01 May, 2010

ஒளிரும் மரம்

கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.
அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.
முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
.

மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல.


******************
இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை.

*****************************

மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம்.

***********************

3 comments:

நேசமித்ரன் said...

திருப்தியான இடுகை ஆதிரன் சார்
கடைசி பத்தி !!!!!

padma said...

மின்மினி பூச்சிகளின் ஒளிதிரவம் !!!!
நல்ல idea தான் .இருப்பினும் அதற்காக கொல்லப்படும் பூச்சிகள் எத்தனை ஆயிரமாய் இருக்கும் . தன்னுள் ஒளியை வைத்திருப்பதாலே கொல்லப்படுவது எத்தனை சோகம் ?
let them synthesize the chemical .

adhiran said...

they try to synthesize the chemical I think. thaks padma.

thanks mithran.