23 May, 2011

கித்தான் கோமாளி


ஓவியனும் சிற்பியும் கவிஞனுமான மனப்போக்கை கொண்ட பேய்காமனின் நிகழ்த்து கலை ஆர்வத்தில் உருவான கனவுக் கடவுளும் வளவிக் கிழவிகளும் என்று தலைப்பிட்ட கூத்து பாதி நாடகம் பாதி நிகழ்த்து கலை தன்னளவில் முழுமையாய் வெளிப்பட்டிருந்தது நேற்று மாலை தேனி முல்லை நகரில். நேரடியான எளிய கதைத்தளம் கொண்ட ஒல்லிக் கோமாளி குண்டுக்கோமாளி வாய்மொழியாக நிகழ்வு விரிகிறது. தூக்கக் கடவுள் பொம்மைக் கிழவிகளை செய்கிறார். பிறகு தூங்கிவிடுகிறார். கிழவிகளுக்கு பசிக்கிறது. கடவுளிடம் முறையிட அவர்களுக்கு வளவிகளை உருவாக்குகிறார். மீண்டும் தூங்குகிறார். வளவிகளை கதைகளை தேடும் பொம்மை பொடியன்களுக்கு விற்று பழங்களையும் தானியங்களையும் பெற்று மகிழ்கின்றனர் கிழவிகள். வளவிகள் மூலம் கதைப்பாடல் பெற்று மகிழ்கின்றனர் பொடியன்கள். தூக்கத்தில் வளவிகளை உடைக்கிறார் கடவுள். பொடியன்களின் சாபத்தில் கல்லாகிறார் கடவுள் நிரந்தரமாக.


நிகழ்த்துகலையின் உபகரணங்கள் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தன. குறைந்த கால அளவில் பையன்களை சரளமான நடிப்புக்கு தயார் படுத்தியிருந்தது பேய்காமனின் சாதனை. ஒரு ஆரம்ப கால நிகழ்த்துகலை இயக்குனனாக பேய்காமனிடம் அளப்பரிய சாத்தியப்பாடுகள் இருப்பதை இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. நாடக அறிவு சிறிதும் இல்லாத அதன் பாலான பெரும் ஆர்வம் ஒன்றும் அதிகம் இல்லாத எனக்கு அவனிடம் ஏற்படுகிற சிறு பொறாமையுணர்வு அந்த நிகழ்த்துகலையின் வெற்றியாக நான் கருத்துகிறேன்.

1 comment:

க. சீ. சிவக்குமார் said...

எதோ ஒரு நாளில் பரவசமாய் இக்கதையை பேய்க்காமன் - ஒரு குழந்தைக்கே சொல்கிற உற்சாகத்துடன் கூறக் கேட்டிருந்தேன். இதைப் பாக்க முடியாமல் போச்சே என்ற மெலிதான ஏக்கம் படர்கிறது