03 May, 2011

பசித்த இளமையின் இருபது சுளைகள் - 2 aசுளை இரண்டு:


பென் பாங் மூர்கமானதும் தனது வேர்களை பீஜிங் -ல் பரப்பியதும் ....


சில்லுனு ஒரு கேன் கோக்கை குடிப்பதையே பெருசுன்னு நெனச்சிருந்த காலம். பதினேழு வயசு. வீட்ட விட்டு வந்து பீஜிங் - ல என்னோட முதல் இரவு. என்னோட பெட்டிய இழுத்துகிட்டு விடுதி விடுதியா ஏறி எறங்குறேன்.. எனக்கு தெரியும் விவசாயிகளுக்கு தங்க இடம் கிடைக்காதுன்னு.. எங்கிட்ட நிறைய பணமிருந்தாலும்.. என் முகத்தை பார்க்கும் ஒவ்வொரு காவலாளியும் .. விவசாய பெண்ணே.. உனக்கு இங்க என்ன வேலை.. என்பதுமாதிரிதான் பாக்கிறாங்க. என்ன பாத்ததும் அந்த தேவிடியா பசங்க அப்படிதான் நினைக்கிறாங்க. நான் ஒரு குறைஞ்ச வாடகை அறையை எடுப்பதானால் நிலவறைகளை தான் எடுக்கணும்.. பீஜிங் - ல அதுதான் குறைவு.. அது எனக்கு பிடிக்கல. இந்த நகரம் முரட்டுத்தனமான புது உலகம்..இரவில் கூட பிரகாசிக்கும்..அதை நான் தடவி பார்க்க விரும்பினேன்.
கடைசியா நான் வந்த நின்ன இடம் பெய் ஹி யான். ஹுட்டங் பகுதி. சேரி கட்டிடங்கள். அங்கு வசிப்பவர்கள் ஹுடாங்க்ஸ். நீண்ட குறுகிய சந்துகளை கொண்ட இரைச்சல் மிகுந்த பழுப்பு நிற வீடுகள். கணக்கற்ற சந்துகளில் நிரம்பியிருந்த கணக்கற்ற வீடுகளில் வசிக்கும் கணக்கற்ற குடும்பங்கள். இந்த பூர்வகுடிகள் தங்களை பேரரசின் மக்கள் என்று நெனசுகிறாங்க. எனக்கு அவர்களை பார்க்கும் போது உயர்குடியில் பிறந்தவர்கள் போல தெரியவில்லை.
சாலையோரமாக பெட்டியை வைத்து அதன் மீது உட்கார்ந்தேன். எனக்கு பக்கத்தில் இரண்டு கிழவர்கள் குத்தவைத்து உட்கார்ந்து டீ குடித்தவாறு செஸ் விளையாடி கொண்டிருந்தார்கள். அவர்களை பார்க்கும்போது பலமணி நேரங்களாக அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் போல தெரிந்தது.. அல்லது வாரக்கணக்காக.. அல்லது நூற்றாண்டுகளாக அவர்கள் அங்கேயே அமர்ந்திருந்திருக்கலாம். சிறிது நேரம் கழித்து நான் பசியை உணர்ந்தேன். அடிவயிற்றில் ஏற்பட்ட முனுமுனுப்பு இது எனக்கு ஏற்படும் சாதாரண பசியில்லை என்பதை உணர்ந்தேன். கடுமையான பசி. மூன்று நாட்கள் சரியான உணவில்லாமல் புகைவண்டி பயணம் செய்த பின் ஏற்படும் பசி போன்றது. சாலையோர வியாபாரியிடம் போய் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கை வாங்கிக்கொண்டு திரும்ப வந்து பெட்டி மேல் உட்கார்ந்து கொண்டேன். சூரியன் மறையத்தொடங்கியதும் தெரு விளக்குகள் எரியதொடங்கின. சற்று இருட்டானதும் வீடுகளின் ஜன்னல்களில் விளக்கு வெளிச்சங்கள் தெரியதொடங்கின. மனித நடமாட்டம் இல்லாமல் போனது. இரண்டு கிழவர்களும் போய்விட்டிருந்தனர். . எனது எதிர்காலத்தை நினைத்து.. முக்கியமாக நாளையை நினைத்து நான் கவலைப்பட தொடங்கினேன்.. என்னுள் பதற்றம் தொற்றிக்கொண்டது.
அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக மகளும் தாயும் வாதிட்டுக்கொள்ளும் சத்தம் கேட்டது. அவர்களின் சத்தம் புரிந்துகொள்ளமுடியாததாகவும் , கடுமையான உணர்வுடனும் சிறிது சிறிதாக அதிகமாகத்தொடங்கியது. ஒரு மகளுக்கும் தாயிக்கும் இவ்வளவு பேசிக்கொள்ளும் அளவிற்கு விஷயங்கள் இருக்குமா என்ன.. அவர்கள் மிகவும் நெருக்கமானவகளாக இருக்க வேண்டும். என் குடும்பத்தில் யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அப்பா அம்மாவிடம் ஒருபோதும் பேசியதில்லை. அவர்கள் இரண்டுபேரும் ஒருபோதும் பாட்டியிடம் பேசியதில்லை. அவர்கள் ஒருவர்கூட என்னிடம் பேசியதில்லை. எனது கிராமத்தில் மக்கள் பூச்சிகளை போல, புழுக்களைப் போல, கதவுகளின் பின்பக்கம் தொங்கும் லாடம் போல வாழ்ந்தார்கள். அவர்களிடம் பேசுவதற்கு அதிகம் இல்லை. நான் இந்த வீட்டிலிருந்து வரும் சத்தத்தில் மூழ்கிவிடுவது போலவும் அதே சமயம் இந்த வீட்டிற்கும் எனக்கும் எதோ ஒரு சம்மதம் இருக்கிறது என்றும் உணர்ந்தேன்.
திடீரென்று அவ்வீட்டு கதவு திறக்க வெளியே ஓடிவந்த மகளை துரத்திக்கொண்டு தாய்க்காரி வந்தாள். எல்லாம் சடுதியில் முடிவடைந்து விட்டது. மிக வேகமாக கடந்த வாகனத்தினடியில் அவர்களது இரண்டு உடல்களும் பதற்றத்தில் எனது கையிலிருந்து தவறி உருண்ட உருளைக்கிழங்குடன் சேர்ந்து நசுங்கிப்போனது. காதால் தாங்கமுடியாத ஒரு சத்தத்துடன் அந்த வாகனம் நின்றது. வண்டியை ஒட்டியவன் வேகமாக இறங்கினான். இரண்டு உடல்களையும் இழுத்து வாகனத்தின் பின் பகுதில் ஏற்றினான். ஒன்றும் சொல்லாமல், என்னை ஏறிட்டு கூட பார்க்காமல் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். நான் திகைத்து நின்றேன். திரும்பவும் நான் அந்த இடத்தை பார்த்தபோது தரையில் சிறிது ரத்தம் தெருவிளக்கில் மிளிர்ந்து கொண்டிருந்தது. அந்த பெருநகரத்தில் எனது முதல் இரவை என்ன செய்வது என்று தெரியாமல் அதே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் யாரும் இல்லை. தாயும் மகளும் வெளியேறிய வீட்டின் கதவுகள் இன்னமும் திறந்து கிடந்தன. அதன் விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. பிசாசுகள் எதுவும் வெளிவரவில்லை. அரைமணி நேரம் கழித்து அந்த வீட்டினுள் சென்று பார்க்க முடிவு செய்தேன்.
**********************
No comments: