23 January, 2010

சில நேரங்களில்...?

*********
நீ

ஆமையின் ஓடு போல
நான் சுமந்து திரிகிற
என்னால் உதிர்கவே முடியாத
என் தனிமை.

உயிர் விளையாட்டு.

இதொரு
உயிர்ச்சேதம் நிகழ்த்தக்கூடிய
கண்ணாமூச்சு விளையாட்டு
நீயும் நானுமே
ஆட்டக்காரர்கள்
எனக்கெவ்வளவு தொலைவோ
அவ்வளவு நெருக்கமும் நீ
என் எல்லாமும் நீ
என் எதுவுமில்லாததும் நீ
நீ என் அன்பை
வார்த்தையாக யாசிக்கிற போதெல்லாம்
சொறகளற்று வாயடைத்துப் போன
சகிக்கமுடியாத மௌனம் பதிலாகிறது
மெல்லிய திட்டமிடலுடன் கூடிய
காத்திருப்புதான் -
ஒரு பல்லியின் வேட்டையாடலைப்போல,
உன் கவனம் முழுமையும்
என்னை நோக்கி நகர.
நானொரு கொடூர மிருகம்
நம்பினால் நம்புங்கள்
என் கூர் பல்லும் நகங்களும்
அன்பாலானது
.

NRI


அதொரு பொருட்காட்சி


மேலே நிலா


ஜெயின்ட்வீல், டோரா டோரா


கொலம்பஸ் கப்பல் நடுவே


ஒட்டக சவாரியும்




பாலைவனமிழந்து


இணையிழந்து


காமவுணர்விழந்து


காதலுமிழந்து


நகரத்தில் சம்பாதிக்கிறது


ஒட்டகம் -


ஒரு பயங்கர கனவு போல


விபரீத கற்பனை போல


சுஜாதா கதையில் விபத்தில்


ரத்தம் படியாத அரிசி திரட்டிய


நடைமுறை நிஜம் போல.


*****************
வீடு முழுக்க வானம் - தொகுப்பிலிருந்து : என் புலன்களுக்கு நெருக்கமான கவிஞர் சே. பிருந்தா.
************************************************************************

நான் பெண்

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை நீர் நான்
கரும்பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

.................. எனக்கு கவிதை முகம் என்கிற தொகுப்பில் : அனாரின் இந்த வைரமுத்து பாணியிலான கவிதைக்கு எனது விளையாட்டுத்தனமான எதிர் கவிதை:

நான் ஆண்

ஒரு உடைபடும் கரை
ஒரு உள் வாங்கும் நிலம்
ஒரு நீர் அடர்த்தி
ஒரு மண்வாசனை
மேகம் நான்
சரிவில் வளரும் போதைப்புல்
காளைமாடு நான்
களிமண்
மூங்கில் கீற்று
மேல்படியும் புழுதி நான்
அகாலம் உடல்
உள்ளம் காலம்
கண்கள் துவர்ப்பு
நானே நீலம்
நானே குரல்
என் எல்லை நீ
நானும் இயற்கை
நான் ஆண்.



****************************************
இப்படி கிறுக்குத்தனங்கள் செய்து வறண்ட பொழுதுகளை சரிசெய்யவேண்டி இருக்கிறது நண்பர்களே.. என்ன செய்வது?

*********************************************


1 comment:

padma said...

ithaa kirukku thanam?