02 October, 2010

புள்ளி வனம்


ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

மொத்தமாய் என்னை உதிர்கிறது

ஒரு பன்னீர் மரத்தின்

பால்வெண்மை பூ வாசம்

போல. நெகிழ்வினை இழக்கும்

அலைகளில் இருந்து வெளியேறும்

காற்றென திசைகளை குருடாக்குகிறது

சங்கொலி தேங்கும் தீநடனமொத்த

உன் உடல் மொழி. வறள்நாக்கின்

நுனிவீழ்கிறதுன் ஒற்றைத்துளி அமிலம்.

பூக்கிறது சாக்காடு உடலிதழாய்

ஒவ்வொரு இதழிலும் மகரந்தம்

சேகரிக்கிறது உயிர்வாசம். துகள்

துகளாய் இளகுகிறது எல்லாம்

ஒரு இனிய தழுவலில் முற்றும்

தொலைக்கிற என் ஆண்மையை தேடி

என் வெண்புள்ளி ஆணவம் கதறி

அலைகிறது. இல்லாத வானத்தில் நீலம்

போலவே இல்லாத ஆண்மைக்கு

ஆணவம் எனக் கெக்களிக்கிறதுன் அன்பு.

நீலம் பாரிக்கிறது உயிர். உன் ஒரு புள்ளி

எவ்வளவு அடர்த்தியானது

நட்சத்திரங்களை விழுங்குமொரு

கருந்துளை போல.

***************************

6 comments:

பத்மா said...

வண்ணமும் வாசனையுமாய் ஒரு கவிதை ..

எல்லா வண்ணங்களையும் உள்ளடக்குகிறது கருமை ...பிரித்தனுப்பிய வெண்மைக்கு மாற்றாய் .

அதுவே focus ஆக எல்லாவற்றிற்குமாய்

ராகவன் said...

அன்பு ஆதிரன்,

அடர்த்தியாய் இருந்தது அளப்பறியாததாயும் இருந்தது ஒரு கருந்துளையைப்போல... புள்ளி அடர்த்தியா, வெற்றிடமா ஆதிரன்? ஒரு இனிய தழுவலில் முற்றும் தொலைகிற என் ஆண்மை?!!

கொஞ்சம் இடைவெளி விழுந்த முன் பல் போல சுவாரசியமாய் இருக்கிறது.

அன்புடன்
ராகவன்

adhiran said...

thanks padma, ragavan.

வசுமித்ர said...

மன்னிக்கவும் மஹி... இதை கவிதையென்று நீங்களும் நம்பியிருக்கிறீர்கள் என்பதற்கு எதிர்வினைகளுக்கு நன்றி சொல்லியிருப்பதே சான்று. உண்மையில் கவிதைக்கான சிறு கூறு கிடையாத ஒன்று இது. வெற்றுச் சொல்லலங்காரத்தில் கவிதை எப்படி நிலைக்க முடியும். கடவுள் துதிகளாக பாடிய மணிப்பிரளவ பாடல்களைக் கவி என்று உங்களால் சொல்லமுடியுமா உண்மையில் இதில் அதுவும் கிடையாது. அதற்கு தமிழின் ஆதியந்தமுமான வேர்ச்சொற்கள் இலக்கணம் தெரிந்திருக்கவேண்டும்.


வெற்றுப் படிமங்களை முன் வைத்து அதில் உங்கள் உணர்ச்சியை ஏற்றி வைத்துள்ளீர்கள். கவிதைக்கான மௌனத்தை படுகொலை செய்திருக்கிறீர்கள்....பழைய பக்கங்களில் நீங்கள் படித்ததில் பிடித்தது என்று ரசித்து பதிவேற்றம் செய்த கவிதைகளின் உங்களின் வாசிப்பு மனத்திற்கும், நீங்கள் எழுதிய மேற்கண்ட ஒன்றை கவிதையென்று நம்பி உங்களை ஏற்றுக்கொள்ள செய்த அவ்வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

நிற்க...

கவிதை(என்று நம்பி வைத்த விமர்சனத்தில்)யில் வண்ணமும் வாசனையும் குடியேறியது எவ்வாறு. எனக்கு புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.
( கடுப்பு ஏத்துறார் மை லார்ட்.)

நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வார்த்தையாக்குகிறீர்கள். வெற்று சொற்களை படிமமாக்க வார்த்தைகளை நம்புகிறீர்கள். அதில் ஒலிக்குறிப்புகள் மட்டுமே உள்ளது. அன்பு மஹி வார்த்தைகள் எப்பொழுதும் நம்மைக் கைவிட்டுவிடக்கூடும் என்பதை அறியாமலா எழுதுகிறீர்கள். ஒரு வெற்று வார்த்தையை அதற்கேயுரிய காலத்தில் உச்சரிக்கும் போது அது தன் அர்த்தபாவத்தை இழந்து காலமாக மாறுவதைக் கண்டதில்லையா. வெறும் வார்த்தைகளை காலத்தின் உருளும் சக்கரமாக வடிவமைத்த கவிகளை நீங்கள் உணர்ந்ததில்லையா. இவ்வுலகில் கவிதை இப்படித்தான் என்ற இலக்கணம் யாராலும் எழுதப்படமுடியாதது என்பதை நானறிவேன். அதே சமயம், உங்களுடைய வெற்று வார்த்தைகளை கவி எனச் சொல்ல என் அகமும், வாசிப்பணுபவமும் இடம் தரமறுக்கிறது. இப்படியே நீங்கள் எழுதிக்கொண்டு போனால் சினிமாவுக்கு ஓரிரு பாடல்கள் எழுத உங்களுக்கு வாய்ப்பு வாங்கித் தரும் துரதிருஷ்டம் என்னை அணுகாமல் காப்பீர்களாக. நிற்க; அங்கும் இலக்கணத்தில் உங்களுக்கு எதிரியாய் வைரமுத்து நிற்பார். நானறிந்த தளத்தில் வைரமுத்து ஆகச்சிறந்த பாடலாசிரியர். இதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என எனககுத்தெரியவில்லை.

வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொறியும்
என எழுதியுள்ளான் அவன்..இந்த இரு வரிகள் தரும் அனுபவம் உங்கள் கவியென அழைக்கப்பட்டதில் இல்லை. இருக்காது. அறிவீர்.

adhiran said...

தெரிந்தே செய்கிற தவறென உன்னிடம் ஒப்புக்கொண்டிருக்கிறேன் வசு. எனக்கு வேறு வழியில்லை என்பது எனக்கான அனுபவம். நினைவில் கொள் இது கவிதை அல்ல என்பது உனது தீர்வு. எனக்கும் அவ்வாறே இருப்பதனால் இதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் இந்த வரிகள் வெறும் மாயச்சொற்கள் அல்ல. அது உள்ளமைக்கப்பட்டிருக்கும் அனுபவம் எனக்கான தீவிர இருப்பு. அதன் வாதையை கண்கொண்டுகொள்ள இதன் வரிகள் இடம்தர மறுப்பது என்பது உண்மை. ஆனால் இவை வெற்றுப் படிமங்கள் அல்ல. பதிவில் எழுதப்பட்ட வார்த்தைகள் வெற்றுவார்த்தைகள் என உனக்கு பட்டால், உன் வாசிப்பு அனுபவம் எனக்கு சந்தேகமாய் உள்ளது வசு. இது உனக்காக எழுதப்பட்ட வரிகள் இந்த வரிகளின் தலைப்பு யோனி.

தழலின் அசைவுகலென நடனமிடுமுன் உடலசைவுகளில் மறந்து போகிறது திசை. சட்டென உமிழ்கிறாய் அந்தரத்தில். வரண்ட நாக்கின் நுனியில் ஏந்துகிறேன் ஒரு துளி அமிலத்தை. என்னிலிருந்து கிளம்புகிறது பன்னீர் பூ வாடை. சுடுகாடு பூக்கிறது. இதழாய்
நீ மலர நான் காணும் ஒற்றைப்புள்ளி அடர்த்தியானது நட்சத்திரங்களை விழுங்கும் கருந்துளை போல. தழுவலில் இல்லாமல் போகிற ஆண்மையை கேலி செய்கிறாய் அது எப்பொழுது இருந்தது என்று. நீலம்பாரிக்கிறது உயிர்.

வசுமித்ர said...

அன்பு மகி...உங்கள் இருப்புக்கான பதிலை என் இருப்பாய் என் வலைப் பக்கத்தில் இட்டுள்ளேன்.


அன்புடன்......