14 October, 2011

sad jobs

இறந்த மனிதனை பற்றி அவதூறு பேசுவது தவறு - மனித அறங்களில் ஒன்று. இருந்தாலும் சற்று அறத்தை மறந்து ஒரு இறந்த மனிதனை பற்றிய ஒரு பதிவினூடாக சில சந்தேகங்கள்.

இறந்தவர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

 எழுபத்து நாலிலிருந்து இந்த ஆண்டு வரை களத்தில் இயங்கி உடல் புற்றின் காரணமாக காலமாகிய அவருக்காக கார்பொரேட் உலகம் கதறிக்கொண்டிருக்கிறது. உலகத்தில் முக்குக்கு முப்பது பேர் நிமிசத்துக்கு செத்துக்கொண்டிருந்தாலும் இவர் செத்தது சற்று வருத்தம்தான். அதற்கான இரண்டு வலுவான காரணங்கள் இரண்டு எனக்குண்டு. ஒன்று அவர் புத்தனை தழுவியவர். இரண்டாவது அவரது போதைக்கான பரிசோதனை. இதற்காக அவர் இந்தியாவைத் தேர்தெடுத்தார். அவரது தந்தை ஒரு முசல்மான். அவரை தத்தெடுத்தவர் கிருத்துவர். வீணாய்ப்போன பால்யமாய் இருக்கலாம்.. ஆனால் நிர்வாகத்திறனும் சிக்கலானவற்றை எளிமைப்படுத்தும் கற்பனைத்திறனும் அவரை கார்பொரேட் அரசர்களில் ஒருவராக்கியது.

அவரது மரணம் துக்ககரமானது.

சரி சந்தேகம் ? அவரை பற்றி அல்ல. மூன்று சமீபத்திய செய்திகளை பற்றியது.

1 . சவரக்கடையில் நுழைந்து சிரைத்துக்கொண்டிருந்த எட்டுபேரை ஒருவன் சுட்டு கொன்றுவிட்டான். செத்த எட்டுபேர் எதற்காக செத்தார்கள்.. (அமெரிக்கா).

2 . நாங்கள் வாழ்க்கையை போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டோம் என்கிற 
குறிப்புக்கடிதத்தொடு 39 வயதில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கம்ப்யூடர் வேலை செய்யும் தம்பதியினரின் அழுகிய உடலை அவர்களது பெற்றோர்கள் வாங்க மறுத்த காரணம் என்ன.. அப்படி அவர்கள் என்னதான் அனுபவித்தார்கள்.. (இந்தியா).

3 . சில கிலோகிராம்கள் எடை கொண்ட வெடிகுண்டை காரில் கண்டெடுத்து சில நூறு உயிர்களை காப்பாற்றியிருக்கிறார்கள் தில்லி காவலர்கள் ..அப்படி காப்பாற்றப்பட்ட அந்த சில நூறு மனிதர்கள் எப்படி/என்னவாய்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

மேலும்..

4 . ஸ்டீவ் ஜாப் - ன் iPad தொழிற்சாலையில் (சீனாவில் இருக்கிறது !) மூன்று மாதத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்துகொண்டார்களே அவர்கள் யார்.. எதற்காக ஒரு புத்தம்  தழுவிய மனிதன் நிர்வகிக்கும்  நிறுவனத்தில் வேலை செய்யும் போது தம்மை மாய்த்துக்கொண்டார்கள் ...


திஸ் இஸ் நாட் iSad ,    பட் இட் இஸ் my Sad  !      

04 October, 2011

சாயலை மறைக்கும் ததாகன் 2








  
கவனமாய் தன் நித்திரையை
தவிர்கிறான் செவ்விழி ததாகன்
சிறுபிசகில் மூடிய விழித்திரையில்
தொங்கும் நெடும்கூந்தல் விரைந்து
நீள்கிறது அவனுள்ளிருக்கும் சிறுமலர்
நோக்கி. தாழம்பூ திரிந்த வாசனையில்
நாசி நடுங்க தரை பிராண்டுகிறான்.
தோல்கிழிந்து நகம் வழி கசியும்
குருதி ருசியை நுகர்கையில்
விறைக்கும் ஞானம் புணர்கிறது
ஞாபகத்தின் செதிலை. உதிரத் தொடங்கும்
காலம் வெளியெங்கும் ஏந்திச்
செல்கிறது ஒளிபொருந்திய
தத்துவத்தை.

