இருக்கும் எதுவும் இறப்பிற்கும் பயப்படும் தானே ?
இறப்பை அறியும் குணமும் மிருகங்களிடம் உண்டு .
பல உதாரணங்கள் உள்ளன ..
ஆக அவைகளின் மன நிலை என்ன வென்பதை நாம் இன்னும் சரியாக உணராமல் இருக்கிறோம் என்பது தான் உண்மை

par said...

/// Looking good :))) ///

I didn't read your post before commenting like this. After reading it, it sounds odd to say 'Looking good' when you are talking about Decomposition, et al. What I really meant was 'Your new hair style is looking good'.

adhiran said...

I guess parth. it is kind off +ve odd!

you may b right padma. animals are very piridictable. I could understand more.

thanks kousalya

thanks kabilan.