30 May, 2010

களிப்பொன் நிலா



கூந்தல் வானில் மிளிர்கிறது
வட்டச்சின்ன நிலா
காக்கை எச்சம்.

பால் குடித்து களியேறி
இணையழைத்துக் கதறுகிறது தவளை
வானில் நிலா.

எதிர்த்து நீந்தி தவித்து'
தள்ளாடி பிளந்து சேர்கிறது
ஆற்றுக்குள் நிலா.

********************************
சிவகுமாரின் பதிவு கண்டதும் களிப்பொன் நிலா புத்தியில் நுழைந்து செய்த சோதனை. !
********************************

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 5

**************************

அனைத்து சமுதாயமும் தனிமனிதனுக்கு எதிரானதே. அல்லது ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்திற்கு எதிரானவனே.

***************************

முதலில் நன்றி வசு. உன் தீவிரமான இந்த வெளிபடுதலுக்காக.வசு சொல்பவைகள் எல்லாம் ஒருவகையில் சரியானவைதான். வசு , முதல் பின்னூட்டக் கருத்திலேயே

//என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக, துக்கம் என்ற ஒன்றை அறியாமல் சந்தோஷத்தின் ருசியை உணரமுடியாது//

என்று அறம் என்று ஒன்று எதற்காக என்றும் அறம் என்றால் என்னவென்றும் தெளிவாக சொல்லியிருக்கிறான் . அதன் பின் வசு கூறியவை எல்லாம் எவையெல்லாம் அறம் என்பதைப் பற்றித்தான். எனது நோக்கம் அறம் என்பது யாவை என்கிறதை பற்றி அல்ல. மாறாக அறம் என்கிற ஒன்றின் ஊற்றுக்கண் என்ன அது எதன்பொருட்டு வந்தது என்பதை நான் புரிந்துகொண்டவைகளைப் பதியும் முயற்சி மட்டுமே.

அதன் அடிப்படையில்தான் புத்தனின் ஞானச்சொல்லை குறித்தேன். துக்கம் பற்றி அறியாமல் சந்தோசத்தை அறிய முடியாது என்று சொல்லியிருக்கிறாய் வசு, மிகச்சரி. அந்த துக்கம் உள்ளது என்பதை புத்தனை விட தெளிவாக சொன்னவன் யாராவது இருக்கிறார்களா. புத்தனின் ஞானமே துக்கம் உள்ளது என்பதை கண்டைந்ததுதான். துக்கம் உள்ளது. துக்கம் உள்ளது என்பதை அறியலாம். துக்கத்தை களையலாம். துக்கத்தைக் கலைக்க வழிமுறை உள்ளது. என்கிற நாற்பெரும் உண்மைகளை சொல்லிவிட்டுத்தான் அவன் துக்கத்தை களைய எட்டு வழிமுறைகளை தனதான அறமாக மொழிகிறான். அவன் கண்ட உண்மை அறமற்றது. அவனது மஜ்ஜிமா போதனைகள் அறவழிக்கொள்கைகளே.

பிறகு வசு சொல்லும் பசி, குற்றவுணர்வு, அந்தரங்கம் ஆகியவை அறம் பற்றிய சிந்தனைகளில் பிற்பாடு பேசப்படுகிற பேசுபொருள்கள். இதில் பசி என்பது ஆதியுணர்வு மற்றும் அடிப்படை இயல்பூக்க வகைமைகளில் ஒன்று. மற்றபடி அந்தரங்கமும் குற்றவுணர்வும் அறத்தின் வளர்ப்புப் பெற்றோர்கள் என்பதில் எனக்கும் சம்மதமே. அவற்றைப்பற்றி பின்னால் விவாதிக்கலாம். வசு சொல்லும் 'தனி மனிதன் என்று இங்கு யாருமே இல்லை' என்கிற கூற்றுதான் எனக்கு சற்று பிடிபடவில்லை.

பத்மா சொல்லும் கடமை ஒரு முரண்நகை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கும் அச்சம் மடம் ஓர்ப்பு கடைபிடி ஆகியவை ஆண்களுக்குமாக அறம் என்கிற குணமாக்கப்பட்ட நிகழ்வுப்போக்கின் ஒரு அலகுதான் கடமை. ஒரு மனிதன் யாராக இருக்கிறான் என்னவாக வெளிப்படுகிறான் என்பதே ஒரு அபத்தக்கேள்வி என்று தோன்றுகிறது. மனிதனின் ஒரே கடமை மனிதனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுதானே. பிரபஞ்ச அதிசயத்தின் உச்சமும் பரிணாம வளர்ச்சியின் நிகழ்உச்சமும் ஆன மனிதன் தனது இயல்பான உள்ளுணர்வுக்கும் இயல்பூக்கத்திற்கும் இணையாக பேரன்பை இருத்துவதற்கு பதிலாக இவற்றிற்கு எதிராக அறத்தை தோற்றுவித்தான் என்கிறதே எனது புரிதலாய் உள்ளது.

நிகழில் அறம் மனித சமுதாயத்தின் இன்றியமையாத அரசியலாக்கப்பட்டு ஊழிக்காலமாகிவிட்டது. எவையெல்லாம் அறம் என்று ஒரு பாடு குவியல்கள் மனித மனங்களில் இயற்கையிலேயே குவிந்து பத்மா சொன்னது போல ஜீனிலேயே கலந்து போய்விட்டது. அதனால் எவைஎவை அறம் எனும் புரிதலுக்கு நான் செல்லவில்லை மாறாக இவ்வகையான அறங்களை நம் மனம் இவ்வளவு அழுத்தமாக நுழைந்த செயல்பாட்டியக்கம் பற்றிய எனது புரிதல்களை எழுத்தத் தொடங்குகிறேன். அதற்காக நாம் ஒரு சொல்லை பற்றி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இணையான அச்சொல்லைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அச்சொல்: நம்பிக்கை.

**************

தொடர்கிறேன்

****************

27 May, 2010

சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 4

****************************

மனிதனை செயல்பட நிர்பந்திக்கும் நெம்புகோல் இரண்டே உள்ளது. ஒன்று பயம் மற்றொன்று சுயவிருப்பம் - நெப்போலியன் போனபார்ட்.

****************************

ஜெகநாதனும் வசுபாரதியும் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். "என்வரையில் மனிதன் சதா அலைவது சந்தோசத்தின் ருசிக்காக - வசு" "அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் - ஜெகன்" இப்பொழுது நெப்போலியனின் கூற்று என்னசொல்கிறது என்று பாருங்கள். எவ்வளவு துல்லியமான வரிகள். அறத்தின் தேவை இங்கு தொடங்குகிறது என படுகிறது. ஜெகன் சொல்லுவது போல அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது ஏனென்றால் அறத்தின் உற்பத்தியே இவையிரண்டிற்கும் எதிரானது என்பதாலத்தான்.

பயமும் சுயவிருப்பமும் தான் நான் புரிந்துகொண்டிருக்கும் ஆதி உள்ளுணர்வு.

//அறமென்பது குற்றவுணர்ச்சியில்லாது ஒரு செயலை செய்தல் ஆவதே என்பது என் கூற்று - வசு.
அறத்தில் ஆதியுணர்வு, அடிப்படையுணர்வு என்று எதுவும் இருக்காது என்பதே என் கருத்து. அறம் மனித வாழ்வின் எல்லையற்ற மகிழச்சியை கண்டறிய உதவும் ஒரு கருத்தியல் சாதனம் என்ற மட்டில் அறத்தின் பால் காமம் கொள்கிறேன் - ஜெகன் //

இவையும் அவர்களுக்கான அறவடிவமே.

//மனித சமுதாயத்திற்கு தேவை என்று யார் கருதியது?எது தப்பு ? எது சரி? // என்று கேட்டிருக்கும் பத்மாவின் கேள்விதான் ஆதி கேள்வி. உலகமுழுவதும் இதற்கு பதில் சொல்லிச்சொல்லி மனிதர்கள் களைப்படைந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் பதில்கள் நின்ற பாடில்லை.ஏனென்றால் என்றைக்கும் நிலையான அனைத்துக்கும் உகந்த 'ஒற்றை அறம்' என்ற ஒன்றை நாம் இதுவரை கண்டதில்லை. பெரும்பான்மையான மனிதர்கள் ஒப்புக்கொள்கிற மனித எண்ணத்திற்கு சுகம் அளிக்கும் என்று நம்ப படும் அறங்களே தற்போதைய பொது அறமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்ததந்த காலங்களுக்கு தக்க அவை மாற்றம் பெறலாம். உதாரணமாக பொய் சொல்லக்கூடாது என்பது ஒரு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம். இந்த அறத்தின் மூலம் மனிதனுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது. என்முன் நிற்கும் ஒருவர் என்னிடம் பொய் சொல்லவில்லை என்று நான் நம்பினால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படி எல்லோரும் பொய் சொல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி பன்மடங்காகி பொய் சொல்லாமை என்கிற ஒரு அறத்தின் மூலம் மனிதனின் மகிழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது. நல்லதுதானே. ஆனால், அறம் என்பது பெரும்பான்மையின் குழந்தை. முதலிலேயே சொன்னேன் சமுதாயம் என்கிற பின்புலம் இல்லாத மனிதனுக்கும் அறத்திற்கும் அட்சரமும் தொடர்பில்லை. சமுதாயமற்ற தனிமனிதனிடம் இருப்பது பயமும் சுயவிருப்பும் மட்டுமே. எனவே அவன் செயல்பட நிர்பந்திக்கப்படுகிறான். அதற்கான காரணி அவனிடமிருந்தே ஊற்றெடுக்கிறது.

அவன் செயல்பாடுகளின் முடிவில் அந்த மொத்த பலனையும் சீர்தூக்கிப் பார்க்கும் சமுதாயம் அந்த பலன் பொதுவான மக்களுக்கு உகந்தது எனக்கருதினால் எல்லா பலனையும் மொத்தமாக சுவீகரிக்கும். இல்லையென்றால் அந்த தனிமனிதன் துண்டாடப்படுவான். இந்த கடும் இடர்பாடுகளை மீறி தனது அனுபவத்தை ஒரு மொத்த சமுதாயத்தின் அனுபவமாக மாற்றவும் புது அறங்களை உற்பத்திசெய்யவும் முடிந்த மனிதர்கள்தான் ஆன்மிகம் என்கிற சொல்லை விதையாகக்கொண்டு மதத்தினை ஏற்படுத்தினார்கள். மதம்!

இயல்பூக்கத்துடன் ஏற்படும் ஆதி உள்ளுணர்வை முன்னிறுத்தி பலவகையான முயற்சிகள் மேற்கொண்டு பல நற்பலன்களை கண்டடைந்த மனிதர்கள் அவர்கள் கண்டடைந்ததை தத்துவம்/மதம் என்கிற இரு பெரும் பிரிவுகளில் உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். இந்திய துணைக்கண்டம் இவ்வகையான சிந்தனை மரபை மதத்தின் மூலம் பெற்றுக்கொள்ளத்தொடங்கியத்தில் அதன் தோல்வி ஆதிக் காலத்திலேயே உறுதிசெய்யப்பட்டு விட்டது என தோன்றுகிறது. இவ்வகையான சிந்தனை இந்த கட்டுரைக்கானதல்ல. மதம் பற்றி இங்கு நான் பேசப்போவது இல்லை.

ஆக அறம் என்பது எதன்பொருட்டு. எல்லையில்லா மகிழ்ச்சி என்கிற ஒன்றை காண. அப்பிடினா நாம மகிழ்ச்சியா இல்லையா. அளவை இடிக்கிறது. தமிழில் வள்ளுவம் உட்பட நன்னெறி நூல்களுக்கு இன்றுவரை குறையில்லை. தமிழில் மட்டுமென்றால் உலகளவில்? எதற்கு இத்தனை அறம். அதற்கு விளக்கக்குறிப்புகள். எல்லாம் மனித மகிழ்ச்சிக்கானவை என்றால் எங்கே மகிழ்ச்சி?

மகிழ்ச்சி ஏன் இல்லை என்ற கேள்விக்கு நான் படித்தவரை ஒரே ஒரு மனிதன் தான் சரியான உணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான பதிலை அளித்துள்ளதாகப் படுகிறது. அவன் பெயர் சித்தார்த்தன். அவன் சொன்னான்: துக்கம் உள்ளது.!

அறமற்ற, இரக்கமற்ற ஒரு வாக்கியம் இது.

*********************

தொடர்கிறேன்

****************