30 July, 2010

ரசமிழக்கும் கண்ணாடி 1

ஒரு அலுப்பான பணி நிமித்த பயணத்தில் இருக்கிறேன். இவ்வகையான பயணத்தை அனுபவிக்கும் போது மிகுந்த உடல் வலியும் மனச்சோர்வும் ஏற்படுவதை தவிர்க்க புத்தகத்தையும் பாடல்களையும் தவிர்த்து இம்முறை உணவு விசயத்தை எடுத்துக்கொண்டேன் இருப்பை சுவாரஷ்யப் படுத்துவதற்கு. திருவாரூரும் கும்பகோணமும் சென்றுவந்த ஊர்கள். இன்று மயிலாடுதுறைக்கு. உணவு பற்றி சொல்வதற்கு முன் திருவாரூர் ரயிலடிக்கருகில் இருக்கும் தாசன் சிகை அலங்காரக்கடை பற்றி சொல்கிறேன். ஆருக்கு ஏழு அடி அறையில் ஏறக்குறைய எண்பத்து ஐந்து வருடங்களாக இயங்கி மூன்றாவது தலைமுறை சிகை அலங்காரத்தொளிலாளியாக இருக்கும் பாலன் என்பவர் எனக்கு சிகை அலங்காரம் செய்யும் (!) போது அவரது தாத்தா சோமசுந்தரம் பர்மாவிலிருந்து பெல்ஜியம் ஆடிகளுடன் வந்து அந்த இடத்தில் கடை விரித்தபோது தாசன் என்கிற பெயரை சுதந்திர போராட்ட தியாகி எம் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் அபிமானத்தில் தெரிவுசெய்த பெயர் என்றார். எண்பத்து ஐந்து வருடங்களாக அந்த இடத்திற்கு வாடகை கொடுத்து இன்று அந்த வாடகை 250 ரூபாயாக உயந்திருக்கிறது. பாலனின் ஒரு மகளும் மகனும் வேறுவேறு தொழிலை பார்க்கப்போய்விட்டார்கள். இவரின் வாழ்நாளுக்கு இன்னமும் தினமும் முன்னூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறார். ஒருகாலத்தில் அந்த தெருவில் அடிக்கடி நடந்த நமது முதல்வரின் இளமையான முகத்தை அந்த அடிகள் பிரதிபலித்ததை நினைவுகூர்ந்தார். அந்த பெல்ஜியம் கண்ணாடிகள் ரசமிழக்கத்தொடங்கியிருக்கின்றன.
திருவாரூரில் இறங்கியபோது மதிய உணவு வேளை. அதே ரயிலடியில் சுதந்திரத்துக்கு முன்னதாக திறக்கப்பட்ட மனோன்மணியம் மெஸ்-ஐ அறிமுகம் செய்தார்கள். உருப்படியான அசைவ சாப்பாடு. (பிரமாதமான சைவ உணவுக்கடையின் பெயரை பத்மா மறந்துவிட்டதால் அங்கு செல்ல இயலவில்லை). இரவு எப்பொழுதும் போல தெருவோரக்கடையை தேடாமல் தைலம்மை உயர்தர உணவுவிடுதியில் ஒரு ரவா தோசை. எனக்குத்தெரிந்து தமிழ் நாட்டில் முழுவதுக்கும் ஒரேமாதிரியான taste தான் இருக்கிறது இந்த ரவா தோசைக்கு. ராத்திரியோடு ராத்திரியாக கும்பகோணம் ரயில்நிலையம் சென்று விட்டேன். தமிழகத்தின் அமைதியான மற்றும் அழகான ரயில் நிலையங்களில் ஒன்று. மதிய நேரத்தில் மாடுகள் ஓடும் நிலையம். கும்பகோணம் ரயில்நிலைய நடைமேடைக் கடையில் கிடைக்கும் காபி பிரமாதமானது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் சென்ற ஊரிது. காலையில் நிலையத்திற்கு முன் இருந்த ஒரு உணவு விடுதியில் பொங்கலும் வடையும். கும்பகோணத்திற்கு உகந்த உணவு. உணவுக்கான பணத்தை வரவேற்பாளர் கல்பனாவிடம் கொடுத்து விட்டு உடன் பணிபுரிபவரின் வற்புறுத்தலின் பேரில் மினி பஸ் ஏறி திருநாகேஸ்வரம் சென்றேன். காலை பதினொன்றரை - பன்னிரண்டு சிறப்பு பாலாபிசேகமாம். அவர் இந்த ஜென்மத்தின் நற்பலன்களை பெற அதை பார்த்தே ஆக வேண்டுமாம். துணைக்கு நான். விதி. என்னசெய்வது. அவர் சொன்ன சுய கதையை. கொடுமை. இன்னொருநாள் பகிர்கிறேன்.
நாகேஸ்வரருக்கும் இரண்டு பொண்டாட்டிகள். நாகவல்லி. நாக கன்னியோ மங்கையோ.. எதோ ஒன்று. மூன்று கற்சிலைகள். பத்தடிக்கு ஒரு கயிறு. சினிமா டிக்கெட் போல முதல் பத்தடியில் அமர 500 ரூபாய்கள், இரண்டாம் பத்தில் 100 ரூபாய்கள் மூன்றாம் பத்திலிருந்து இலவசம். இலவசமாக அமர்ந்தோம். திரையை திறந்து பலவண்ண திரவங்களில் அந்த சிலைகளை கழுவினார்கள். திரையை மூடினார்கள். மீண்டும் திறந்து தீபாராதனை காட்டினார்கள். திரும்பவும் மூடி சிலைகளுக்கு ஆடைகளை உடுத்தி மீண்டும் திறந்தார்கள். பிறகு show முடிந்துவிட்டது என்றார்கள். மதிய உணவுக்காக கும்பகோணம் வந்து விட்டோம்.
திரு நாகேஷின் அருளால் எனக்கு அந்த உணவு விடுதிக்கு வழி காண்பிக்கப்பட்டது. "ஒரு வழி ஏசு (one way jesus)உணவகம்". தயிரைத் தவிர்த்து மிக அற்புதமான அசைவ உணவு, வகைவகையான மீன்கள். காசு கொஞ்சம் அதிகம். ஆனாலும் கும்பகோணத்தில் இது அருமையானது.
தொடர்ந்து சாதாரண உணவகங்களைத்தவிர்த்து இப்படி ஏதேனும் ஒரு கடையை தேடித் போய் உண்ணும் இப்பழக்கம் என்னை சட்டென்று ஒட்டிக்கொண்டுள்ளது. ஏறக்குறைய பதினைந்து வருடங்களாக நான் அதிகம் உணவகங்களில்தான் உண்கிறேன். எனது கடுமையான உணவுக்காலம் ராமநாதபுரத்தில் கிடைத்தது.
இன்று மயிலாடுதுறை செல்கிறேன். இதற்க்கு முன் அங்கு சென்றதில்லை.
**************
தொடர்கிறேன்.

1 comment:

Kousalya Raj said...

interesting....

தொடரட்டும் அனுபவங்கள்...
காத்திருக்கிறேன் அறிந்து கொள்ள....