21 September, 2010

சுழலும் கண் மரம்


ரயில் நிலைய நாட்கள் மாற்றப்பட்டு விட்டது. தற்காலிக தலைநகர் வாசம். வெயிலற்ற வெக்கைச் சென்னை. கடுமையான பெருநகர பேருந்து பயணம். இருந்தாலும் நண்பர்கள் சுவாரஷ்யம். தினமும் கடல் பார்த்தல் நடக்கிறது. ஏழு வருடங்களுக்கு பின்னான மரீனா நிறைய அழுக்கு. மணலிலும் மனதிலும். இரவு எட்டுமணிக்கு மேல் காணக்கிடைக்கும் காட்சிகள் மனித அவலத்தின் சாட்சிகள். சுரேசுடனான மொட்டை மாடி நாட்கள். பேச்சு. பேச்சு ... இனிய நினைவுகளுக்கு.

நேற்று 20 - ம தேதி 83 வது கலங்கரைவிளக்க தினம். இரவில் சரவிளக்கு பொருத்தி அழகுபார்த்திருந்தார்கள். கலங்கரைவிளக்கம் வண்ண விளக்குகளுடன் நிலாவின் பின்புலத்தில் ஒரு ரம்மியமான காட்ச்சியை கொடுத்தது. என்றைக்கும் கவனித்திரா இந்த உயர்கட்டிடம் இன்று எனக்கு வினோதமான ஒரு படிமமாக தெரிகிறது. வெளிச்சம் உமிழும் சுழலும் கண் மரம். கடலை விடாமல் பார்த்துக்கொண்டிருகிறது. கடலே பயப்படுமளவுக்கு. கண்காணிப்பு என்பதன் குரூர சாட்சி. அது திசை மாறுபவர்களுக்கு உதவ அல்ல.. மாறாக திசை மாறாமல் தடுக்க. கண்காணிப்பு என்பது மரணத்தைவிட பயங்கரமானது.

ஞானியின் 'கேணி' கூட்டத்திற்கு முதன் முதலாக செல்ல நேரிட்டது ஒரு அனுபவம். சேர்ந்திசை பாடல் பற்றிய ஒரு விளக்க உரையும் - பால் அகஸ்டின் - ஒரு சேர்ந்திசைக் குழுவின் நிகழ்வும் நடந்தேறின. விவித்பாரதியில் கேட்ட வார்த்தை சேர்ந்திசை. இப்போதைக்கு மறந்துவிட்டார்கள் போல. அந்த குழு பாடிய பாரதி பாடல்கள் வித்தியாச அனுபவம். அந்த ராக அமைப்பு என்போன்றவர்களுக்கு தவிர்க்கமுடியாத கிருத்துவ மதபிரச்சார பாடல்களை நினைவுபடுத்தியது. வேறு வழியில்லை, இவ்வைகையான சேர்ந்திசை ராகங்களை அவர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவதால் வரும் வினை. அதே ராகத்தில் பகத்சிங்கையும் பாடலாம் என அந்த குழுவின் குரலுருப்பினர்கள் நிரூபித்தார்கள்.

கடந்த நாட்களில் சொர்ணலதா மரணம் எனக்கு கடும் துக்கத்தை ஏற்படுத்தியது. போனாளே ... பொன்னுத்தாயீ.. பொலபொலவென்று காண்ணீர் விட்டு.. குரலை ஒரு வாத்திய கருவி போல இசைக்க தெரிந்தவர்..
***************************************************

3 comments:

ஜெயசீலன் said...

சொர்ணலதா மரணம் எனக்கு கடும் துக்கத்தை ஏற்படுத்தியது. போனாளே ... பொன்னுத்தாயீ.. பொலபொலவென்று காண்ணீர் விட்டு.. குரலை ஒரு வாத்திய கருவி போல இசைக்க தெரிந்தவர்..


சரியா சொன்னீங்க...
அருமையான பதிவு...
வாழ்த்துக்கள்

Unknown said...

சொர்ணலதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் நண்பர் மை.பாரதிராஜாவுடன் அவரை பேட்டி எடுக்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். இந்த செய்தி இருவருக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தது. அந்தப் பாடல் அவருக்கென்றே எழுதியது போலாகிவிட்டது. மறக்க முடியாத பெண் ;( பகிர்விற்கு நன்றி ஆதிரன்

adhiran said...

thaks jeyaseelan.

thanks umashakthi.