08 November, 2010

வானவில்வண்ண மின்னல் 6

எல்லாம் கிடைக்கறது பிரதிகளில். இவ்வாதம் பற்றிய ஆழ உரையாடலுக்கு விரிவாக படிக்கவேண்டும் என்று சொல்கிறான் வசு. ஒப்புக்கொள்கிறேன். தொடங்கியிருக்கிறேன் சோதிப்பிரகாசத்தின் வரலாற்றின் முரண் இயக்கத்திலிருந்து. பார்க்கலாம். இனி இப்பதிவை ஒரு சுய மதிப்பீட்டு பார்வையில் எழுத உத்தேசம். என்னில் இருக்கும் கருத்துகளை தொகுக்கவும் அதை தனியாக நின்று மதிப்பிடவும் முடியுமாவென்று பார்க்க எண்ணம். பொதுவாகப் பார்க்கும் போது ஆழத்தின் அலையொன்றில் சிறுவுயிராய் இழுபடுகிறது மனம். கொந்தளிப்பின் வேர் விளங்கா காலம். எந்த பொருளை வாழ்க்கையின் வெளிக்கு அர்த்தமாய்க் கொள்கிறது என் மனம். இந்த கேள்வி சிந்தனையில் தோன்றிய கணத்தில் வெடித்துசிதறுகிறது சொற்களாலான லார்வா நதி. போக்கிடம் அற்ற அத்வானம் மனம்.

***************************

நான் எழுதுகிற கவிதைகளில் இருந்து தொடங்குகிறேன். என்னளவில் கவிதை என்பது என்னவென்று மீண்டும் தெரியாமல் போய்விட்டது. கவிதை மற்ற எல்லாவறையும் போலவே ஏககாலத்தில் 'இருக்கிறது' மற்றும் 'இல்லாமல் இருக்கிறது' அணுபிளவில் ஒளித்துகள் போல. மனித சாரம் இன்பத்தை விழைந்து செல்கிறது அல்லது குறைந்தபட்சம் துன்பத்தை தவிர்க்க பாடுபடுகிறது. அப்படிஎன்றால் கவிதையும் இன்பத்திற்கான விழைவெனவே எடுத்துக்கொள்கிறேன். என்றால், இன்பம் என்பது என்ன. நல்லது எல்லாம் இன்பம். என்றால், நல்லது என்றால் என்ன. எனக்கு எது நல்லதோ அது நல்லது. என்றால், அது சுயநலம். இந்த அளவில் நான் கடுமையான சுயநலவாதி என்று ஒப்புக்கொள்கிறேன். ஆக என் சுயநலத்துக்காவே என்னால் கவிதை எழுதப்படுகிறதா என்றால், ஆமாம் மற்றும் இல்லை என்று முரணான பதில் மனதில் எழுகிறது. ஏனென்றால், கவிதை எழுதலாம் என்கிற எண்ணத்துடன் நான் எழுதும் அனைத்து வரிகளும் படிப்பவர்களால் கண்டுபிடித்துவிடமுடிகிறது. எதையாவது எழுதிவிட்டு கவிதை என்று சொல்லும்போது கவிதையென ஒப்புக்கொள்ளபடுகிறது. ஆக ஏககாலத்தில் இருக்கவும் இல்லாமல் இருக்கவும் கவிதையால் முடிகிறது. என்னால் முடியவில்லை. நான் ஏககாலத்தில் இருக்கிறேன். இல்லாமல் இருப்பதென் மரணம். ஆக கவிதை என்றால் என் நிலை என்பது இவ்வாறானதாக இருக்கிறது: எனது மனம் பின்நவீனத்துவத்தை நிலைப்பாடாக கொள்கிறது. அதன் களம் பின் காலனீயக் களம். இவற்றில் கவிதைக்கு கவிதை என்கிற நிலைப்பாடிற்கு இடமில்லை. எனவே கவிதை தேவையில்லாத ஒன்று என்கிறது அறிவு. ஆனால் மனம் தனது மூன்று நிலைகளும் (உணர்வு நிலை, ஆழ்மன நிலை, மயக்க நிலை) தனதான படிமப் பார்வையை கண்டு பேதளிகும்போது கிடைக்கும் சொற்கள் கவிதையின்றி வேறென்ன. இப்படி ஒரு முரணான நிலையில் நான் எழுதுவதை கவிதை என்று எந்த தைரியத்தில் சொல்லுகிறேன் என்றும் விளங்கவில்லை. நெகிழ் உலர் சதுப்புநில பிச்சிகாடு மனத்தில் தோன்றும் தாந்தோன்றிப்பூக்கள் சொற்களாய் மாறும்காலம் கவிதையாய் மணக்கலாம். இப்போது நான் என்ன செய்யவேண்டும்: எவ்வித நிபந்தனையும் இல்லாமல் எனது கவிதைகளை திரும்ப பெறவேண்டும். ஆனால் முடியாது. ஏனென்றால் எழுதிய வரிகள் என்னை ஆயிரமாயிரம் ஊசிகளாய் மாறி என்னை குத்திக்கிழித்து பனிக்கடலின் ஆழத்தில் இழுத்துக்கொண்டு போய்.... உறைகிறது வலி.