விடிந்ததும்
இழந்தைதை எப்படி பெறுவது
என்று தெரியாமல் கிடைத்தை
பார்க்க கிடைத்த முதல்
மனிதனிடம் கைமாற்றுகிறான்

ததாகன்

பின் ஒருபோதும்
கூந்தல் நீண்டு பெண்ணாகிப்போன 
அவனை பார்க்கவில்லை

* * * * * *  

02 September, 2011

இரண்டு வியாபார அறிமுகங்கள்



தேனும் இளநீரும் குடித்து இனிய உண்ணாநோன்பை முடித்துக்கொண்ட முதியவர்  தனது வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டு ஊர் போய் சேர்ந்திருக்கிறார் இன்று. தொடர்ந்து பல ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் இனி அவர் முதலீடு செய்வார். லாபம் கொழிக்கும் சிறந்த வியாபாரமாக அதை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்பது எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.  ஹசாரே தலைமையிலான (அப்படித்தான் நினைக்கிறேன்) இயக்கம் ஒரு முதலீடற்ற தொழில்முறையை நமது தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி ஜெயம் அடைந்திருக்கிறது. அவரது தொப்பியை நமது மக்கள் பயன்படுத்தும் விதத்தை பார்க்க எனக்கு நமக்கு மிகவும் தெரிந்த குரங்கு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மரத்தின் மீது மன்னிக்கவும் மேடையின் மீது நின்று கொண்டு அவர் தனது தொப்பியை அசைக்கிறார்.. நமது மக்கள்.. அசைகிறார்கள். ஆனாலும் இவ்வளவு பெரிய மக்கள் ஒருங்கிணைப்பை நாம் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் ஒட்டு மொத்த உளவியலை புரிந்து கொள்ள கடுமையான விவாதங்களை கிளப்பிவிட வேண்டும். ஏற்கனவே பல விவாதங்கள் பல சிந்தனையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது... அதன் அழுத்தமான பதிவாக அவுட் லுக்கில் வந்த சந்தீப் அட்வார்யு வரைந்த இந்த கார்டூனை பார்கிறேன்.


*********************
ஒரு சீன நாட்டு matrimonial  விளம்பரம் பற்றிய செய்தியொன்றை படித்தேன். சீன ஆண்கள் 40000 வரை பணம் கொடுத்தால் வியட்நாமிய பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு அவர்கள் கொடுக்கும் உத்திரவாதம்: பெண்ணின் கன்னித்தன்மை, அனைத்து அரசு செலவினங்கள் மற்றும் ஒருவருட உத்திரவாதம். அதென்ன ஒருவருட உத்திரவாதம் என்றால் ஒருவேளை ஒருவருடத்திற்குள் அந்த பெண் ஓடிப்போய்விட்டால் வேறு ஒரு பெண் இலவசமாக  தரப்படும் என்பதுதான் அது. திருமணம் செய்து கொண்டு வரப்படும் பெண்கள்  ஓடிபோயவிடுவது அதிகமாகி உள்ளது என்று சீன அரசு கூறியுள்ளது. உண்மையில் இவர்கள் காணாமல் ஆக்கபடுகிரார்கள். அதாவது அவர்கள் வாங்கிய விலையை விட அதிக அளவுக்கு உள்ளூர் ஆண்களிடம் விற்று விடுகிறார்கள்.
பெண் குழந்தைகைக் கூட விற்கும் நமது நாட்டு மக்களுக்கு இது ஒன்றும் அதிர்வு தரக்கூடிய விசயமில்லைதான்.

அது சரி ஊழலை ஒழிக்க என்னதான் வழி. என்னை பொறுத்த வரையில் அதற்கு ஒரு வழியும் இல்லை. கடைசி மனிதனும் வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வான். ஒழிக்க முடியாது. அறங்களை போதித்து குறைக்க வேண்டுமானால் செய்யலாம்..

 நண்பர்களே நாம் எத்தனை பேர் நமது கணினிகளில் ஒரிஜினல் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் ?

*********************