25 May, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய் எல்லாம் செயல்

- குறள்

*****************************

இப்படி குறளை இயற்றியதாகக் கூறப்படும் வள்ளுவன் அறத்துப்பால் என்கிற தலைப்பில் அறத்தைப் பற்றி பிரித்து மேய்ந்தபின் நான் அறம் என்றால் என்ன என்று சொன்னால் எனக்கு எவ்வளவு கொலஸ்ட்ரால் என்று நினைக்கிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே தொன்றுதொட்டு நமது அறிஞர்கள் எதுவெல்லாம் அறம் என்று சொல்லித்தொலைத் திருக்கிறார்களே தவிர அறம் என்றால் என்ன என்ற ஆராய்ச்சிக்கு ஏறக்குறைய போகவே இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் அறம் என்னும் சொல் தமிழுக்கேயானது. ஆங்கிலத்தில் இதற்கு இணையான அர்த்தச்செறிவுடன்வார்த்தை இல்லை என்கிறான் வசு.

'ethics, moral, morele etc' போன்ற பல்வேறு வாத்தைகளின் அர்த்தத்தை செறிவாய் கிரகிக்கிறது அறம் எனும் சொல். என்றாலும் பிரபஞ்சத்தில் சில நிலைகளுக்கு அல்லது நெறிமுறைகளுக்கு நிலைத்த வரையறையை அளிக்க முடியாது. அவற்றிலொன்று அறம். அறம் என்கிற வார்த்தைக்கு நிலையான பொருள் தரும் விளக்கத்தை நாம் அளித்துவிட முடியாது. அதனால் மேற்கத்திய விஞ்ஞானப் புலத்தில் அறம்(ethics) என்ற சொல்லுக்கு எப்பொழுதும் இருக்கும்படியான ஒரு தற்காலிக விளக்கத்தை உருவாக்குகிறார்கள்.

நான் வில்லியம் லில்லி என்பாரின் விளக்கத்தை இங்கு சொல்கிறேன்: "சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப்பற்றி ஆராயும் ஒருவகை விஞ்ஞானமாக - மேல்வரம்பிட்ட விஞ்ஞானமாக அறவியலை நாம் வரையறுக்கலாம்" . இதில் கூட அறவியல் என்று சொல்கிறோமே தவிர அறம் என்றால் என்னவென்று சொல்லவில்லை. அறம் என்பதை சொல்லலாம்?

இதற்கு நமது அறிஞர்கள் 'நல்லது' 'கெட்டது' 'சரி' 'தப்பு' ஆகிய நான்கு சொற்களை வைத்துக்கொண்டு விளையாடித்தீர்த்திருக்கிறார்கள். நான்கு சொற்கள் அதற்கு ஒரு களம். அதற்கொரு காரண விளைவு. மேற்சொன்ன லில்லியின் விளக்கத்தில் ஒன்றை கவனித்திருப்போம். மலையைப் பிளந்து உள்ளிருந்து எடுக்கப்பட்ட கரும்பாறைஎனவோ நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட கல் போன்றோ ஒரு வால்நட்சத்திரத்திலிருந்து வெளியேறி பாயும் எரிகல் போன்றோ ஒரு சொல்லை. 'சமுதாயம்' என்பது அச்சொல். இதன் மூலம் சமுதாயம் என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்னாள் அறம் என்கிற ஒன்று இல்லை என்று கொள்கிறேன். இதன் அர்த்தம் முதாயத்திற்குத்தேவை அறம் தனி மனிதனுக்கல்ல. ஆனால் தனி மனிதன் அறமில்லாமல் வாழ முடியாது.

