08 November, 2010

போர்னோகிராபி பற்றிய விவாதம்: ஓர் அபிப்பிராயம்

சிந்திப்பதை போல ஒழுக்கம் கெட்ட
காரியம் வேறேதுமில்லை. இந்த கேடு கெட்ட
ஆபாச நடவடிக்கையானது
பசும்புல் தரையில் படரும்
களைச்செடி போன்றது
சிந்திப்பவர்களுக்கு புனிதம் என்று ஏதுமில்லை
பெயர் குறிப்பிட்டு நேரடியாகத்தான் சுட்டுவர்
அம்மணமான பிரச்சனைகளை தூக்கித்திரிவர்
கவனம்பெறும் சமாச்சாரங்களை
அழுக்குவிரல்களில் தொட்டு விவாதிப்பர்
அவர் காதுகளுக்கு அது இசை
பட்டப்பகலில் அல்லது இரவுப்போர்வையின் கீழ்
வட்டமாகவும் இருப்பார் முக்கோணமாகவும் ஆவர்
ஜோடிஜோடியாக இணைவர்
சேருபவர்களின் வயதும் பால் அடையாளமும்
முக்கியத்துவமில்லாதவை. அவர்தம்
கண்கள் ஜொலிக்கும்
கன்னம் கனிந்திருக்கும். சிநேகிதர்கள்
தம் இநேகிதர்களையே
கெடுப்பார்கள்.
ஒழுக்கம் கெட்ட மகள்கள் தங்கள்
தந்தையர்களை கெடுப்பார்கள்..
சின்னதங்கைக்காக
அவள் சகோதரன் தரகு வேலை
பார்ப்பான். சபிக்கப்பட்ட
மரத்திலிருந்து அவர்கள்
கனிகளை கேட்பர். பளபளப்பான
சஞ்சிகைகளில் காணப்படும்
கன்றிய புட்டங்களை விடவும்
அசிங்கமானவர்கள்.
நேரங்கெட்ட நேரத்தில் பிறந்த இந்த
குறுகிய புத்திகாரர்கள் கொண்டிருக்கும்
புத்தகங்களில்
படங்களிருக்காது. அவர்களது
உடலின் நிலைகள் அதிர்ச்சியூட்டும்
ஒரு மூளையிலிருந்து
இன்னொரு மூளைக்கு உணர்ச்சியேற்றும்
அவர்களின் அனாவசியமான
வெளிப்படையான உடலசைவுகளை
காமசூத்ரா நூல் கூட அறியாது.
களியாட்டத்தில் சூடாய் இருக்கும்
ஒரே திரவம் காபிதான். மனிதர்கள் தம்
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
தம் இடுப்பை அசைப்பார். தத்தம்
கால்களின் மீதே கால்களை போட்டு கொள்வர்
ஏனென்றால்
அப்போதுதான் ஒரு காலில் தரையின் மீது இருக்கமுடியும்
மற்றொரு கால் சுதந்திரமாக காற்றில்
ஆடிக்கொண்டிருக்க முடியும்
அவ்வப்போது அவர்களில் ஓரிருவர்
எழுவார்கள் ஜன்னலை நோக்கிப்
போவார்கள். திரைச்சீலையில் இருக்கும்
துவாரத்தின் வழி தெருக்களை
ஜாக்கிரதையாக ஊடுருவிப்பார்த்துக்கொள்வார்கள்.
*******************
விஸ்லாவா ஷிம்போஷ்க்கா (vislawa szymborska). நோபல் கவி. போலந்து பெண்.
*******************

No comments: