22 July, 2010

பூமி விருட்சம்

தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். ஒரு வெளிச்சப் புள்ளியை விட்டு. நிரந்தரமாக வானேகும் ஒரு இருட்டுகுமிழ் விட்டு. தூரத்திலடங்கும் ரயிலோசை விட்டு. துயரநிழலின் மஞ்சள் வண்ணம் விட்டு. உயிர்த்துடிப்பின் மெல்லியதுன் அன்பு விட்டு. மணல் புதைய விட்டு சென்ற காலடி தடம் விட்டு. கனவுகள் ஏந்திய பாலையின் வெப்பம் விட்டு. கடல் விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை துரோகம்.

தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். மேகம் விட்டு. மேகத்துக்குள் நமதான மென்னிணக்கம் விட்டு. மழைக்குமுன் மண் கசியும் வாசம் விட்டு. குழலுதிர்த்த ஒற்றைப்பூவின் துயரம் விட்டு. பாதம் பட்டு ரோமக்கால்கள் விரைத்த தருணமொன்றின் மோகம் விட்டு. உனதான பாடல் விட்டு. மரணம் விட்டு. அடர்பழுப்பு பூவொன்றின் சாயலொத்த மென்சருமம் திரட்டி வைத்த பரிவு விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை காதல்.

தவிரவும் நான் கடந்துகொண்டிருக்கிறேன். மதுவுண்டு உன் வாயுமிழும் அமுதம் விட்டு. இரவெல்லாம் ரீங்கரிக்கும் சில்வண்டின் கொடுந்தனிமை விட்டு. இசை பிழிந்து தெருவெல்லாம் குமட்டித்துப்பும் ஸ்வரக்ரந்தம் விட்டு. மோனம் விட்டு. வேசைமீதாசை கொண்டலையும் பசுங்காடு விட்டு. வழியற்ற கூடடைய பனையேறும் கொம்பேரியின் கூர்பார்வை விட்டு. சுடுகாட்டின் மணம் விட்டு. கண்டுகொள் நான் விட்டுச்செல்லும் சமிக்கை நட்பு.

என்மீதேரும் குரோதத்திற்கு முழந்தாளிடுகிறேன். மண்மீதொரு முத்தம் பதிக்கிறேன். விதையாகிறதென் முத்தம். பூமிவிருட்சம் முளைக்கிறது கரிய விசும்பில் நீலவொளி உமிழ.

3 comments:

பத்மா said...

காதலும், துரோகமும், நட்பும், கிளைகளாய், இலைகளாய் படரும் பூமி விருட்சத்தில் சிக்குண்டு வெளிவர இயலாமல் பிரமிப்புடன் ........

விட்டு போனது விட்டு போனதாய் ஆகிவிடுமா?

அருமை ஆதிரன்

ராகவன் said...

அன்பு ஆதிரன்,

நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன் உங்கள் வலைக்கு. அழகாய் இருக்கு இந்த பதிவு.

கண்டுகொள் நான் விட்டு செல்லும் சமிக்ஞை துரோகம்... சமிக்கையா அல்லது சமிக்ஞையா... சமிக்கை என்றால் அர்த்தம் தெரியவில்லை...

அன்புடன்
ராகவன்

adhiran said...

சமிக்ஞை is right. thanks.