27 November, 2010

வானவில் வண்ண மின்னல் 8


தேஜா உடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். 'மகி.. உனக்கு பேய் பிசாசு மேல நம்பிக்கை இருக்கா' என்றான். 'கடவுள் மேல நம்பிக்கை இல்லை' என்றேன். 'எதுக்கும் நேரடியா பதில் சொல்லமாட்டியா நீ..' என்றான். 'ரெண்டும் ஒண்ணுதாண்டா.. கடவுள் மற்றும் சாத்தான். கடவுள் இல்லையென்றால் பேய் பிசாசு இல்லை அல்லது பேய் பிசாசு இருந்தா கடவுள் இருக்கார்.. என்றேன். "கடுப்பேத்தாத மகி.. மேட்டருக்கு வா.. பேய் பிசாசு இருக்கா இல்லையா.. " என்றான். "தெரியலடா.. ஒரு வேள இருந்தா அதுக்கு சரியான ஒரு அறிவியல் காரணம் இருக்கும்..நாம இருக்கோம் இல்லையா .. அதாவது மனுசங்க இருக்காங்க இல்லையா .. அதுக்கான அறிவியல் காரணம் இருக்கு.. இப்போதைக்கு எனக்கு இந்த எண்ணம்தான் ஒரு சமரசமில்லாத உண்மையா தோணுது..மனிதன் நேரடியா மனிதனா வரலை.. அவன் ஒரு பரிணாம வளர்ச்சி .. உயிர்களின் பரிணாமம் என்பது பொதுவான டார்வினிய கோட்பாடு..பிரபஞ்சம் எல்லாம் வேதிப்பண்புகளும் அதன் வினைகளும் மட்டுமே அப்பிடின்னு சொன்னால் நம்மளோட மொத்த இருப்பின் கொடும் அபத்தம் கொஞ்சம் புரியலாம்.. ஒரு வெடிப்பு ஒன்னும்இல்லாததிலிருந்து. அந்த மகா வெடிப்பு இன்னும் முடியல.. அந்த வெடிப்பின் விளைவுக்குள்ள இருக்கிறது நமது பூமி.. அதுக்குள்ளே நம்ம இருப்பு! ஒரு சரஸ்வதி வெடி வெடிச்சு அதுல சுத்திக்கிட்டு இருக்கிற காகிதம் சிதறி போய் எங்கயாவது விழும் அந்த காகிதத்துல ஒரு வாழ்க்கை இருந்ததுன்னா எப்படி இருக்குமோ அதுமாதிரிதான் நம்ம வாழ்க்கையும்..இதப்பத்தி யோசிக்கும் போது தலைசுத்தும்.."

"ஏன் இப்படி யோசிச்சு உடம்ப புண்ணாக்கிக்கிற.. " என்றான் தேஜா.

"நெசந்தாண்டா.. சிந்தனையும் ஒரு வெடிப்பு மாதிரிதான் மனுஷனுக்கு.. ஒரு பொறி கிளம்பிடுச்சுனா சாகுறவரைக்கும் இம்சைதான்..அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் .. " என்றேன்.

"அப்ப உனக்கு அறிவு பெருத்துப் போச்சுன்ற.. "

"அறிவுன்னா இங்க ரெண்டு விதமா சொல்லலாம் தேஜா.. ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிறது ஒரு வகை ஒரு விஷயத்தை புருஞ்சுக்கிறது இன்னொரு வகை .. உதாரணத்துக்கு அமெரிக்க அதிபர் யார் என்றால் ஒபாமா அப்பிடின்னு தெரிஞ்சுக்கிறது ஒரு அறிவு.. அதே நேரம் ஒபாமா எப்படி அமரிக்க அதிபரானார்னு புரிஞ்சுக்கிறது இன்னொரு வகை இந்த உலகத்துல தெரிஞ்சுக்கிற அறிவு பணத்த கொடுக்கும் புரிஞ்சுக்குற அறிவு பணத்த எடுக்கும்..புரிஞ்சுக்கிறது என்பதுதான் வலி.. அதுதான் பெருத்த நோவு.. "

" ஏன் படுத்துற இப்படி.. நான் என்ன கேட்டேன்.. உனுக்கு அறிவு கீதா இல்லாங்காட்டி லேதா..?

