09 January, 2011

a day with 'shoba open'ஒரு இனிமையான நிகழ்வை எப்படி விளக்கி எழுதுவது. பனியூசியால் இதயத்தை குத்துகிற ஒரு சோக நிகழ்வை எப்படி விளங்கிக்கொள்வது. இன்று நாள் முழுவதுமான இனிய நிகழ்வு வாய்த்தது. இதயம் கிழிக்கிற ஒரு சோகத்துடன் நிறைவுக்கு வந்தது.

முதலிவாக்கத்தில் திரு ஜேசுதாசன் வீட்டில் இன்று மதிய உணவு. கடல் பிராணிகளின் கூட்டம் தட்டுகளில் நிரம்பிக்கிடந்தன. பனங்கிழங்கு மாவில் செய்யப்பட்ட இலங்கைத்தமிழர்களின் பிரத்தியேகமான கூழ் இதில் பிரதானம். எழுபத்து நாலு வயது அப்பாவும் அறுபத்து எட்டு வயது அம்மாவும் பாட்டுப்பாடி ஒரே அமர்க்களம். உற்சாகத்தில் நானே சில வரிகளைப் பாடுகிற அளவிற்கு நிலைமை மோசமாகப்போய்விட்டது! கைகுத்தல் அரிசிச்சோறு, மீன் குழம்பு, கணவாய் சாப்ஸ், நண்டும் இறாலும் கலந்த கூழ். வயிறு முட்ட பார்லி நீர்! சிரிக்க சிரிக்க கடந்த கால நினைவுகளை அள்ளி தெளித்த தம்பதிகள். அம்மாவின் பாட்டு அய்யாவின் எதிர் பாட்டு களைகட்ட கவின்மலரின் இனிய குரலில் சில பாட்டு. இந்த இனிய பகலை எனக்களித்த ஷோபாசக்தி, காந்திராஜன், மணிவண்ணன், சுந்தர், சந்திரா, கவின் அனைவருக்கும் நன்றி. விருந்தோம்பலில் நெகிழ்திவிட்ட இனிய தம்பதிகள் ஷோபாசக்தியின் பெற்றோர்!


அப்புறம் shoba open என்றால் சிகரட் லைட்டரின் துணை கொண்டு பீர் பாட்டிலின் மூடியை சிறு சொடுக்கில் ஒரு இனிய சத்தத்துடன் திறக்கும் நுட்பம். நானும் மணிவண்ணனும் சிறு முயற்சிக்குப் பின் அந்த நுட்பத்தை கற்றுக்கொண்டோம். பாருங்கள் அதற்கு மட்டும் எங்களுக்கு ஆறு பாட்டில்கள் தேவைப்பட்டன!

******************************
மாலை ஞானியின் 'கேணி'. இசை விமர்சகர் திரு மம்மதுவின் பேச்சை கேட்க முடியாமல் தாமதித்து போனேன். இசைக்கலைஞர் அகிலாவின் தமிழிசை பாடல்கள். பன்னீர் குரல். இசையின் நுணுக்கங்கள் தெரியாவிட்டால் என்ன.. இதுபோன்ற பாடல்கள் உயிர் வளர்க்கும். மம்மது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சுவாரஷ்யமானவை. அவர் பதில்களும். அவர் மொத்தத்தில் சொன்னது 'மனிதன் சந்தோசத்தை வாழ்ந்து தீர்த்து விடுகிறான்.. சோகத்தை கலையாக்கி விடுகிறான் .. கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அநேகமாமாக (almost all) சோகமாகத்தான் அதன் மையம் இருக்கும்'. தீவிர யோசிப்பில் அது உண்மை என்றே படுகிறது.
*******************

book fair ! மனிதர்கள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள் புத்தகத்தை வாங்குகிறார்கள். எல்லோரும் படிப்பார்கள் போல. ஆனால் போர்வையைப் போர்த்திக்கொண்டு நிம்மதியாய் தூங்கிப்போகிறவர்களுக்கு இந்த புத்தகத்தால் என்ன பயன் என்று தெரியவில்லை. சாகித்திய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அண்ணாச்சி புத்தகங்கள் விற்று தீர்த்தது சந்தோசம். புத்தகம் பதிப்பித்து பன்னிரண்டு வருடங்களுக்கு பின் அதன் முதல் பிரதி நேற்று விற்பனை ஆனது. புத்தகத்தின் பெயர் 'அம்மாவின் அத்தை' ஆசிரியர் சச்சிதானந்தம். பதிப்பாளர் அண்ணன் வசந்தகுமார் (தமிழினி).

******************

போன வாரம் லீனாவின் 'செங்கடல்' முன்னோட்ட காட்சி பார்த்தேன். லீனாவின் drama தவிர்த்துப் பார்க்கையில் நன்றாக இருந்தது. தமிழக சென்சார் இப்படத்தை நிராகரித்து இருக்கிறது. மேல்முறையீடில் படம் pass ஆக வாழ்த்துக்கள்.

************
நாளின் முடிவு சோகமானது. அது என்னுள் புதையட்டும். ஒரு வேளை அது கலையாகக்கூடும்.
******************

1 comment:

பத்மா said...

great to know u guys all enjoyed ....