01 October, 2010

வானவில்வண்ண மின்னல் 3

ஆண் பெண் நட்பின் தேவையும் நோக்கத்தையும் விளக்கியதும் அதன் தத்துவத்திற்கு செல்லலாம் என்கிறான் வசு. நல்லது. ஆனால் நான் அறிமுகமற்றவர்களின் புதிய தொடர்பில் உள்ள நடைமுறைச்சிக்கலை பற்றி தொடங்கியிருக்கிறேன். இந்த உரையாடல் ஆண் பெண் நட்பை பற்றி மாறும்போது அவ்வகையான தேவையையும் நோக்கத்தையும் விவாதமாக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு எளிய நடைமுறை சிக்கலில் இருந்து வலுவான உளவியல் பிரச்னைக்கு இட்டு செல்லும் எண்ணமே இதுபற்றி நான் எழுதும்போது நினைத்தது. அது அவ்வாறே ஆகுக. மேலும் இதில் தத்துவத்தை உடனடியாக உள்நுழைக்க தேவையில்லை வசு. சிக்கல் என்னவென்றால், ஒரு ஆணோ பெண்ணோ நேரடியாக ஒரு அறிமுகமில்லாத நபரிடம் நட்பு பாராட்ட எத்தனை தூரம் வாய்ப்பு இருக்கிறது?

// இவர் குறிப்பிட்டிருக்கும் வானவில் நிகழ்சியில் நட்பின் தேவையா தெரிகிறது. ஆணின் பாலியல் பார்வை தான் தெரிகிறது. பெண்களுக்கு தங்கள் அழகு / தோற்றம் சார்ந்து கிடைக்கும் அறிமுகம் / அங்கீகாரம் என்பது இருப்புநிலையை உயர்த்தும் ஓர் விஷயமாக ஆண்கள் தோற்றுவித்திருக்கிறார்கள். அதுவே பெண்களின் உடனடி ரெஸ்பாண்சிற்கு காரணம்... பார்க்கும் பெண்களிடமெல்லாம் நட்பு ஏற்படுத்திக்கொள்ள துடிக்கும் எண்ணம் ஏற்பட்டால் அதற்கு நட்பு ஆசை என்று கூற முடியாது //

கொற்றவை சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். அதில் அறிமுக விசயத்தில் பார்க்க இயலாது. ஒரு பெண் ஒரு ஆணிடம் நட்பு அல்லது ஆசை என்று ஏதாவது தோன்றினால் அது எவ்வழியில் குற்றமாகிவிடும்? ஆனால் ஆணின் மனது இங்கு நீங்கள் சொல்லியவாறே மோல்ட் செய்யப்பட்டிருகிறது. பெண்களின் உடனடி ரெஸ்பான்ஸ் என்று நீங்கள் எதை குறிப்பிட்டீர்களோ அதைத்தான் நான் பாதுகாப்பு உணர்வு என்று சொல்லுகிறேன். இதில் ஆணாதிக்க தொனி என்னிடமிருந்து வரவில்லை என்பதை பதிவு செய்கிறேன். ஆனால் நான் எழுதிய அந்த வாக்கியத்திற்கு அப்படியும் அர்த்தம் கொள்ளலாம் என்கிற போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. நல்லது. உங்களிடமும் அதே கேள்விதான். புதிய நபர்களை காரணமும் சூழலும் இல்லாமல் அறிமுகம் செய்து நட்பு பாராட்ட இங்கே வகை இருக்கிறதா? அப்புறம் வசுபாரதி என்றே மூளையில் பதிவு. மாற்ற வேண்டாமே. தனிப்பட்ட பிரச்சனை ஏதும் இல்லையே? நன்றி.
பத்மா.. நீங்கள் என்னை குழப்புகிறீர்கள். நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற போது ஒரு ஆண் உங்களிடம் வந்து உங்களிடம் பேசவேண்டும் போலிருக்கிறது .. காப்பி சாப்பிட்டுகிட்டே பேசலாமா என்று கேட்டால் உங்கள் மனநிலை என்ன. எனது மனைவி அந்த மாதிரி எங்கிட்ட பேசுனா அடிவிழும் என்கிறார். இதுதான் பொதுபுத்திக்கு நல்ல உதாரணமாக நினைக்கிறேன். (அப்படி நிஜத்தில் அடிக்கமுடியாது என்பதும் வேறு விவாத பொருள்).
அப்படி என்றால் நான் எந்த யுகத்தில் இருக்கிறேன். அப்படி ஒன்றும் மேற்கத்திய நேர்மறையான கலாச்சாரம் என்கண்ணில் படவில்லையே. நீங்கள் கேள்விபட்டிருந்தால் சொல்லி உதவுங்கள்.

//பல விதமான exploitation நிலவுகிற இந்தக் கணினி யுகத்தில் அறிமுகமில்லாத ஆணிடம் பெண் கொள்ளவேண்டியது எச்சரிக்கை, நட்பல்ல.. இத்தொடர்புகள் நல்ல நட்பில் முடிய வாய்ப்புகள் குறைவு. // கொற்றவையின் கூற்றில் எனக்கும் சம்பந்தம் தான். எச்சரிக்கை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதுதான் எனது கேள்வி. இங்கே எச்சரிக்கைக்கும் பாதுகாப்பு உணர்வுக்கும் என்ன வித்தியாசம்?

அதுசரி நான் நீலத்தில் வண்ணமாக்கியிருந்த ஒரு கூற்றைப்பற்றி என்ன நினைக்கிறாய் வசுபாரதி?

.................................................................. தொடருங்கள் ...

2 comments:

கொற்றவை said...

//ஆக, சமூக மனமும் பொதுப்புத்தியும் தான் இங்கு தனிமனித இருப்பாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அடிப்படை. இதன் பொருள் என்னவென்றால் ஒரு தற்செயல் நிகழ இடமும் காலமும் தேவை// - இந்தக்கூற்று, தொடர் விவாதத்துக்குறிய சரியான கேள்விகளை எழுப்புமாறு அமையவில்லையோ என்று தோன்றுகிறது... தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்? நாம் வாழ்வது கூட்டுச் சமுகம் 'everything will be imbibed' இங்கு சவால் என்னவென்றால் நாம் கற்றுக்கொண்டவையும், நடைமுறைப்படுத்துவனவும் எவ்வித அரசியல், பொருளாதார, சமூகப் பிண்ணனியிலிருந்து நமக்கு தரப்பட்டது என்று கண்டுணர்வது. அப்பொழுது நாம் நமக்கான பார்வை என்பதை வகுத்துக்கொள்ள முடியும் என்று நிணைக்கிறேன். "We are all Social Animals". ஒரு பிரச்சனையில் தீர்ப்பு வழங்க நீதிமன்றம் ஏன் தனிமனிதத் தேவை என்பதை விட சமூகப் பார்வையை கணக்கிலெடுக்கிறது? இன்று ஒரு தனி மனிதன் செய்யும் செயல், நாளை ஒரு குழு செய்யும், பின்பு பெருங்கூட்டம் அதைத் தொடரும்...அது வழக்கமாக மாறி..பின்பு கருத்தாக மாறி, விதியாக மாறி போய்க்கொண்டேயிருக்கும்...இல்லையா?

கொற்றவை said...

மகி, படைப்பு என்பதைப் பற்றி சில விவாதங்களை எழுப்பலாம் என்றிருக்கிறேன். எந்த உற்பத்தியும் / படைப்பும் மனிதர்களின் பயன்பாட்டுக்கு அவசியம் என்று கருதலாமா? அதுவல்லாத ஒன்று விரயமில்லையா? மேன்மைக் கலை, பொழுதுபோக்கு படைப்பு என்பதெல்லாம் யார், யாருக்காக தோற்றுவைத்தது? பணம் படைத்தவர்களுக்குத்தான் பொழுதுபோக்கு, மேன்மை ரசனை என்றவையெல்லாம் வள்ர்த்துக்கொள்ள சூழலும், பொருளாதாரமும் இருக்கிறது. பசியில் வாடுபவனுக்கு? பாட்டாளிக்கு? தொழிலாளிக்கு?
சமூக புரட்சிகளுக்கு வித்திட்டு, நிலவும் சமச்சீரற்ற பொருளாதார சூழலை சரியாக சுட்டிக்காட்டியும், மாற்றுவழிகளை முன்னிறுத்தியும் சமுதாயப் பொறுப்புணர்வோடு சிந்தனையாளர்கள் பல்வித நெருக்கடிகளுக்கிடையே (உணவுக் கூட கிடைக்காமல்) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக கையாண்ட ஊடகம் படைப்பு/இலக்கியம்/எழுத்தென்பதாக கருதலாமா? அத்துறையை பொழுதுபோக்கிற்கும், networking ற்காகவும், அறிவைப் பறைசாற்றிக்கொள்ளவும், மொழி ஜாலங்களைக் காட்டிக் கவரவும் பயன்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்?
வசீகர எழுத்தின்மூலம் கூட்டங்களை சேர்க்க நிறையப்பேர் எழுதுகிறார்கள்...அவைகளின் சமுதாயப் பயன் என்ன?
கவிதை என்பதைக் கூட வெறும் மொழியியல் /அழகியல் tool ஆக கருதாமல், அதிலும் சமுதாயப் பிரச்சனைகளை எழுதியவர்களின் நோக்கம் / தேவை என்னவாக இருக்கும்? – what is the demand for creation?
Blog is just a social networking medium என்று நீங்கள் கருதுகிறீர்களா? எல்லாவற்றிலும் அறிவைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவர், ஒரு இலைக்கியப் படைப்பு என்று நம்பி blog இல் Just like that எழுதப்படும் விஷயங்களை / கவிதைகளைப் படிப்பது நேர விரையம் ஆகாதா, அவர் ஏமாற்றத்திற்கு ’சும்மா எழுத்துக்கள்’ என்ன பதில் தரும்?