"தெரிஞ்சுக்கிற அறிவு இல்ல .. புரிஞ்சுக்கிற அறிவு இருக்கு.. "

"அறிவே.. எதப்புரிஞ்சுகிட்ட இப்ப நீ.."

"அது தெரிஞ்சிருந்தா ஒரு வேள நான் எப்பவோ பைத்தியமாகி சுத்திக்கிட்டு இருந்திருப்பேன்.. நீட்சே மாதிரி.. இல்லேனா ..."

"காந்தி மாதிரியா .. "

"இல்லை.. காந்தி மகாத்மான்னு அழைக்கப்பட்டவர்.. ஒரு சுதந்திர போராளி.. கடுமையான ஆயுதத்தை பிரயோகிக்கத் தெரிந்த கர்மவீரர்..போர்ப்படை தளபதி.. "

"கடுமையான ஆயுதமா.."

"ஆமாம் .. அதுக்கு பேரு அகிம்சை.. அகிம்சைய விட மிகபயங்கரமான ஆயுதம் இன்னொன்னு இருக்கு .. அதுக்கு பேரு அன்பு.."

"அதுசரி.. ஆரம்பிச்சுட்டியா .. பொழியாத உன்னோட தத்துவத்தை .. நிறுத்திட்டு டார்வினுக்கு வா .. " என்றாள்.

"சரி சொல்றேன்.. உலகம் தோன்றி உயிரினங்கள் தோன்றி பரவ தேவையான சூழலை இயற்கை உருவாக்கினதுக்கு அப்புறமா ஒரு செல் உயிர் முதல் ஒரு உடல் அமைப்பு உருவாகிற வரைக்குமான ஒரு நிகழ்வுப்போக்கு நடந்து முடிந்ததுக்கு அப்புறமா வளர்ச்சியின் உச்சபட்சமா பாலூட்டிகள் அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனங்கள் பூமியில் வாழ தகுதியானதாக இயற்கை தேர்வு செய்யுது.. அந்த சமயத்துல எல்லா வகையான மற்ற விலங்குகளும் தகுதிக்கு தக்க தண்ணியில போறதாகவோ தரையில போறதாகவோ பிரிஞ்சு வாழத்தொடங்க எல்லாவகையான பாலூட்டிகள் மட்டும் கட்டையில போச்சு.." என்றேன்.

"என்னது கட்டையில போச்சா..?"

"மரங்களில் வாழ தலைப்பட்டன... தேஜா கொஞ்சம் நீளமான பாராவா சொல்லப்போறேன் கவனம் ..என்ன? "

"நீ ரெண்டு வரி சொன்னாவே புரிமாடேணுது இதுல நீளமான பாரா வேறையா.."

"கேளுடா..பாலூட்டிகள் என்பதே சுவாரசியமா இல்லையா உனக்கு.. "

"சுவாரஷ்யமாதான் இருக்கு ஆனா நீ குடுக்கிற பில்ட்அப் கொஞ்சம் பயமா இருக்கு.."

