17 October, 2010

வானவில்வண்ண மின்னல் 5

அறிமுகமில்லாத ஆண்<> ஆண் நீங்கள் சொல்வது போல "நான் இன்னார் உங்களுடம் பேச விரும்புகிறேன் "என்று பேச தொடங்க இங்கே வாய்ப்பிருக்கிறதா என்றால் தெரியவில்லை அல்லது சந்தேகமே .. ஆண் டு ஆண் பேசத் தொடங்கவே ஏதோ ஒரு காரணி தேவை படுகிறது, பேருந்து நிறுத்தத்தில் இப்படியகத்ன் தொடங்கலாம் . " இந்த பஸ் எத்தன மணிக்கு வரும்ண்ணே".. ரயில் பெட்டியுனுள் வேறு வழியின்றி போழுதுதை கழித்து தொலைப்பதற்காக "எங்கே போறீங்க ? எத்தனமணிக்கு ட்ரெயின் போய் சேரும் ? போன்ற மொக்கையான உரையடலகளிலேயே துவக்க வேண்டிய கட்டாயம். முற்றிய தேங்காயை பட்டென்று உடைப்பது போன்று நீங்கள் சொல்லும் "நான் இன்னார் பேச விரும்புகிறேன் ".. முடியாது .. ஒரு ஆணுக்கு ஆணே " குழம்பி விடவும் , நிராகரிக்கவும், பயந்து ஒதுங்கவும் வாய்ப்பிருக்கிறது.. ..
ஒன்னே ஒன்னு சொல்றே ண்ணா . இந்த முறை ஊருக்கு வந்துதுட்டு திரும்பும் போது ஏர்போர்ட்ல போடிங் முடிச்சுட்டு கேட் ஒபென்க்காக நின்னுட்டு இருந்த போது ஒரு நடிகை ..இப்போ பல படங்கள்ல ஹீரோக்கு அம்மாவா நடிக்கிறவங்க . கேட் ஓபன் ஆகி ப்ளைட்டுக்கு போறதுக்கு பஸ்ல ஏறி உகார்ந்த போது என் பக்கத்துல அவுங்க " சௌகரியமா மேம் , மலேசியால ஏதும் சூட்டிங் போறீங்களா ? அங்கேருந்து வந்த பதில் மேலும் கீழுமான தலையாட்டல் ஒன்று. பல் தெரியாமல் இடவலப்பக்கங்கள் உதடுகளை இழுத்தார் போன்று சிரிப்பு ஒன்று ( நாம அத சிரிப்புன்னு ஒத்துகிட்டுதான் ஆகணும்) -
தம்பி பாலமுருகனின் பின்னூட்டமிது. நன்றி. நான் தொடங்கிய விஷயத்தை நேரடியாக புரிந்து கொண்டு தனது கருத்தை சொல்லியிருக்கிறார். ஆணுக்கு ஆணே கஷ்டம் பின்ன எப்படி ஆணுக்கும் பொண்ணுக்கும்? இன்னும் தெளிவாய் ஜெகநாதன் எழுதியிருக்கிறார். அவருக்கும் நன்றி.

கொற்றவை: //மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான்.// - மனிதர் ??

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை,// - முரண்
Time is Precious Maki..தொடருங்கள், வாழ்த்துக்கள்.


மனிதர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். முடிந்த மட்டும் மனிதனை தவிர்க்க முயல்கிறேன். மேற்சொன்ன வரிகளில் உங்களுக்கு என்ன முரணாக தெரிகிறது என்பது எனக்கு புரியவில்லை. பொன்னான நேரத்தை காரணம் காட்டி வாழ்த்து சொல்லி விலகிவிட்டீர்கள். நன்றி.

வசு : குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் மகி. கலைக்கு வர்க்க பேதம் இல்லை என்ற உங்களின் கண்டுபிடிப்பு மெச்சத்தக்கது.ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை....என்ன மகி...இது உங்களுக்கே வெளிச்சம்.
குழப்பத்தில் இருப்பது தவறான நிலை அல்ல என்பது நாம் அறிந்ததுதான்.கலை என்கிற ஒரு நிகழ்வை பொதுமைபடுத்தி அந்த வாக்கியத்தை எழுதியிருக்கிறேன். வர்க்கங்கள் தங்களுக்கு உண்டான வெளியையும் உபகரணங்களையும் கொண்டு இயங்கும்போது கலை அடையும் வித்தியாசங்களை நான் குறிப்பிடவில்லை. //ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை// இது மார்க்சின் இறுதிதேவையை நான் புரிந்துகொண்ட விதம். ஒட்டுமொத்த சுதந்திர மற்றும் தேவைக்கேற்ற ஊதியம் என்கிற முடிவு நிலை நோக்கிய அறிவுப்பயணம் என்பதை நான் சுட்டுகிறேன்.

தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

இதை தயை கூர்ந்து விளக்கவும்.


தனிமனித மனம் சாத்தியமற்று போய்விட்டது என்பதும் கூட்டு அல்லது தொகுப்பு மனமே சமுதாய நிலை ஆகிவிட்டது என்பதும் மார்க்சிய சிந்தனை என்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டுள்ளேன். தனிமனித சாத்தியமற்ற சமூகத்தில் ஒரு தனிமனம் சமுதாய பொறுப்புணர்வை எங்கனம் உருவகிக்கும் என்பது எனது கேள்வி. புரிதல் தவறென்றால் விளக்கலாம்.

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, இதுதான் மகி பாஸிசம். //

இது பாசிசமாக இருக்க சாத்தியமில்லை. நான் சொல்வது எளிய விளக்கம். பசித்தவனுக்கு உடனடி தேவை உணவு. அவனுக்கு அந்த நேரத்தில் உணவு கிடைக்க சமூகத்துள் என்ன செய்யவேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. அவன் கலை என்பதை நிகழ்த்திக்காட்டி உணவு தேட முடியுமென்றால் அதுதான் நகைமுரண்.

//எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம். // மகி...please.... //தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்! //
ஒரு கொலை,கொள்ளை, கற்பழிப்பு செய்து விட்டு கவிதை எழுதினால் போச்சு...வேறென்ன....நல்ல புரிதல். //


என்ன சொல்ல வருகிறாய் வசு, கொலை கொள்ளை என்பது பணத்துக்காகவே என்பது தவிர்த்து அனைத்து கொலைகளும் கொள்ளைகளும் இன்ன பிற குற்றங்களும் உளவியல் சிக்கல் கொண்டவை என்பதை அறியாதவனல்ல நீ. கலைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்னவென்பதை இதன் நீட்சியில் ஒரு விவாதமாக்க விரும்புகிறேன். கொலையும் தற்கொலையும் கலையின் அப்பட்ட முடிவாய் இருப்பதை பல சந்தர்பங்களின் நாம் கண்டுணர்ந்திருக்கிறோம்.கற்பழிப்பு என்பது உடல் மீதான ஆகக்கடுமையான வன்முறை மட்டுமே மாறாக இருக்கிற ஒன்றை அழிக்கும் செயல் அல்ல என்று தோன்றுகிறது. 'வன்புணர்ச்சி' என்பது சரியான சொல். அதற்கும் நமக்கு, 'சமுதாய உளவியலின்' பங்கு என்ன என்பதை பற்றி விவாதிக்க தேவை இருக்கிறது. உன் பார்வை என்ன சொல்.. சமுதாயத்தில் இன்றைக்கு தனிமனித மனம் சாத்தியமானால் அது எங்கனம் இருக்கும் தன்னை அது எவ்வாறு வெளிபடுத்திக்கொள்ளும்? இதை வசு மட்டுமே பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. படிப்பவர்களும் எழுதலாம்.
*************
தொடருங்கள்...

*********************

4 comments:

வசுமித்ர said...

மானம் குலக்கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் போம் பறந்து.
- ஒளவை

அன்பு மஹி....பசியின் ஆழத்தை இதை விட விரிவாகப் பேச முடியுமா எனத் தெரியவில்லை. குழப்பத்தில் இருப்பது தவறான நிலை அல்ல என்பது நாம்அறிந்ததுதான்.
அது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் குழப்பத்தில் ஒன்றை தவறாகப் புரிந்துகொண்டு எழுதுவதை என்ன சொல்வது.

