காதலை பற்றிய பாடல்
ஒன்றை எழுதத்தேவையான
கச்சாபொருளை
எப்படி சேர்ப்பேன்
மனித கூட்டமாய் அது
இருக்கும் போது
அதிகாரப்படுதலில் ஆனந்திக்கும்
அதற்குத்தான் எத்தனை வேலைகள்
அவர்களின் தொலைந்து போன
கச்சா பொருள் காதல் தான் என்றால்
உருளைக்கிழங்கு கொதிக்க வைக்கும்
கலன்களில் என்னை அழுத்துகிறார்கள்
சமனற்ற உருளைக்கிழங்குகள்
கொதித்து நொதித்து இனிமையும்
தெயவீகமானதுமான சாராயம் வடிவது போல
நான் சொட்டு சொட்டாய் கரைவதை
அவர்கள் அலச்சியம் செய்கிறார்கள்
காற்றில் நான் மது வாசமாய் திரிகிறேன்
காற்று மாசு என்று எனை காணும்போதெல்லாம்
நாசி மூடுகிறார்கள்
நான் காதலை மட்டுமே பாடுகிறேன்
அதை அவர்கள் ஆணின் கொழுப்பென
நாய்களுக்கு இரையிடுகிறார்கள்
அவற்றை யுண்டு நிலவை பார்த்து
ஊளையிடும் நாய்களின் சத்தம்
காதலின் கச்சா பொருளென
என் விரல் நகங்களில் படருகிறது
கனவில் தூங்கிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு என் விரல்களை
உண்ணத் தருகிறேன்
உயிர் நடுங்க உறிஞ்சிக்குடிக்கும்
அவர்களின் முகத்தில் தெரிவது
என்னவென்று அறியமுடியா வியப்பு.
2 comments:
ஆதிரன் உங்கள் கவிதை வடிவம் மிக அழகாய் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உங்களைப் போல் பரந்து விரிந்த காதலுடன் இரு கைகளை நீட்டி மொழியற்று எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளதான் ஆசை? அந்த மனநிலைக்கு என்னையும் என் கைக்குள் வந்துசேரும் மனிதர்களையும் தயார்செய்வதற்கே எனக்கு பல ஆண்டு காலமாகும். அதுவும் என் சமூக,பொருளாதார, அதிகாரத்தின் அடிப்படையிலேதான் அது மதிப்பீட்டுக்குள்ளாக்கப்படும் என்பதை நான் உணர்வேன்.அது உங்களால் விசாரணையின்றி செய்ய முடிகிறதென்றால் சந்தோசம்தான். ஆனாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான தனிப்பட்ட காதல் என்றென்றுக்கும் வேண்டிதான் இருக்கிறது.
nanri thozhi.
Post a Comment