21 January, 2010

இரவில் தோன்றும் கடல் தேவதை.

**********************
முதல் ஜாமம்

வயதேறியதொரு கனவின் விளிம்பில்
பிறந்த கதை சொல்லலானாள் கடல் தேவதை
சிவப்படங்கிய தொடுவானத்தின்
கிடைமட்டத்தில் செய்வதறியாது
கிடந்த ஆழியின் ஆழத்தில்
ஒரு துளி தன்
உப்புத்தன்மை இழந்தது
நிறபிரிகையின் ஏழாம் நிறத்தில்
ஆழி ஒளிர்ந்த கணம்
ஏற்பட்டதொரு சூன்ய அழுத்தத்தில்
பருண்மை கொண்டாள் அவள்
அண்ட சராசரங்கள் நடுங்கியொலித்ததாக
மேற்கு மலை நத்தையொன்று
கூறித்திரிந்தது யாரும் அறியாதது
வெயில் பட்டு உதிர்ந்த செதில்களின் நடுவே
ஈரங்காயாமல் உறங்கிக்கிடந்தவளை
என் அறைக்கு கொண்டு வந்தேன்
தடித்த கனவின் முடிவில்
அவளை யாளி என அழைக்கத்தொடங்கினேன்

இரண்டாம் ஜாமம்

ஆதிக்கனியறியாத யாளியின்
நிர்வாணம் வெட்கமின்றி இருந்தது
ஒளியறியாத வேர்த்தண்டின் வெளிறிய
வண்ணத்தில் மிளிர்கிறது அவளது தோள்
வெளிச்சப்புள்ளிகளாய் கண்கள்
சிறகுகளற்ற அகன்ற முதுகின் வெகுகீழே
நெகிழ்ந்த பிருஷ்டம் பற்றி இறுக்குகிறேன்
இயல்பென உடை அகற்றுகிறாள்
என்னுடம்பிலிருந்து கிளம்பி பரவுகிறது
வெட்கம்
சட்டென்று உப்பரித்த நீராய் மாறி
அறைமுழுதும் நிரம்பி அனைத்தையும்
மூழ்கச்செய்கிறாள் நிதானமாக
எல்லா நீரையும் குடித்து அறையை
சுத்தம் செய்கிறேன்
தரையில் கிடந்த யாளி
வெட்கத்துடன் என்னுடயை
இழுத்து போர்த்திக்கொள்கிறாள்
பின்பு நாட்குறிப்பில் பெருமுலைத்திருக்குமரி
பூப்பெய்தினாள் என குறித்துக்கொண்டேன்

மூன்றாம் ஜாமம்

வெளிச்சத்தின் சூழில்
பிறந்த இருளில்
தன் பெயர் பெறுகிறது ஜாமம்
நிலாவின் பாதரசம் குடித்து
அரற்றத் தொடங்கினேன்
யாளி.. யாளி..
குரலில் அம்பெய்திருன்தான் மாரன்
சுயம் துடித்துக்கொண்டிருந்த
சமயலறைச்சாம்பலில்
திளைத்துக்கொண்டிருந்தாள்
பூனையுருவில் யாளி
அவளது விழிகள் கங்கு பொறிந்தன
விரல் நகங்களை சுவற்றில்
சுரண்டும் ஒலியில் உள்ளழைக்கிறாள்
சமயலறைக்குள்ளான பயணம்
நீள்கிறது யுகங்களாய் ...
ஒரு காற்புள்ளியின் பிறகு
தெறித்துச் சிதறிய சமையலறைக் கத்திகளில்
தோய்ந்திருக்கிறது யாளியின்
நிணம்

நான்காம் ஜாமம்

சகலமும் துறந்து
எச்சிலொழுக உறங்குகிறாள் யாளி
ஆகப்பெரிய பிச்சைப்பாத்திரத்துடன்
தேவதையின் நிதம்பக்கனி பெற
விண்மணிப்பாதங்கலடியில் அமர்ந்திருக்கிறேன்
ஈரத்த்தவுட்டின் வாசனை கசிகிறது
அவளது உடலில் நீள்கிறது ஜாமம்
பாசாங்கற்ற காத்திருப்பின் இடையில்
கூந்தலுக்குள் மறைந்திருக்கும்
யாளியின் முகத்தில் எப்பொழுதும்
இல்லாதவொரு ஒழுக்கம்
ஜாமத்திற்கான பெரும் இருளை
ஒழுங்கற்ற சிறுவில்லைகளாக சிதறச்செய்கிறது
பிச்சைப்பாத்திரம் வெறுமையாய் இருக்கும்
பொழுதுகள் சகிக்கமாட்டாமல்
நான் விழுங்கிய ஒவ்வொரு வில்லையும்
பேரிரைச்சலுடன் கரைகிறது
யாளி
அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றாள்

