****************************
மனிதனை செயல்பட நிர்பந்திக்கும் நெம்புகோல் இரண்டே உள்ளது. ஒன்று பயம் மற்றொன்று சுயவிருப்பம் - நெப்போலியன் போனபார்ட்.
****************************
ஜெகநாதனும் வசுபாரதியும் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். "என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக - வசு" "அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் - ஜெகன்" இப்பொழுது நெப்போலியனின் கூற்று என்னசொல்கிறது என்று பாருங்கள். எவ்வளவு துல்லியமான வரிகள். அறத்தின் தேவை இங்கு தொடங்குகிறது என படுகிறது. ஜெகன் சொல்லுவது போல அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது ஏனென்றால் அறத்தின் உற்பத்தியே இவையிரண்டிற்கும் எதிரானது என்பதாலத்தான்.
பயமும் சுயவிருப்பமும் தான் நான் புரிந்துகொண்டிருக்கும் ஆதி உள்ளுணர்வு.
//அறமென்பது குற்றவுணர்ச்சியில்லாது ஒரு செயலை செய்தல் ஆவதே என்பது என் கூற்று - வசு.
அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது என்பதே என் கருத்து. அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் என்ற மட்டில் அறத்தின் பால் காமம் கொள்கிறேன் - ஜெகன் //
இவையும் அவர்களுக்கான அறவடிவமே.
//மனித சமுதாயத்திற்கு தேவை என்று யார் கருதியது?எது தப்பு ? எது சரி? // என்று கேட்டிருக்கும் பத்மாவின் கேள்விதான் ஆதி கேள்வி. உலகமுழுவதும் இதற்கு பதில் சொல்லிச்சொல்லி மனிதர்கள் களைப்படைந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் பதில்கள் நின்ற பாடில்லை.ஏனென்றால் என்றைக்கும் நிலையான அனைத்துக்கும் உகந்த 'ஒற்றை அறம்' என்ற ஒன்றை நாம் இதுவரை கண்டதில்லை. பெரும்பான்மையான மனிதர்கள் ஒப்புக்கொள்கிற மனித எண்ணத்திற்கு சுகம் அளிக்கும் என்று நம்ப படும் அறங்களே தற்போதைய பொது அறமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்ததந்த காலங்களுக்கு தக்க அவை மாற்றம் பெறலாம். உதாரணமாக பொய் சொல்லக்கூடாது என்பது ஒரு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம். இந்த அறத்தின் மூலம் மனிதனுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது. என்முன் நிற்கும் ஒருவர் என்னிடம் பொய் சொல்லவில்லை என்று நான் நம்பினால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படி எல்லோரும் பொய் சொல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி பன்மடங்காகி பொய் சொல்லாமை என்கிற ஒரு அறத்தின் மூலம் மனிதனின் மகிழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது. நல்லதுதானே. ஆனால், அறம் என்பது பெரும்பான்மையின் குழந்தை. முதலிலேயே சொன்னேன் சமுதாயம் என்கிற பின்புலம் இல்லாத மனிதனுக்கும் அறத்திற்கும் அட்சரமும் தொடர்பில்லை. சமுதாயமற்ற தனிமனிதனிடம் இருப்பது பயமும் சுயவிருப்பும் மட்டுமே. எனவே அவன் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறான். அதற்கான காரணி அவனிடமிருந்தே ஊற்றெடுக்கிறது.
அவன் செயல்பாடுகளின் முடிவில் அந்த மொத்த பலனையும் சீர்தூக்கிப் பார்க்கும் சமுதாயம் அந்த பலன் பொதுவான மக்களுக்கு உகந்தது எனக்கருதினால் எல்லா பலனையும் மொத்தமாக சுவீகரிக்கும். இல்லையென்றால் அந்த தனிமனிதன் துண்டாடப்படுவான். இந்த கடும் இடர்பாடுகளை மீறி தனது அனுபவத்தை ஒரு மொத்த சமுதாயத்தின் அனுபவமாக மாற்றவும் புது அறங்களை உற்பத்திசெய்யவும் முடிந்த மனிதர்கள்தான் ஆன்மிகம் என்கிற சொல்லை விதையாகக்கொண்டு மதத்தினை ஏற்படுத்தினார்கள். மதம்!
