01 September, 2010

மனநிலை

சகலமும் தீர்ந்துதான் போகவேண்டியிருக்கிறது நாளின் முடிவில். ஒரு இரவு அதற்காக பரிசளிக்கப்படுகிறது. புதிப்பித்துக்கொள்ள. ஆனால் தூங்கிபோய் விடுகிறேன். ஒரு புதிய காலை வெறும் சாலையில் குறுக்கிடும் கீரிப்பிள்ளை போல சரட்டென்று கடக்கையில் சகலமும் பற்றிக்கொள்கிறது மீண்டும், நீண்ட இருமுனை வாளை பின்முதுகில் செருகியவாறு. ஆக்ரோசமான ஒரு பூப்பந்தாட்டத்தில் சமயோசிதமான ஒரு இறந்த பந்து (dead baal) எதிராளியின் மொத்த சமநிலையையும் கவிழ்த்து விடுவது போல ஒரு சுவாரஷ்ய விளையாட்டைப்போலில்லாமல் இந்த நாட்கள் தினமும் இறந்த நாட்களாகவே வந்து மோதும்போது எதிர் வீச்சு வலுவிழந்து போகிறது. இதுதான் இந்த கணத்தின் மனநிலை. மறப்போம். என்பதற்காக சில பாடல்களைக் கேட்டேன். மனநிலைக்குத்தகுந்த மாதிரித்தான் கேட்கிற குரல் செவினுழைந்து வேலைசெயும்போல. ஜானகி இன்பம் பொங்க ஒரு காதல் குரலில் பாடினாலும் மனம் பொங்கி விடுகிறது. மிக லேசான சோகம் என்றால் கண்ணில் நீர். "பூவுக்குள்ள வாசம் வெச்சான்.. பாலுக்குள்ள நெய்ய வெச்சான்... கண்ணுக்குள்ள என்ன வெச்சான்.. பொங்குதடி ஏம்மனசு... " ஜானகியின் குரல் இதய நாளங்களை பொங்கச்செய்கிறது. மறுபடியும் " என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்.. " என்கிறார். கண்களில் நீர் கோர்க்கிறது. என்ன கருமம்டா என்றுவிட்டு பாடலை மாற்றினேன். வந்தது பாருங்கள் ஒரு பாட்டு. இதற்கு முன் கேட்டதில்லை. "ட்ரிங் .. ட்ரிங் .. சிக்குபுக்கு.. " என்று தொடங்கி ஒரே துள்ளல். எந்த படம் என்று தெரியவில்லை. பாடியது யார் என்று தெரியவில்லை. சரணத்தின் முடிவில் சென்னையின் இரண்டாவது பிரதான வாக்கியமான 'OK வா?' என்கிற பதத்தை (முதல் வாக்கியம் "ச்சான்சே இல்ல") அவர் உச்சரிக்கும் போது எதுக்கும் சரி என்று சொல்லிவிடலாம் போல. இவ்வைகையான துள்ளலிசை (இவ்வார்த்தை உபயம் கோடை பண்பலை) கேட்கும் போது குப்பையை கிளறிக்கொண்டிருக்கும் கோழியை நொடிகளில் வன்புணர்வு செய்யும் சேவலாய் உணர்கிறேன். என் ஆணாதிக்க மனநிலையை நண்பர்கள் மன்னிக்க வேண்டும். மொத்த மனநிலையையும் மாற்றவல்ல இப்பாடல் வரிகளை அதன் இசை நுணுக்கத்தை கண்டு பெருவியப்பு கொள்கிறேன். டி. ராஜேந்தர், ஆர்.வி. உதயக்குமார் போன்றவர்களின் பாடல் வரிகளை மனம் கடுமையாக மிஸ் பண்ணுகிறேன். "I miss you" என்கிற வாக்கியத்தை எப்படி தமிழ் படுத்துவது என்று தெரியவில்லை. வைரமுத்து தொடங்கி முத்துகுமார் வரை எல்லோரும் ஒரே மட்டைகள். இருப்பது வேறு குளம் என்கிற பெயரில் சாக்கடை. எதையோ தொடங்கி இங்கு முடிக்கிறேன்.. !