சமுதாயம் தான் அந்த களம். பயன் என்பது விளைவு. சரி மற்றும் தப்பு என்பவை அறத்தின் செயல்பாடுகள். நல்லது மற்றும் கெட்டது ஆகியவை அறத்தின் விளைவுகள். சரியாக செய்தால் நல்லது நடக்கும், தப்பாக செய்தால் கெட்டது நடக்கும். எளிய விதியென தோன்றும் இவ்வடிப்படைக்கு நமது மூளைச்செயல்பாடுகள் பரிமாணத்திற்கு வந்தடைய ஆயிரக்கான வருடங்கள் மனிதர்கள் போராடியிருக்கிறார்கள். அதாவது ஆதி உள்ளுணர்வுக்கு எதிராக அடிப்படை இயல்பூக்கங்களுக்கு எதிராக நம்பிக்கையினை வளர்ப்பதன் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான அறம் என்கிற நிகழ்வுப்போக்கை நமது மனித இனம் ஈன்றெடுத்துள்ளது. ஆக அறம் எதன்பொருட்டு உருவாக்கப் பட்டது?

************************
தொடர்கிறேன்.
***********************

5 comments:

பத்மா said...

அதாவது ஆதி உள்ளுணர்வுக்கு எதிராக அடிப்படை இயல்பூக்கங்களுக்கு எதிராக நம்பிக்கையினை வளர்ப்பதன் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான அறம் என்கிற நிகழ்வுப்போக்கை நமது மனித இனம் ஈன்றெடுத்துள்ளது.

மனித சமுதாயத்திற்கு தேவை என்று யார் கருதியது?

எது தப்பு ? எது சரி?

இன்னும் கொஞ்சம் விளக்கமாக வரட்டும்

ஆக இந்த அறம் நம் ஜீனில் உட்கார்ந்து விட்டது அல்லவா?

adhiran said...

yes it is . but u have some exagrated fear with jene, I think!!

:-)

thanks padma.

நேசமித்ரன் said...

//ஆதி உள்ளுணர்வுக்கு எதிராக அடிப்படை இயல்பூக்கங்களுக்கு எதிராக நம்பிக்கையினை வளர்ப்பதன் மூலம் மனித சமுதாயத்திற்கு தேவையான அறம்//


ஆதிரன் சார் சாரத்தை பிழிந்து வைக்கிறது எழுத்துகள்

தொடர்க ...

Nathanjagk said...

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
---
அறம் என்பதை virtue (The quality of doing what is right and avoiding what is wrong; A particular moral excellence) என்று மொழிப்பெயர்க்கப்படுகிறது.

அறம் நல்லதைத் தேடிக்கண்டடையும் முயற்சி. மனித வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள் சுகமாக இருத்தல். இருத்தலின் பொருட்டு தேடல் விரிவாக்கம் பெறுகிறது. தேடலின் பொருட்டு எதிர்கொள்ளும் முயற்சிகளின் பக்கவிளைவுகளை உத்தேசித்தே அறம் பயிற்றுவிக்கப்படுகிறது.

வலிநிவாரணிக்கான தேடல் ஒரு அறத்தைச் சார்ந்திருக்கிறது. அயோடெக்ஸ்ஸை கண்டடைதல் தேடல். அதைக் கண்டுபிடித்தல் விஞ்ஞானம். இரண்டும் அறத்தின் விளைவுகளே. கண்டைக்கால் வலிக்கு எனக்கு விஸ்கியே போதும் என்பதும் அறமே. விஸ்கியின் பின்விளைவுகள் மட்டும் முரணாக இருக்கின்றன. ஹாங்ஓவர் போல.

நல்லவை எனக் கண்டறிப்பட்ட எதுவுமே உத்தேசமானதுதான். அவைகளின் முரண்களை கெட்டவை என பகுப்பது ஒரு அவசர நடவடிக்கையே. மனித அடிப்படை உணர்வுகள் காலத்திற்கு காலம் வேறுபடுபவை. கூண்டிலடைக்கப் பட்ட எலிக்கும், பூனைக்கு முன் பிரார்த்திக்கும் எலிக்கும் உள்ள வேறுபாடு போல.