இயல்பூக்கத்துடன் ஏற்படும் ஆதி உள்ளுணர்வை முன்னிறுத்தி பலவகையான முயற்சிகள் மேற்கொண்டு பல நற்பலன்களை கண்டடைந்த மனிதர்கள் அவர்கள் கண்டடைந்ததை தத்துவம்/மதம் என்கிற இரு பெரும் பிரிவுகளில் உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். இந்திய துணைக்கண்டம் இவ்வகையான சிந்தனை மரபை மதத்தின் மூலம் பெற்றுக்கொள்ளத்தொடங்கியத்தில் அதன் தோல்வி ஆதிக் காலத்திலேயே உறுதிசெய்யப்பட்டு விட்டது என தோன்றுகிறது. இவ்வகையான சிந்தனை இந்த கட்டுரைக்கானதல்ல. மதம் பற்றி இங்கு நான் பேசப்போவது இல்லை.
ஆக அறம் என்பது எதன்பொருட்டு. எல்லையில்லா மகிழ்ச்சி என்கிற ஒன்றை காண. அப்பிடினா நாம மகிழ்ச்சியா இல்லையா. அளவை இடிக்கிறது. தமிழில் வள்ளுவம் உட்பட நன்னெறி நூல்களுக்கு இன்றுவரை குறையில்லை. தமிழில் மட்டுமென்றால் உலகளவில்? எதற்கு இத்தனை அறம். அதற்கு விளக்கக்குறிப்புகள். எல்லாம் மனித மகிழ்ச்சிக்கானவை என்றால் எங்கே மகிழ்ச்சி?
மகிழ்ச்சி ஏன் இல்லை என்ற கேள்விக்கு நான் படித்தவரை ஒரே ஒரு மனிதன் தான் சரியான உணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான பதிலை அளித்துள்ளதாகப் படுகிறது. அவன் பெயர் சித்தார்த்தன். அவன் சொன்னான்: துக்கம் உள்ளது.!
அறமற்ற, இரக்கமற்ற ஒரு வாக்கியம் இது.
*********************
தொடர்கிறேன்
****************
5 comments:
நெப்போலியன் கூறியபடி பயமும் இல்லாமல் சுயவிருப்பும் இல்லாமல் கடமை என்று ஒன்று நடுவில் உண்டு ...இல்லையா? .இது திணிக்கப்பட்டது .. you can say its a grey area where a man compels himself to do something as a duty neither with fear nor for pleasure .its expected of him according to the role he plays .
is my thought right here?
மகிழ்ச்சி ஏன் இல்லை என்று கேட்பதற்கு முன் ,மகிழ்ச்சி என்றால் என்ன? உண்மையில் எப்போது மகிழ்கிறோம் ? அது எத்தனை நேரம் நம்முள் இருக்கிறது?
மிக அருமையான தவறான புரிதல் ஆதிரன். மனிதன் என்று இங்கு யாருமே தனியே கிடையாது.
நிற்க, சித்தார்த்தன் என்பதை விட புத்தன் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அறம் பற்றி கூறியது...துக்கத்தை அல்ல. அது பிரபஞ்சத்தையும் சேர்த்துக்கொள்ளும், தன்னையும் மாய்க்கும்.நீங்கள் அவன் சொன்ன துக்கத்தை அவநம்பிக்கை வாதமாக புரிந்துகொள்ளாதீர்கள்.அது தீர்க்கமுடியாத பிரச்சினை நிலைத்த ஒன்று என எண்ண வேண்டாம்.
எது பெரும்பாலோனர்க்கு சுகத்தை தருகிறதோ அது நல்லது (அறமென்றும் கொள்ளலாம்)என்று கூறிய புத்தரை ’பெரும்பான்மை எப்பொழுதும் சரியான முடிவையே எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது’.என்று சொன்ன லெனின் கூற்று மூலம் மறுவாசிப்புச் செய்யலாம். அனைத்திற்கும் மேலாக துக்கத்தை வெல்ல புத்தன் இம்மண்ணில் காலூன்றி சொன்னது எண்வழிப்பாதைகள்.
1 சரியான புரிதல்கள்
2 சரியான நோக்கம்
3 சரியான பேச்சு
4 சரியான நடத்தை
5 சரியான வாழ்முறை
6 சரியான முனைவு
7 சரியான ஓர்மை
8 சரியான தியானம்.
இவைகளைக் கைக்கொண்டால் துக்கம் நீங்கும் என்கிறான் ததாகன்.
மாறாய் நான் பேச விரும்புவது குற்றவுணர்ச்சி. அஃதின்றி வேறில்லை. ஒரு மனிதனை கண்ணீர் விட வைப்பது எது. அதற்கு தேர்வென்ன என்ற கேள்விகளுக்கு நான் போகவில்லை அது வயதிற்கு வயது, புரிதலுக்கு புரிதல் வேறுபடும்.