9 comments:

சிவாஜி சங்கர் said...

ஆதிரன் சார்...,
நானும் இதுபோன்ற நிலைகளுக்குள் ஆள்கொள்ளப்பட்டதுண்டு..
கூழாங் கற்கள் தொண்டைக்குழியில் சொருகி நிற்பதாக தோன்றும்..
இதையே நானும் புலம்பி இருக்கிறேன்..
ரசமிழந்த கழிவறை கண்ணாடியில் என் பிம்ம்பம் பார்த்தலின் வெறுப்பு....
எல்லாவற்றையும் சேர்த்து flush செய்தபின்
மீண்டும் நான் நாளைக்கு தயாராகிறேன்.. :( :((

par said...

இசை கேட்பது என்பதே திருட்டு இசை கேட்பதாகி எது யாரென்று தெரியாதென்றாகிவிட்ட இத்தருணங்களில் வைரமுத்து, முத்துக்குமார் என இனம் பிரித்து அவர்களை திட்டவும் முடிவது பாராட்டப்பட வேண்டிய செயலே.

முன்போல் இல்லாவிட்டாலும் வைரமுத்து இன்னும் மற்ற பாடலாசிரியர்களை விடப் பரவாயில்லை என்பதே என் எண்ணம். ’ஒம் முதுகைத் தொளச்சு வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு; என்ன வழி?’ என்பது சங்கப் பாடல் என்றால் நம்பிவிடுவேன்.

கடைசியாக நான் ரசித்த வைரமுத்து பாடல்: ‘மைய்யா மைய்யா’ (குரு). தமிழின் இரண்டாம் சிறந்த Item Song. (‘பளிங்கினால் ஒரு மாளிகை’ முதல்.)

எல் கே said...

old is gold.. how are u sir

adhiran said...

thanks sivaji sankar, parth.

karthik, fine thank you. :-))

வசுமித்ர said...

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டேன். தனியாக எவரும் இல்லை என நான் உணர்ந்துகொண்டேன். அதையும் விட ஒருத்தனும் ஒருத்தியும் தனக்குத்தானே உறவாட முடியாத, நேர்மையாய் இருக்கமுடியாத அவலத்தையும் கண்டுகொண்டேன். எல்லோருக்கும் எல்லாரும் தேவைப்படுகிறார்கள். தங்களுக்கு தாங்களைத்தவிர. தனக்குள் பேசமுடியாத அல்லது குற்றத்தை அகவிழிகொண்டு அணுக முடியா மனங்களே நட்பை தூக்கி வைக்கிறது. எந்த நட்பில் அந்தரங்கம் முழுக்க பகிரப்பட்டிருக்கிறது, அது எந்தளவுக்கு சாத்தியம் என எனக்குத் தெரியவில்லை அழுகிக்கொண்டிருக்கிறது நட்பு. வெறும் வாயால் மெல்லும் எந்த வார்த்தையும் மலத்தை ஒத்ததாக இருக்கிறது. என்னைச் சுற்றி நான் காணும் அனைத்தும் என்னை மிரட்டுகிறது. எல்லாவற்றையும் விட நானும் சம அளவில் அனைத்தையும் மிரட்டிக்கொண்டிருக்கிறேன் என அறிந்து தொலைத்த வாதை என்னை எதையும் அணுகவிடாமல் செய்கிறது. துக்கமும் உணமையும் இரு வேறு பக்கங்களல்ல ஒரே பக்கம்தான். மனிதன் உண்மையின் முன் நிறக்குருடாய் மாறுகிறான். வர்ணங்கள் மதியவெயிலில் கண்கூச அலைகின்றன. எதையாவது பற்றிக்கொள்ள அலையும் கரங்களில் சகமனிதன் குரூரத்தோடும் காதலோடும் விரல்களை நீட்டிப்பற்றுகிறான். நட்பு பெரும் ஆபாசமாய் உடலின் தோல்களையும் கிழித்துக்கொண்டு நடனம் புரிகிறது. ரசிக்கும் விழிகளில் அதன் குருதி தெறிக்க முகத்தை அழுந்தத் துடைக்கிறேன். தற்கொலையை விதைக்கும் சொற்களைத்தான் என்னால் நடமுடிகிறது என்பதை வருத்தத்துடனும், துரோகம் கொப்பளிக்கும் கயவனின் விழிகளோடும் அதற்கு சற்றும் குறைவில்லாத கொண்டாட்டத்துடனும் சொல்கிறேன்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கிறது. என்ற அறிவுதான் எல்லோருக்கும் தெரிய மறுக்கிறது. அதன் முன் கண்களை இறுக கட்டிக்கொண்ட பூனையாய் நானும் அலைகிறேன். பூனைகளுக்கு மனித நீதி பொருந்துவதேயில்லை. பொருந்திப்போகும் பட்சத்தில் எனக்கு மயிர்நிறைந்த வால் அநாவசியம்.