"கேளு .. மொத்த பாலூடிகளும் மரங்கள்ல வாழ தொடங்கியதுதான் மனிதனின் வரலாற்றில் மிக ஆரம்ப புள்ளி.. இன்னைக்கு வரைக்கும் மரத்துல வாழ்ந்த படிமம் மனித DNA வில் படிந்திருக்கிறதுன்னு சொல்றாங்க.. இப்பவும் மனுஷன் தூங்கும்போது திடீர்னு உலுக்கி விழுற மாதிரி பீல் பண்றது மரத்துல இருந்து கீழ விழுரமாதிரியான ஆதி ஞாபகம்னு அறிவியல் சொல்லுது.. மரங்கள்ல வாழ்ந்த பாலூட்டிகள் பல்வேறு வகையான உடல் அமைப்புகளோட இருந்தது.. மரத்துல கிடைக்கிற இலைதளைகளும் பழம் கொட்டைகளும் போதாத பீல் பண்ண ஊன் உண்ணிகள் மற்றும் காலுல குளம்பு அமைப்போட இருந்த விலங்குகளும் மரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தரையில் வாழ ஆரபிச்சு அதற்கான புதிய உடல் அமைப்புகள காலப்போக்கில அமைசிகிடுச்சு.. உதாரணமா உறுதியான முன்னங்கால்கள், வேகமான ஓட்டம், அதிகப்படியான மோப்பசக்தி போன்றவைகள்.. அதே சமயம் மரங்களிலேயே இருந்ததுகளுக்கு குளம்போ கடுமையான மோப்ப சக்தியோ தேவை படல மாறாக கூர்மையான கண் பார்வையும் சமயோசித அறிவும் தேவை பட்டது அதுக்கு தகுந்த அமைப்பு அவைகளுக்கு வைக்க ஆரம்பிடுச்சு.. தாடை குறுகி மூக்கு அமைப்பு மாறி நகங்கள் தட்டையாகி பெருவிரல் மற்ற விரல்களுக்கு எதிரா திரும்பி ஒருவகையா மனிதக்குரங்கு வடிவத்துல உடல் அமைப்பு வர பல ஆயிரம் வருசங்கள் ஆச்சு.. கூடவே அதனோட மூளை பெருசாவும் மிக சிக்கலான அமைப்பாகவும் மாறியிருந்தது.. பிறகான ஒரு கால கட்டத்துல ஒரு சில பாலூட்டி இனங்கள் தனது வாழ்வு முறைய தரைக்கு கொண்டுவர இயற்கை உந்துதல் அடைஞ்சது.. அதுக்கு காரமணமாய் அவை முன்னங்கால்கள தூக்கிகிட்டு நிமிந்து நின்னு நடக்க முடியும்னு தெருஞ்சுகிட்டது என்பதாய் இருந்தது.. ஆனா தரையில வாழுறதுக்கு அது மிக மிக கடுமையான சோதனைகளை இயற்கையில எதிர்கொள்ள வேண்டி இருந்தது .. ஆனாலும் அதனுடைய மூளை அமைப்பு கொஞ்ச கொஞ்சமா எல்லாவற்றையும் புரிஞ்சுகிட்டு தனக்கான நிலையான வாழ்விடமா நிலத்தை தேர்வு செய்து கொண்டது..இனி தரையில தலைநிமிந்து பெரிய மூளை மற்றும் எதிர் திசையில் இயங்கும் கைகளோட இருக்கிற இந்த வகை பாலூடிகல நாம மனிதர்களின் மூதாதையர்கள் என்று சொல்லலாம்..இவர்களை அறிவியல் 'நியாண்டர்தால்' அப்பிடுன்னு பேர் வைக்குது. இவர்கள் ஏறக்குறைய ஒன்னேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால இந்த பூமியில தங்களோட முழு பரிணாமத்துக்கு வந்தாங்க.. இந்தவகையான மனிதர்கள் தோன்ற காரணம் இவர்கள் இயற்கையில கிடைக்கிற அனுகூலங்களை நேரடியாக பயன்படுத்துவதை விட்டுட்டு ஒரு புதுவகையான பரிமாணத்தை துவங்கி வெச்சதுதான்.. முரண்பட்டுவது அதன் மூலம் வளர்வது இதுதான் structure... அதுக்கப்புறம் 'ஆய்வாளர் 'ஜார்ஜ் தாம்சன்' என்பவரோட வார்த்தையில சொல்லனும்னா.. 'தொடர்ந்து மனிதனின் மூளையிலும் கையிலும் ஏற்பட்ட நேர்இணையான வளர்ச்சிதான் மனிதன் கருவிகளைப் பயன்படுத்தவும் மொழி என்பதை உருவாக்கவும் தேவையான அடிப்படை பண்பை அவர்களின் உடலியல் மூலாதாரமாக கொடுத்தது' புரியுதா?

"ஒரு எழவும் புரியல .. நான் போய் தூங்குறேன் மகி.. " என்றார் தேஜா.

**************************
தொடரும்
***********************
No comments: