புள்ளென அமர்ந்திருக்கும் எனைக்குறித்து உன் கவண்கல்லைப் பொருத்துகிறாய் இனிய வேடா. என் கூடு வனைய போதுமான இவ்வந்தியில் உன் குறி இனிமையானது. கூடு விட்டு சென்ற பொழுதுகள் மீள்கின்றன என் பய நரம்புகளில். உன் கெண்டையின் முறுக்குகளில் அறியும் உனது அனுபவம் எனக்கு அளவற்ற கிளர்வை பிரவகிக்கிறது சிறகுகளில். சிலிர்ப்பான சிறகுகள் பறக்கத்தோதற்றவையென அறிவாய்தானே வேடா. திருகலான மதியப்போழுதுகளில் எங்கிருந்தாய். ஒரு புழுவுக்கு வக்கற்றதாய் திரியும் இந்நிலம் உண்ட வெப்ப வெயிலை உண்டு அசையமுடியா கிளைமுனையில் கொள்வாரற்று அமர்ந்திருந்தேன். இவ்வாலத்தின் அழுத்தம் என் தனிமை வேடா. குருகுகள் கலையும் பனியுமிழ் விடியலில் எங்கிருந்தாய். என் பொட்டில் சரியாக விழும் ஒரு அறைக்கு உகந்த நேரமதுவென்பதை அறியாதவனா நீ. என் பருண்மைத்தனிமையிலிருந்து தனிமையாகவே மாறிவிடுகிற பொன் வாய்ப்பை இழந்தேன் வேடா. ஆனால் இவ்வந்தியின் தொடுவானைப்பார் அது ஒரு இனிய மதுவின் வண்ணமாய் மிளிர்ந்து பரவசப்படுத்துகிறது. தேனிலிட்ட சூரியத்தீற்றல் வானம். பெருவெளி. மரவுச்சி. கிடைமட்ட அரைவட்டத்தில் என் பறத்தல் களம். ஒரு துணையின் குறிப்பு அது. அறிய கணம். வேடா. உன் கவணிலிருந்து புறப்படும் கல்லின் பயணம் திசைமாறாதது என அறிவேன். என் பொட்டில் அது பதிக்கும் முத்தம் உன்னைப்போலவே எனக்கும் இனிக்கும். அனாலும் வேடா. நானமந்திருக்கும் கிளையின் இடப்பக்கம் இரண்டு அடி எடுத்து வைக்கிறேன். எனைக்கடந்த கல்லை விழுங்கிக்கொண்டது விருட்சம். துணையின் சமிக்கைக்கு விடையளிக்கும் இத்தருணத்தில் எனை மன்னித்து போய்வா வேடா. மீண்டும் வா ஒரு திருகலான மதியபோழுதிலோ பனியுமிழும் விடியலிலோ நான் தனிமையுற்று கிடக்கும்பொழுது.
****************
2 comments:
template நல்லா இருக்கு...! ஒரு சின்ன வேண்டுகோள், post font size கொஞ்சம் பெரிதாக இருந்தால் படிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும்.
பல நாட்களுக்கு பிறகு ....உரைகவிதை
வார்த்தை லயத்திலும் , ஜாலத்திலும் சுற்றி சுழலும் அழகு .
நன்று ஆதிரன் . நன்றி ஆதிரன் ..
Post a Comment