கலைக்கும் கொலைக்குமட்டுமல்ல...கொலை குற்றங்கள் இன்னும் ஏதாவது காரணத்துக்காகக் கூட இருக்கலாம்...நீங்கள் பேசும் இலக்கியம் குற்றச்செயல்களைக் கலையின் வழியாகப் பார்த்து அதற்கு உன்னத இடத்தைத் தருகிறது. மஹி... வான்கோ காதை அறுத்துக் கொண்டால்...அது கலையின் உன்னதம், பக்கத்து வீட்டுக்காரன் தன் காதலிக்காக கையை அறுத்துக்கொண்டால் அது பைத்தியக்காரத்தனம். இதுதான் கலை பொது வெளியில் சக மனிதனைப் புரிந்துகொள்ளும் இருப்பு.
“தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்டநிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாகஅமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனிதமனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும்இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.”

இதைத்தான் காலங்காலமாக மதமும் சொல்லிவருகிறது. சாந்தம்...தூய்மைப்படுத்தல், தன்னைத்தானே ஒழுங்காக வைத்துக்கொள்ளல்... இப்படி இத்யாதி... சங்கராச்சாரியரும் இதைத்தான் இன்னும் தெளிவாக.. அவா அவா திருந்துனா அவா லோகம் அற்புதமாயிருக்கும் என்கிறார், ஹிட்லரும் சொல்லுவார்...இதைத்தான் நானும் பாசிசம் என்று சொன்னேன். ஏனென்பது உங்களுக்குத் தெரியும் உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் மனித அமைதியைப் பற்றிப் பேசுவதில் வலுவான பிரியமுள்ளவை. அவைகளும் மார்க்சியமும் ஒன்றா...இவைகள் தனிமனிதக் குற்றங்களை தனிமனிதக் குற்றங்களாகவே கருதுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பிறவியையும் அதற்குக் காரணமாகச் சொல்லும். இத்தகு கருத்துக்களின் மேல்தான் மார்க்சியம் தன் அழகான கலைநயமிக்க செறுப்படியை வைக்கிறது. அதை விரிவாகப் படித்துப் பாருங்கள். மஹி நீங்கள் மார்க்சியத்தை மதமாகப் பார்க்கிறீர்கள் என்பது புரிகிறது..

”இதுகாறும் தத்த்துவ ஞானிகள் அனைவரும் உலகத்தை வியாக்கியானம் செய்துவந்திருக்கிறார்கள், பிரச்சினை என்னவென்றால் அதை மாற்றியமைப்பதுதான். – மார்க்ஸ். அதுதான் கூலி உழைப்பு மூலதனம் என்று விரிகிறது.


”என்ன சொல்ல வருகிறாய் வசு, கொலை கொள்ளை என்பதுபணத்துக்காகவே என்பது தவிர்த்து அனைத்து கொலைகளும் கொள்ளைகளும் இன்ன பிற குற்றங்களும் உளவியல் சிக்கல் கொண்டவை என்பதை அறியாதவனல்ல நீ. கலைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் உள்ளதொடர்பு என்னவென்பதை இதன் நீட்சியில் ஒரு விவாதமாக்க விரும்புகிறேன்


உளவியல் கூறோ...இல்லை விருப்பமோ ஒரு உயிரை வதைப்பது தவறுதான் இதை விரிவாகப் பேச வேண்டிய அவசியமில்லை ததாகனின் எல்லயற்ற மைத்ரி அதைத்தான் தன் வாயால் சலிக்காது கூறிக்கொண்டிருக்கிறது.

”தனிமனித மனம் சாத்தியமற்று போய்விட்டது என்பதும் கூட்டு அல்லது தொகுப்பு மனமே சமுதாய நிலை ஆகிவிட்டது என்பதும் மார்க்சிய சிந்தனைஎன்பதை நான் இவ்வாறு புரிந்துகொண்டுள்ளேன்.”