ஐந்தாம் ஜாமம்

ஜாமம் முழுவதும்
வனமூங்கில் உடையும் சப்தத்துடன்
இழுபடுகிற தேரென
ஆகிப்போனது யாளியின் பருண்மை
கூந்தலே வடம்
குழந்தையின் குரூரத்துடன்
என்மீதேறி உருள்கிறாள் யாளி
விசும்பெங்கும் உப்பின் வாடை
கருக்கலில்
அறை முழுதும் கடந்து
பூக்கள் கலைந்த பீடத்தில்
நிலை கொள்கிறாள் யாளி ...
வண்டல் இழுபடும் நதிக்கரையில் நின்று
பிரபஞ்சமும் கேட்கட்டுமென கூவுகிறேன்
யாளியுடனான ஒவ்வொரு புணர்வும்
ஒரு தேரோட்டம்

ஆறாம் ஜாமம்

யாளியின் புதிர்கூந்தலில்
இரவு முழுதும் தரவியலாத
முத்தமொன்றை பிடுங்கி
சதுப்பேறிய அறை நிலத்தில்
நட்டு வைக்கிறேன்
வளரத்தொடங்கிய விருட்சத்திலிருந்து
பறித்த ஆயிரம் வார்த்தைகளை
தின்று
மீன்குஞ்சுகளை பிரசவிக்கிறாள் யாளி
காற்றைக் குடித்து அறைவெளியில்
நீந்தித் திரிகின்றன அவையாவும்
களி கொள்கிறதவற்றின் வேகம்
அதி ஜாமத்தின் முடிவில்
மலடு நீங்கி பொழிவுற்றன யாளியின் உதடுகள்
இடைவிடாமல் திறந்து மூடும்
கதவிடுக்கில் சிக்கித் தவிக்கிறது
எனதான ஆணவம்

ஏழாம் ஜாமம்

சொற்களை விலை கொடுத்து
கடவுளும் அறியாத வகையில்
காலத்தால் ஆன அறையொன்றை வனைந்து
உள்வைத்து பூட்டுகிறேன்
யாளி ... மீன்களை அக்குளில்
பொதித்தவாறு வெளிவிட வேண்டி இறைஞ்சுகிறாள்
உயிர் போகுமென அறியாமல்
அனைத்தும்
கனவென்று அறியப்படும் சாபத்திலிருந்து
ஒரு புல்லை உருவி
உள்ளங்கையில் வைத்து
தினமும் தொழத்தொடங்குகிறேன்
யாளி வளர்க.....
ஆழி வளர்க....
யாளியான ஆழி வளர்க...
ஆழியான யாளி வளர்க..

எட்டாவதும் கடைசியுமான ஜாமம்

பூரண வெளிச்சம்
துயருற்றுப்பொங்குகிறது ஆழியின் சாபம்
சமையலறையிலிருந்து
வெளியேறிப் பறக்கும் யாளியின்
முதுகில் முளைத்திருக்கிறது
நீண்ட மின்னெலென சிறகு.

*************************************************

ரவி திகம்பனின் நினைவாக - 'கள்ளக்காதல்' - கவிதை தொகுப்பிலிருந்து .

**************************************************

2 comments:

padma said...

சுயம் துடித்துக்கொண்டிருந்த
சமயலறைச்சாம்பலில்
appa enna oru prayogam..
வளரத்தொடங்கிய விருட்சத்திலிருந்து
பறித்த ஆயிரம் வார்த்தைகளை
தின்று
aval thinraal
சொற்களை விலை கொடுத்து
கடவுளும் அறியாத வகையில்
காலத்தால் ஆன அறையொன்றை வனைந்து
உள்வைத்து பூட்டுகிறேன்
neengal vaangineergal

kanavil enna vellam saathiyam..

mathiyathilirunthu ninaivellam aazhiyana yaali than ..

innum purinthu kolla nan indrum kuda valara vendum.

pramipilirunthu agalaa
padmaa

adhiran said...

thanks padmaa