**************************
அனைத்து சமுதாயமும் தனிமனிதனுக்கு எதிரானதே. அல்லது ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு எதிரானவனே.
***************************
முதலில் நன்றி வசு. உன் தீவிரமான இந்த வெளிபடுதலுக்காக.வசு சொல்பவைகள் எல்லாம் ஒருவகையில் சரியானவைதான். வசு , முதல் பின்னூட்டக் கருத்திலேயே
//என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக, துக்கம் என்ற ஒன்றை அறியாமல் சந்தோஷத்தின் ருசியை உணரமுடியாது//
என்று அறம் என்று ஒன்று எதற்காக என்றும் அறம் என்றால் என்னவென்றும் தெளிவாக சொல்லியிருக்கிறான் . அதன் பின் வசு கூறியவை எல்லாம் எவையெல்லாம் அறம் என்பதைப் பற்றித்தான். எனது நோக்கம் அறம் என்பது யாவை என்கிறதை பற்றி அல்ல. மாறாக அறம் என்கிற ஒன்றின் ஊற்றுக்கண் என்ன அது எதன்பொருட்டு வந்தது என்பதை நான் புரிந்துகொண்டவைகளைப் பதியும் முயற்சி மட்டுமே.
அதன் அடிப்படையில்தான் புத்தனின் ஞானச்சொல்லை குறித்தேன். துக்கம் பற்றி அறியாமல் சந்தோசத்தை அறிய முடியாது என்று சொல்லியிருக்கிறாய் வசு, மிகச்சரி. அந்த துக்கம் உள்ளது என்பதை புத்தனை விட தெளிவாக சொன்னவன் யாராவது இருக்கிறார்களா. புத்தனின் ஞானமே துக்கம் உள்ளது என்பதை கண்டைந்ததுதான். துக்கம் உள்ளது. துக்கம் உள்ளது என்பதை அறியலாம். துக்கத்தை களையலாம். துக்கத்தைக் கலைக்க வழிமுறை உள்ளது. என்கிற நாற்பெரும் உண்மைகளை சொல்லிவிட்டுத்தான் அவன் துக்கத்தை களைய எட்டு வழிமுறைகளை தனதான அறமாக மொழிகிறான். அவன் கண்ட உண்மை அறமற்றது. அவனது மஜ்ஜிமா போதனைகள் அறவழிக்கொள்கைகளே.
பிறகு வசு சொல்லும் பசி, குற்றவுணர்வு, அந்தரங்கம் ஆகியவை அறம் பற்றிய சிந்தனைகளில் பிற்பாடு பேசப்படுகிற பேசுபொருள்கள். இதில் பசி என்பது ஆதியுணர்வு மற்றும் அடிப்படை இயல்பூக்க வகைமைகளில் ஒன்று. மற்றபடி அந்தரங்கமும் குற்றவுணர்வும் அறத்தின் வளர்ப்புப் பெற்றோர்கள் என்பதில் எனக்கும் சம்மதமே. அவற்றைப்பற்றி பின்னால் விவாதிக்கலாம். வசு சொல்லும் 'தனி மனிதன் என்று இங்கு யாருமே இல்லை' என்கிற கூற்றுதான் எனக்கு சற்று பிடிபடவில்லை.
பத்மா சொல்லும் கடமை ஒரு முரண்நகை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கும் அச்சம் மடம் ஓர்ப்பு கடைபிடி ஆகியவை ஆண்களுக்குமாக அறம் என்கிற குணமாக்கப்பட்ட நிகழ்வுப்போக்கின் ஒரு அலகுதான் கடமை. ஒரு மனிதன் யாராக இருக்கிறான் என்னவாக வெளிப்படுகிறான் என்பதே ஒரு அபத்தக்கேள்வி என்று தோன்றுகிறது. மனிதனின் ஒரே கடமை மனிதனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுதானே. பிரபஞ்ச அதிசயத்தின் உச்சமும் பரிணாம வளர்ச்சியின் நிகழ்உச்சமும் ஆன மனிதன் தனது இயல்பான உள்ளுணர்வுக்கும் இயல்பூக்கத்திற்கும் இணையாக பேரன்பை இருத்துவதற்கு பதிலாக இவற்றிற்கு எதிராக அறத்தை தோற்றுவித்தான் என்கிறதே எனது புரிதலாய் உள்ளது.