ஆமென்.

adhiran said...
This comment has been removed by the author.
adhiran said...

மீள்வரவிற்கு நன்றி வசு.

//ஒருத்தனும் ஒருத்தியும் தனக்குத்தானே உறவாட முடியாத, நேர்மையாய் இருக்கமுடியாத அவலத்தையும் கண்டுகொண்டேன்.//

மீண்டும் என்னைக் குழப்புகிறாய். இதில் நீ சொல்லும் 'நேர்மை' என்பதை விளக்கமுயுமா?

//எல்லோருக்கும் எல்லாரும் தேவைப்படுகிறார்கள். தங்களுக்கு தாங்களைத்தவிர. //

உண்மைதான். தேவைப்படும் நேரமும் காலமும் மட்டுமே வேறுபடுகிறது. தெருவில் போகிற அல்லது வேறுஇடங்களில் வாழ்கிற அல்லது தூரதேசங்களில் வாழுகிற சகமனிதர்களின் மீது ஏற்படுகிற பேரன்பும் நேயமும் தினம் காணமுடிகிற உறவுகளிடமும் நட்புகளிடமும் காண்பிக்கமுடியாத காற்புள்ளிகளாகவே இயங்குகிறோம். கடைசியில் நம் தேவை என்னவென்றால்.. "நான் எதுவேணாலும் செய்வேன்.. நீ மூடிக்கிட்டு இரு.. " என்பதுதான்.

//தனக்குள் பேசமுடியாத அல்லது குற்றத்தை அகவிழிகொண்டு அணுக முடியா மனங்களே நட்பை தூக்கி வைக்கிறது.//

எந்தவொரு தனிமனித பிரச்சனைக்கும் ஒரு குற்றச்செயல் தீர்வாகும் இவ்வமைப்பைக்கண்டு கலவரம் கொள்கிறேன். அமைதி.

//எந்த நட்பில் அந்தரங்கம் முழுக்க பகிரப்பட்டிருக்கிறது//

எதிலும் இல்லை. ஆனால் அந்தரங்கம் என்பது பாலியல் சிந்தனைகள் அன்றி பிறிதொன்றுமில்லை என்பதை நானும் நீயும் அறிவோம். எல்லோருக்கும் எல்லாம் தெரியும். அல்லது... அல்லது சிலருக்கு எதுவுமே தெரியாது. சாத்தியக்கூறுகளின் அதிசயம் அது.

நிறக்குருடு நல்ல படிமம் வசு.. தெரியும்... ஆனா தெரியாஆது...!!

வசுமித்ர said...

அந்த ஒருத்தன் இன்னொருத்திக்கும் அந்த ஒருத்தி இன்னொருத்தனுக்கும் நேர்மையாய் இருக்கமுடியாது கூசிச்சிறுத்தலையும் கணம்தான் நேர்மை. நேர்மை என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் எப்போதெல்லாம் அயோக்கியத்தனமாய் உணர்கிறோமோ அப்போதெல்லாம் நம் முகத்தில் காறித்துப்பவைக்கும் ஒன்றுதான் நேர்மை. சுய விமர்சனம் தற்கொலைக்குச் சமமானானதல்லவா....

par said...

Feels like reading other's mails :)