23 February, 2010

வினோதம் 4

பாதுகாப்புணர்வு இழக்கும் ஆண்கள் பற்றி முந்தய பதிவில் சொல்லியிருந்தேன். இப்போது நம்பிக்கையுடைய பெண்ணைப்பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். அதற்கு முன்னாள் இந்த ஆண்களைப்பற்றி நான் சொன்னவைகளை சுருக்கமாக மீண்டுமொருமுறை என் ஞாபகப்படுத்தலுக்காக எழுதுகிறேன்: பொதுவாக ஆண் பணம் மற்றும் பெண் தேவைகள் பூர்த்தியாகாத சமயங்களில் பாதுகாப்புணர்வை இழக்கிறான். இவை இரண்டும் கிடைக்கும் நிலையில் அவன் பெண்ணை நம்ப தொடங்குகிறான். குடும்ப அமைப்பில் இந்த இரண்டுமே ஆணுக்கு ஆதாரம். இதன் அடிப்படையில் ஆணுக்கு எழுவதுதான் அன்பும் காதலும். இதுதான் பெரும்பாலான சரி. பேரன்பும் பெருங்காதலும் கொண்ட வெகுளி/அப்பாவி/முட்டாள் ஆண்கள் இதில் விலக்கானவர்கள், பாவம் அவர்களை விட்டுவிடலாம்! பொதுவாக தனது மொத்த தேவைகளையும் குடும்ப அமைப்பின் மூலம் சுலபமாக தீர்த்துக்கொள்கிற ஆண்கள், தங்களில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை நுகர்கிற வாடிக்கையாளர்களாக மட்டுமே உள்ளார்கள்.
நம்பிக்கையுடைய பெண் யார்: பிறரை சாராமல் தனியாக வாழ முடியும் என்று ஒரு பெண்ணுக்கு தெரிந்து போனால் மட்டும் போதும் அவள் நம்பிக்கை அடைந்தவளாகிறாள். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் தனியாக சுயமரியாதையுடன் வாழத்தகுதி உடையவள்தான். அது அவளுக்கு தெரியவில்லை என்பது மட்டுமே பிரச்சனை. அவள் சார்ந்தே இருப்பதுதான் நல்லது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். பெண் அடிமைத்தனம் என்பதிலிருந்து விடுபடுதல் என்றால் ஆணை விட்டு விலகிச்செல்லுதல் என்று அர்த்தமில்லை, மாறாக ஆணீயச் சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான்.
ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுகாப்பற்ற உணர்வில்' இருப்பதாக நம்ப வைத்துக்கொண்டிருகிறது. அவளும் அதை முழுமையாக நம்புவதாகவே படுகிறது. சார்பு ஒரு சுய தேவை என்கிற அளவுக்கு அவள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாவே எனக்கு தோன்றுகிறது. உடல்வலு கூட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்களுக்குஇருப்பது வலுவான திறன், ஆண்களுக்கு இருப்பது வலு. உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்கி அடுத்த அறையில் வைப்பது ஆண்களுக்கு சுலபம், மாறாக ஐம்பது துணிகளை உட்கார்ந்த இடத்தில் துவைத்துப்போட அவனுடம்பில் திறன் கிடையாது. விதி விலக்குகள் விலகுங்கள்.
இந்தவையான சுய அறிதலே பெண்களுக்கு நம்பிக்கை என்கிறேன். தான் தனியாக வாழ தேவையான அறிவை பெண் பெற்றுவிட்டால் அவள் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுவாள். குடும்ப அமைப்புகளை சிக்கலின்றிபுரிந்து கொண்டு ஒரு சோலை நீரோடையாக தனது குடும்பத்தை அமைத்துக்கொள்ள அவளால் முடியும். பெருங்காதலும் பேரன்பும் இல்லாத பெண்களை நான் ஆண் என்றே கொள்கிறேன். அவர்களையும் விட்டுவிடலாம் பாவம் அவர்கள். சூழ்நிலை.

தொடரும்..
*****************************

1 comment:

chandra said...

"ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுகாப்பற்ற உணர்வில்' இருப்பதாக நம்ப வைத்துக்கொண்டிருகிறது. அவளும் அதை முழுமையாக நம்புவதாகவே படுகிறது."

இந்த கருத்து முற்றிலும் உண்மையாகவே எனக்குத் தோன்றுகிறது.

"உடல்வலு கூட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்களுக்குஇருப்பது வலுவான திறன், ஆண்களுக்கு இருப்பது வலு. உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்கி அடுத்த அறையில் வைப்பது ஆண்களுக்கு சுலபம், மாறாக ஐம்பது துணிகளை உட்கார்ந்த இடத்தில் துவைத்துப்போட அவனுடம்பில் திறன் கிடையாது."

இது என்னை யோசிக்க வைக்கிறது. ஆதிரன். மிக முக்கியமான கட்டுரையாக இதை கருதுகிறேன் தொடர்ந்து எழுதுங்கள்.