சுயம் என்று ஒன்று கிளர்ந்த பின் அதாவது எனக்கு நான் முக்கியம் என்ற எண்ணம் வந்தவுடன் ஏன் அந்தரங்கம் உருவாகிறது. அஃது ஏன் குற்றவுணர்ச்சிக்கு வழிகாட்டி அழைத்துச் செல்கிறது.
என்னைப்பொறுத்தவரையில் குற்றவுணர்ச்சிதான் மனிதனுக்கு மனிதனை அறத்தைப் பேச வைக்கிறது. குற்றவுணர்ச்சியும், அந்தரங்கமும் இல்லாதவனுக்கு அறம் தேவையில்லை. உண்மையில் அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவன் ஏறக்குறைய குழந்தை, இன்னும் சொன்னால் முற்றிலும் வெளியில் வீசப்பட்ட அதே ததாகர்.
பத்மா கூறியிருப்பது இந்து மதத்தின் ஒற்றை வரி மேற்கோள். இதை இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே; இது கதைக்கு உதவாது. ஏனென்றால் உடல் வேறு புலன்கள் வேறு என பிரித்துப் பார்க்கமுடியாது, முடியும் என்றால் அது நம் உடலின் மேல் நாமே செலுத்தும் வன்முறை. வன்முறை அறமாகாது.போனோபார்ட் ஒரு போர்க்கள நிபுணன் அவன் கூறிய வார்த்தைகள் தத்துவத்திற்காகாது என்றே என்ணுகிறேன் அவன் கூறிய சுயவிருப்பம், மற்றும் அச்சம்( உயிரச்சம் என எடுத்துக்கொள்கிறேன்) இவை இரண்டும் விலங்குகளுக்கும் உண்டு. இவை இரண்டும் உயிர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அழிவை நோக்கி பயம் வரத்தான் செய்யும் இல்லாமல் போய் விடுவோம் என்பது வேதனை தரக்கூடியதாக தோன்றுகிறது. இந்த நிலையாமையிலிருந்துதான் மதங்களும், கடவுளும் தோன்றியது.அதனடிப்படையில் நாம் அறம் பேச இயலாது. விலங்குகள் கொல் அல்லது கொல்லப்படுதல் என்ற இரண்டை மட்டுமே அறமெனக் கொள்ளும், அவைகளுக்கு கூட்டு மனநிலை இல்லை, அது மனிதனுக்கு உண்டு, கூட்டு மனநிலை இல்லையென்றால் தனித்த அறத்திற்கு தேவை இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. எடுத்துக்காட்டாக ஆயிரம் பேர் பைத்தியங்கள் இருந்தாலும் சுய நினைவுடன் கூட்டுமனநிலையில் இருக்கும் இரு நபர்கள் ஆயிரம் பேரையும் ஒழுங்கு படுத்த முடியும். இதுவே கூட்டு சமூகத்திற்கான மனநிலை, இதை தனிமனிதனுக்காக வகுக்கமுடியாது, அது அவனுக்குரிய தனி விருப்பு. மகிழ்ச்சி துக்கம் இல்லாத மனிதன் இருக்கலாம் ஆனால் அந்தரங்கம் இல்லாத மனிதன் கிடையாது. கூடவே குற்றவுணர்ச்சியும்.
....இதற்கிடையில் மனிதனை செயல் படவைக்கும் நெம்புகோல் சுயவிருப்பம், அச்சம் இவையிரண்டையும் தாண்டி, இயற்கை அவனுக்கு அடித்திருக்கும் பெருத்த ஆப்பு ஒன்றிருக்கிறது.அதுன் இல்லையெனில் மனித குலத்திற்கு எதுவும் தேவையில்லை, அதனால்தான்
பிதாமகன் மார்க்ஸ் ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை விலங்குகளைத் தவிர, அடைவதற்கோற் பொன்னுலகம் இருக்கிறதென்றான்.
அந்த மகத்தான ஆப்பின் பெயர் பசி...பசி...பசி.
ஆம்...பகிர்ந்து கொள்வதற்கு நம்மிடம் பசியைத் தவிர வேறில்லை.
- தோழன் சே குவேரா.
அறம்... பசி நீங்கியதும் கண்ணுக்கு மங்கலாகத்தெரியும் ஒன்று. ஔவைகூறியது போல் பசி வந்திட பறக்கும் வஸ்துகளைப் பார்க்கலாம்.
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
அப்படியெனில் அறம்...
அறமென்றால் குற்றவுணர்ச்சியும் அந்தரங்கமுமே....விவாதிக்கலாம்.
Post a Comment