21 May, 2010

எட்டுவதும் எட்டாததும்"ஒற்றையிலக்கங்களில் எனக்கு பிடித்த எண் எட்டு. பிடிக்காத எண் எட்டு. எட்டு ஏன் பிடிக்கும். அது இரண்டு சுழியன்களால் ஆனது. எட்டு ஏன் பிடிக்காது. அது இரண்டு சுழியங்களை மேலும் கீழுமாய் வைத்துக்கொண்டு ஒரு ஆழமான பிம்பத்தைக்காட்டுகிறது... " என்று சொன்னான் கோபி.சொன்ன இடம்: வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பிருந்த அடைத்த பெட்டிகடைக்கும் ஒரு செருப்புதைப்பவனுக்கும் இடையிலிருந்த ஒரு இடம்.
சொன்ன பொழுது: சூரியன் மறைந்த பிறகான மாலை. நேரம் ஏழு ஐம்பத்து ஐந்து.
அசமந்தமான மனிதர்களின் கூட்டம். மதியம் நாலு மணியிலிருந்து நாலு அம்பத்து ஐந்து வரை திகுடுதிம்பான மழையில் வினோதமான வீச்சம் காற்றில் பரவியிருந்தது. கோபிக்கு முன்னாள் நின்று அவன் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இரண்டு பெண்கள். கேட்காமல் தேநீர் அருந்த போனவன் ராஜகோபாலன்.
துர்கா அவனை கொஞ்ச நேரம் உற்று பார்த்தாள். பின்பு அவளைப்பார்த்தாள். கேட்டுக்கொண்டிருந்த பாத்திமா "ஏசுவே.."என்று முனுமுனுத்தாள். அதே நேரத்தில் ராஜகோபாலன் பாதி குடித்த கின்லே பாட்டிலுடன் அங்கு வந்து சேர்ந்தான். போலாமா என்று கேட்டாள் துர்கா.cut.


வாசகா உன்னிடம் உள்ளது ஒன்பது சட்டங்கள்.குறைந்தபட்சம் அவற்றில் நான்கையாவது உபயோகிக்கவில்லைஎனில் நீ இந்த கதையை படிக்க லாயக்கற்றவன். மன்னிக்கவும் லாயக்கற்றவர்.சட்டம் ஒன்று:
துர்கா ஒரு ஓவியை. தூரிகைகளில் வண்ணம் குழப்பி இல்லாதவற்றை உருவாக்குவதன் மூலம் தான் இல்லாமல் போவதாக தன்னை கற்பனை செய்கிறவள். அவளுடைய மாதவிடாய் சீராக உள்ளது. பதினேழு முறை கற்பிழந்தவள். அதற்கு ராஜகோபால் மட்டுமே காரணம் அல்ல. அவளது முதல் கற்பிழப்பு பதிமூன்று வயதில் ஒரு சைக்கிளை ஓட்டும் போது ஏற்பட்டது. கன்னித்திரை கிழிந்தால் கற்பு போய்விடும் என்று அறியாத வயதில் இது நிகழ்ந்தது. பெண்களை ஒரு சைக்கிள் கூட கற்பழிக்கும் என்று தெரியாத ராஜகோபால் தனது முதல் பெண்ணான துர்காவை காதலிக்க தொடங்கியதால் அவனது பெரியம்மாவின் மீதிருந்த ஒரு ஈர்ப்பு அவனை அவமானம் கொள்ள செய்து அதை மறுப்பதற்காக மாலை கல்லூரியின் அரபு மொழிகற்க விண்ணப்பம் செய்து கொண்டான். பிறகு நீளமானதை இடமிருந்து படிக்கவும் வட்டமானதை பின்பக்கமிருந்தும் படிக்க கற்றுக்கொண்டான். தன்னை ஒரு சமபக்க முக்கோணமாக வெளிப்படுத்தி ராஜகோபாலை நிலைகொள்ள விடாமல் பார்த்துக்கொண்டாள். அவளது முதல் தவறு ராஜகோபாலுடன் கொடைக்கானல்செல்ல சமத்தித்தது. அதன் பலனை நீங்கள் யூகிக்கலாம். அவ்வளவு சுலபமா என்ன என்னை வீழ்த்துவது என்ற துர்காவின் நினைப்பில் மண்ணள்ளிபோட்டது காலம்.