************************

மீண்டும் நிகழ்கிறது எல்லாம். மீண்டும் மீண்டும். அதனால்தான் நானும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் நிற்கவேண்டிய நிர்பந்தம். எனவேதான் மீண்டும் மீண்டும் ஒரே சொல். தேஜா வூ (.teja vu.) இந்த வார்த்தை பார்த்திபனால் எனக்கு ஞாபகப்படுத்த பட்ட போது ஒரு கத்தி செருகல் நிகழ்ந்தது. நான் நிதானிக்கிறேன். உண்மையில் எல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்வது போல மாயம்தானா அல்லது மீண்டும் நிகழ்வதே புதிதுதானா. 'தேஜா வூ' இவ்வார்த்தை என்னுள் தத்துவமாக அறிவியலாக இலக்கற்ற கற்பனையாக கவிதையாக நினைவுகளற்ற எதோ ஒன்றாக ஸ்தூல இருப்பாக பயமாக பதிகிறது ஏக காலத்தில். என்ன காரணம் என தெளிவில்லை. அப்படி தெளிவுடனும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் நம்பிக்கையிழப்பையும் அமைதிப்பரவலையும் நிகழ்த்துகிறது இவ்வார்த்தை. ஒன்றில் தெளிவு பெற்றுவிட்டேன்: நான் சுயநலவாதி. எனது சுயநலம் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் இருந்து பறிக்கப்பட்டது அல்ல. மாறாக எனது சக மனிதர்களிடமிருந்து இரவலாய் பெறப்பட்டது. சரி எனது கவிதை நிலைப்பாட்டிற்கும் இந்த பிரகடனத்திற்கும்(?!) என்ன சம்பந்தம்? எதோ இருக்கிறதாகப் படுகிறது. தொடர்ந்து விளக்க முயல்கிறேன்.

***********************

கவிதைக்கு பிறகு? உரைநடை. சிறுகதை மற்றும் நாவல்களை (!) முயற்சிக்கிறேன். சில சிறுகதைகளும் இருக்கிறது. அவற்றை படித்துப் பார்க்கும்போது நான் கவிஞன் அல்ல என்றே தோன்றுகிறது. பார்க்கலாம். இந்த பதிவை நான் அதற்கான களமாக எடுத்துக்கொள்கிறேன். பயிற்சி களமாமாக.

**************************

இதன் தொடர்ச்சியாக நான் புரிந்துகொண்டிருக்கிற இரண்டு விஷயங்கள் பற்றி எழுத தொடங்குகிறேன். ஒன்று பணம் மற்றொன்று மொழி. இவற்றை பற்றிய எனதான புரிதலை எழுதவதன் மூலம் என்னை தொகுத்துக்கொள்வதாக உத்தேசம். இதற்காக இங்கு 'தேஜா' என்கிற கற்பனை மனிதனை உருவாக்கி இருக்கிறேன். இனி அவனுடனான உரையாடலே இந்த தொடரை இட்டுச்செல்லும். தேஜா என்பவன். ஆண் அல்லது பெண் அல்லது இண். பதினைந்து வயது தமிழ்நாட்டுக்காரன்.

*************************

1 comment:

par said...

Sorry for the typo. It is 'deja vu' actually. Déjà vu, to be precise.