அறம் அடிப்படை உணர்வுகள் மட்டும் சார்ந்ததல்ல. காலம் தேசம் போன்ற வரையறைக்குட்பட்டும்தான். பொய்சொல்லாமை எளிய அறம்.. நல்லதிற்காக பொய்யுரைத்தல் என்பது அறத்தின் இன்னொரு முகம். நல்லவை என்று கற்பிதம் கொள்ளும் எதுவுமே எப்போதும் மாறக்கூடியவைகளே.

மொத்த வாழ்வுமே ஒரு ஆராய்ச்சிதான் என்ற கருத்தில் நம் வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களும் பதிவு செய்யத்தக்கதாக இருக்கின்றன. கலக வாழ்க்கையும் ஒரு படிப்பினைதான். அற வாழ்க்கையும் ஒரு பதிவுதான். காலங்களுக்கேற்ப அறம் வேறுபடுகிறது அவ்வளவே. ஓரினப்புணர்ச்சியின் அறங்கள் இன்று வேறு விகிதத்தில் சட்டபூர்வமாகின்றன. இதுவே தேசத்துக்கு தேசம் வேறுபடலாம்.

கால-தேச ப்ரக்ஞையற்ற, மாறுபடுகளை மறுக்கும் அறம் - மதமாகிறது. படிப்பினைக்கேற்ப புது பரிமாணங்களை ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களே அறம்.
அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது என்பதே என் கருத்து. அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் என்ற மட்டில் அறத்தின் பால் காமம் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் மகி!

வசுமித்ர said...

அறத்தை விளக்க தமிழில் உதவும் வார்தைகளாவன, தர்மம், நீதி,ஊழ்,விதி.
எக்காலத்தும் மாறாத நீதியோ தர்மமோ, எதுவும் இல்லை.

சித்திரமும்கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நித்தம் நடக்கும் நடையுமொரு நடைப்பழக்கம்

நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்...

-ஔவை
இதில் ஒன்றைக்கவனிக்க வேண்டும்
எல்லாவற்றையும் பழக்கத்தில் அடக்கும் மூதாட்டி நட்பை தயையை கொடையை பிறவிக்குணம் என்று சொல்கிறார். இதை தெய்வக்கடப்பாடாகவோ, இல்லை விளக்கமுடியா கோட்பாடாகவோ, கடந்து செல்லமுடியா நிலை, அல்லது எக்காலத்தும் மாறாது தன்னிலையிலேயே உறைந்திருப்பதாகவோ நாம் எடுத்துக்கொள்ளலாம், இடையில் ஊழ் வினை உவந்து ஊட்டும் என்ற வார்த்தையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. விதி என்ற இரண்டெழுத்து தமிழ் நீதி மரபை எப்படியெல்லாம் உடைத்திருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக, துக்கம் என்ற ஒன்றை அறியாமல் சந்தோஷத்தின் ருசியை உணரமுடியாது. உணர்வானாயின் உடல் தேவைகள் அவனுக்கு பல பிரதிகளைக் காட்டக்கூடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அறமென்பது ஒவ்வோரு மதத்திற்கும் ஒவ்வொரு கோட்பாடாக இயற்றப்பட்டிருக்கிறது.மதங்கள் கூறும் கோட்பாடுகள், நியதிகள்,நியமங்கள், எல்லாவற்றையும் உடைத்துப் பார்த்தால் மனிதன் தனக்கு தீங்கு செய்யாது குற்றவுணர்ச்சியில்லாது எது அவனைச் செயலாற்ற வைக்கிறதோ அதுவே அவனுக்குரிய அறம். அவன் சமுதாய விதிகளுக்கு உள்ளே வரும்போது அது விதியாக மாறலாம், அல்லது சட்டமாகக்கூட மாறலாம்.

அறமென்பது குற்றவுணர்ச்சியில்லாது ஒரு செயலை செய்தல் ஆவதே என்பது என் கூற்று.