சட்டம் இரண்டு:


ராஜகோபாலன் ஆசிரியரின் மகன். அம்மா திருமணத்துக்கு முன் கைத்தறியில் ஈடுபட்டவள். கல்லூரி முடித்தும் முடிக்காமலும் புத்தனையும் ஜென்னையும் தேடி சைக்கிளில் புறப்பட்டவன் இரண்டு வருடத்தில் மாநில படகு விடும் போட்டியில் வெற்றிபெற்று அன்றே துர்காவைப் பார்த்து புத்தனின் முகத்தில் கரி பூசிவிட்டு அவளுடன் மேத்தமெடிக்ஸ்- ல் ஈடுபட்டான். சமன்பாடுகளின் முடிவில் துர்க்கா ஒப்புக்கொண்டாள்.


சட்டம் மூன்று:


கோபி கணக்கு வாத்தியார். அன்பு ஸ்டடி சென்டர் நடத்துகிறான். இரண்டாயிரத்து ஆறாம் வருடம் மார்ச்சில் கணக்கில் தவறிய பாத்திமா அக்டோபருக்கு தேர்வு எழுத அன்பில் இணைந்தாள். அதன் பின் கோபி கணக்கு சொல்வதை விட்டுவிட்டு கணக்கு செய்வதை ஆரம்பித்தான். இரண்டு வருடங்களுக்கு பின் சென்டரை பூட்டிவிட்டு கீதலோச்சினி வித்யாலயாவில் ஓவிய ஆசிரியனாக சேர்ந்து விட்டான்.


சட்டம் நான்கு:


பாத்திமா என்கிற பார்வதி. இரண்டாயிரத்து ஆறில் படிக்கப்போனவள் இரண்டாயிரத்து எட்டில் கோபியுடன் ஓடிப்போனாள். அப்பத்தை உதரச்சொல்லி பார்வதி மணவாளன் ஆனான் கோபி.போதும் நான்கு சட்டங்கள் என்று முடிவு செய்கிறான் கதைசொல்லி. சிவராமன் சொன்ன frame - தான் சட்டம் என்று தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தகவலாகவும் சொல்கிறான் எழுதுபவன். எழுதுபவனும் கதைசொல்லியும் ஒரே ஆளா அல்லது.... அது அவர்கள் பிரச்சனை. விட்டுவிடுவோம்.


நான்கு பேரின் சந்திப்பு தளம் கீதலோச்சினி பள்ளி. அவர்கள் இந்த கோடையில் கொடைக்கானல் செல்ல முடிவுசெய்து இப்போது வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் நிற்கிறார்கள். அப்பொழுதுதான் கோபி சொன்னான்: அவனுக்கு எட்டு பிடிக்கும் என்றும் அவனுக்கு எட்டு பிடிக்காது என்றும்.


பின்பு அவர்கள் சென்று விட்டார்கள். இனி இந்த நான்கு சட்டங்களையும் நீங்கள் என்னசெய்வீர்கள் என்று எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் நான் பார்த்துக்கொண்டிருக்கிற சட்டம் இங்கிருக்கிறது. அதே வத்தலக்குண்டின் பேருந்து எதிர்புறத்தில், அந்த நான்கு பேரும் நின்றிருந்த இடத்திலிருந்து மூன்றடி தொலைவில் சாலையில் விழுந்துகிடந்த ஸ்கட் கருப்பன்.