நிகழில் அறம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத அரசியலாக்கப்பட்டு ஊழிக்காலமாகிவிட்டது. எவையெல்லாம் அறம் என்று ஒரு பாடு குவியல்கள் மனித மனங்களில் இயற்கையிலேயே குவிந்து பத்மா சொன்னது போல ஜீனிலேயே கலந்து போய்விட்டது. அதனால் எவைஎவை அறம் எனும் புரிதலுக்கு நான் செல்லவில்லை மாறாக இவ்வகையான அறங்களை நம் மனம் இவ்வளவு அழுத்தமாக நுழைந்த செயல்பாட்டியக்கம் பற்றிய எனது புரிதல்களை எழுத்தத் தொடங்குகிறேன். அதற்காக நாம் ஒரு சொல்லை பற்றி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இணையான அச்சொல்லைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அச்சொல்: நம்பிக்கை.
**************
தொடர்கிறேன்
****************
2 comments:
நம்பிக்கை என்ற சொல் அகராதியில் வேண்டுமானால் இருக்கலாம் .அது நிகழ்வில் யாரிடமும் முழுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை:)) .அது வரும் சாத்தியம் மிக மிக குறைவு .
எதை நம்புவது? எல்லாமே ஏமாற்றும் மாயை தானே ?
ஒரு முறை நீங்கள் எழுதியது போல் இந்த வாழ்வே யாரோ ஒருவருடைய கனவாய் இருக்கக் கூடிய சாத்தியம் இருந்தால் ,நாம் எதை நம்புவது ?
’(பிறரை) சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதியின்மை) இருக்கிறது. சுதந்திரமாக உள்ளவனிடம் சலனமில்லை. சலனம் எங்கேயில்லையோ, அங்கே அமைதி உண்டு. அமைதி எங்கே உளதோ, அங்கே (மோகம் முதலிய வெறிகள் சம்பந்தமான) இன்பம் துய்க்கும் களியாட்டமில்லை. இன்பவேட்டை எங்கேயில்லையோ அங்கே ( பிறப்பு – இறப்பு ) வருதலும் போதலும் இல்லை. வருதலும் போதலும் எங்கே இல்லையோ அங்கே ஒரு நிலையிலிருந்து, மற்றொன்றுக்கு மாறுதலும் இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் எங்கேயில்லையோ அங்கே ‘ இங்கு’ என்பதில்லை. ’அப்பால்’ எனபதில்லை. ‘இங்கும் – அங்கும்’ என்பதில்லை. அதுவே துக்கத்தின் முடிவு.’
- ததாகன்.
அன்பு மகி....
நம்பிக்கை என்பது மனச்சாய்வு கொண்டது, ஒருவகையில் அது எதிர்பார்ப்பென்ற அளவிலேயே தேங்கும். நம்பிக்கைதான் மதங்களை கடவுள்களை அறங்களை கண்டுபிடித்திருக்கிறது.மட்டுமல்லாது நம்பிக்கை என்பது பெருங்கற்பனை. நம்பும் தன் மனதின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டால் அங்கு மற்றொரு நம்பிக்கைக்கு தேவை ஏற்படும், முழு முற்றான நம்பிக்கையென எதுவும் இல்லை. தனிமனிதனுக்கு நம்பிக்கைகள் தேவையில்லை. சார்புதான் அவனுக்கு நம்பிக்கையைத்தரும். சந்தேகங்கள் வாழ்க அவற்றிற்கு பதில்கள் மட்டுமே தேவைப்படும் அதையும் நம்பிக்கை என்ற எண்ணத்தால் சந்தேகம் மட்டுமே கொள்ள முடியும். நம்பிக்கையை விட சந்தேகம் வலுவான சொல். அது எல்லா...எல்லாவற்றையும் தடமின்றி துளைக்கும் அம்பு.
Post a Comment