தனிமனித மனம் என்றால் அதற்கான முதற்கட்ட தேவை என்னவென்று விளக்கவும். பிறகு அது பற்றி நாம் விவாதிக்கலாம். இன்னும் நீங்கள் நிறைய புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். புரிந்துகொள்ளுங்கள்.

”சமுதாயஉளவியலின்' பங்கு என்ன என்பதை பற்றி விவாதிக்க தேவை இருக்கிறது. உன் பார்வை என்ன சொல்.. சமுதாயத்தில் இன்றைக்கு தனிமனித மனம்சாத்தியமானால் அது எங்கனம் இருக்கும் தன்னை அது எவ்வாறு வெளிபடுத்திக்கொள்ளும்? ”

தனிமனிதன் எப்பொழுதும் சாத்தியமில்லை. அப்படி இருப்பின் அவனைப் பற்றி இந்த உலகுக்கும் கவலையில்லை. தனிமனித மனத்துக்கு பித்து நிலையை, மனப் பிறழ்வை எடுத்துக்காட்டாகக் கூறலாம், ஆனால் அது அவன் தனிமனித மனத்தினாலேயே ஆனதில்லை. அதற்கும் நாம்தான் அதவாது சமூக மனம்தான் பொறுப்பேற்க வேண்டும். மனித மனம் பயன்பாட்டுக்குரியது. ஒரு பூனைக்கு தனிப்பூனை மனம் இருக்கும் என்றால் அதனால் மற்ற பூனைகளுக்கு எந்தப் பயனுமில்லை.

கொற்றவை said...

மகி, நாம் வெளி விடும் சொற்களுக்கு நாம் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்பது நான் கற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக பொது தளத்தில்..போகிற போக்கில் எதையாவது எழுதலாம் என்பது எழுதுபவரின் பார்வையாக இருந்தாலும் அதைப் படிப்பவரிடம் அவ்வெழுத்துக்கள் எதோ ஒரு தாக்கத்தை எற்படுத்தும் வாய்ப்பிருப்பதால் நேரம் எடுத்து, ஆராய்ந்து, யோசித்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான நேரம் எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது சில நேரம். அதனால் தான் நேரம் குறித்து குறிப்பிடு விலக நிணைத்தேன்.. மற்றபடி இது நல்ல உரையாடல் தளமாக நகர்ந்து கொண்டிருக்கிறது...

கொற்றவை said...

//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை,// - முரண்// என்ன முரண் என்று கேட்டிருக்கிறீர்கள் - பசி என்பது ஒரு கூட்டத்தின் பிரச்சனையாகவும், கலை என்பது ஒரு கூட்டத்தின் சொந்தமாகவும் நிர்ணயிப்பது எது அல்லது யார்?

கொற்றவை said...

//அவன் கலை என்பதை நிகழ்த்திக்காட்டி உணவு தேட முடியுமென்றால் அதுதான் நகைமுரண்.// - கலை என்றால் என்ன? விவசாயம் (அல்லது அது போன்ற உடலுழைப்பு) கலை ஆகுமா? தெருக்களில் ஒயிலாட்டம் ஆடுபவருக்கும், நாரத கான சபாவில் பரதம் ஆடுபவருக்கும் கிடைக்கும் பணம் அல்லது பொருள் அல்லது புகழ் ஒரே அளவாக இருக்குமா? இவருள் யாரை சமுதாயம் கலைஞர் என்று புரிந்துக்கொள்ளும்.

ஆண் பெண்ணுக்கிடையே அறிமுகமில்லாத நட்பு தொடங்குவதற்கு, சமுதாய தீர்மானங்களின் மறைமுக தாக்கம் குறித்து தொடங்கியிருந்தீர்கள் இவ்விவாதத்தை..ஒரு தனிமனித செயல் அல்லது சிந்தனை எவ்வாறு கருத்தாக மாறுகிறது என்பதை கட்டுடைத்தல் உதவும் என்று நிணைக்கிறேன். மேலும், கூட்டு சமூக வாழ்க்கையில் 'Dependency' and 'Evolution of Thoughts' என்பதை விரிவாக பேசவேண்டும்.