நாட்டின் அசுவாரஷ்யமான காட்சி. போதை தாங்கமாட்டாமல் தெருவோரமோ சாலையோரமோ விழுந்து கிடப்பது. கதைசொல்லி இது கொடுப்பினை என்கிறான். போதையில் கூட தனைமறந்த நிலை வாய்க்கப்பெறவில்லை என பெருமூசெறிகிறான்.


விழுந்து கிடந்தவனின் காதில் விழுகிறது எட்டு பற்றிய கோபியின் விளக்கம். கருப்பன் ஒரு தொழில்முறை துரோகி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்சு பேர்வழி. கந்து கருப்பன் என்கிற பேர் அமெரிக்க ஈராக் போரில் உபயோகப்படுத்தப்பட்ட ஏவுகணையான ஸ்கட்டை உலகம் பார்த்தபின் ஸ்கட் கருப்பனாக மாறிப்போனது. அவனுக்கும் எட்டு என்கிற எண்ணை பிடிக்காது. ஆனால் எட்டு என்கிற வார்த்தையைப் பிடிக்கும். நிறையவே. வேணும் என்கிற இடத்தையோ வேண்டாம் என்று ஓடும் வாடிக்கையாளனையோ மிக எளிதில் எட்டிவிடுவான். மெல்ல தரையில் கை ஊன்றி எழுந்து நின்று நாலு எட்டு கூட நடக்க முடியாது போல என்று உரத்து சொன்னான்.


செருப்புதைக்கிற ஐந்தாம் சட்டம் அவன் வாழ்க்கையில் முதல் முறையாக அவனது ஊசியால் பெருவிரலைக் குத்திக்கொண்டான். அவன் சொன்னான்: பாத்து எட்டு வெச்சு போ மாப்ளை என்ன ஊசி குத்துனமாதிரி எதுவும் உன்ன குத்திடப்போவ்து.


ஆறாம் சட்டம்: மீண்டும் மழை.


ஏழாம் சட்டம்: ஒரு மின்னல் காவல் நிலைத்து சுற்றுசுவருக்குள் இருந்த மரத்தில் விழுந்து என்பது வைவ்வால்களை கொன்றது. மின்னல் விழுந்தா இடிவிழுந்தா என்று லாஜிக் பேசுகிறான் எழுதுபவன். எழுதுபவனுக்கு என்ன பேச்சு என்கிறான் கதைசொல்லி.சொல்லித்தரவா.. சொல்லித்தரவா...ஆஆ... மெதுமெதுவாய் அழகே...


மொபைல் போனில் சிவராமன் அழைக்கிறார். எடுக்கிறான் எழுதுபவன். அவனுக்கெல்லாம் அமைப்பியல போய் பாடம் எடுத்தேனே.. என்ன சொல்லணும்.. தேவையா எனக்கு. அவன் எப்படி போனா எனக்கென்ன .. போய்த்தொலைங்க...


cutபிறகு என்ன நடந்தது என்று கதைக்கு வெளியே நடந்த கதையை யூகி வாசகா. யூகி வாசகி.


ஒரே ஒரு clue மட்டும் தருகிறேன்: ஸ்கட் கருப்பனை அன்றிலிருந்து பதினேழாம் நாள் அடையாளம் தெரியாத பார்த்தால் சொல்லக்கூடிய எட்டு பேர்கள் சேர்ந்து இருபத்தியாறு இடத்தில் குத்தி கொன்றுவிட்டார்கள்.


கதைசொல்லி இதை பொய் என்கிறான். எழுதுகிறவன் வழிமொழிகிறான். சிவராமன் சிலகாலம் தொடர்பு எல்லையை துண்டிக்க விரும்பி வானத்தை பார்க்கிறார்.
1 comment:

Kousalya Raj said...

வித்தியாசமான கதை அமைப்பு, கதை தளம்! முடிவில் க்ளு கொடுத்து நிஜம் சொன்ன நேர்த்தி உண்மையில் இந்த எழுத்துக்கள் எனக்கு புதுமைதான். வாழ்த்துக்கள் நண்பரே!!