30 November, 2010

மறந்தது காற்று திரும்பி வர....

நண்ப
சொல்லியவற்றை விட சொல்லாமல்போனததிகம் என திரும்ப வந்த காற்றுக்கு முன்னால் அடைத்துவிட்டிருந்தேன் கதவுகளை. கதவுகளைத்திறக்க ஒரு காதமேனும் வெளியேற வேண்டும் நான். மேலும் இனி அந்த கதவுகள் திறக்கப்படுவதற்கும் ஏற்றவையல்ல. ஒலிபுகாத மெல்லாடியால் குழைத்துப்பூசப்பட்ட அக்கதவுகள் திறக்கப்பட காற்று குடித்தாகவேண்டும் ஒரு கடல் நிறைய உப்பை. அல்லது தனது ஸ்தூல பிரதியை கொண்டிருக்கும் கதவுகளை உடைக்க துரோகத்தினாலான நீண்ட சாவியை உபயோகிக்கத்தெரிந்திருக்க வேண்டும் மீண்டும். மீண்டும் துரோகம் என்வென்று அறியாத அல்லது உப்பைக் குடிக்க முடியாத காற்றிற்கு உண்மையில் என்வசம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்பதின் துயரத்தினை அறைந்து வைத்திருக்கிறேன் எனது சமையலறைச் சுவற்றில் அன்பாலான ஆணிகொண்டு.

நண்ப

பசித்தலையும் கிடைபிரிந்த செம்மறியின் தனிமைக் கண்களுக்குள் விழுந்த என் ஏசுவின் கைகளை வெட்டிக்கொண்டு போனபின் விழிகொள் வியப்பின் விசமுறிக் கிழவி தனதான சூன்யத்தில் தோற்றுப்போனாள். ஏசுவின் காயத்திற்கு மருந்திட இடயனைத்தேடி கதறுகிற செம்மறியை தாங்கி நிற்கிறது சமவெளிப் புற்கள். ஒற்றைகுழலில் உலகைக்குடித்து உபரியாய் வெளியேறும் இடையனின் சங்கீதத்தின் மாயவொலியில் வளரும் கைகள் இரண்டையும் விரித்து வாரியணைக்கிறார் ஏசு உலகமாய் சுருங்கிப்போன செம்மறியை. பார்த்துக்கொண்டிருந்த உன்னிடம் இசைக்க கொடுத்தேன் ஊர்குருவிகளின் கிலுப்பையை. இரு கைகொண்டு நடனத்தை தொடங்குகையில் குறுக்கிட மறந்தது காற்று.

நண்ப

காற்றை அழைத்துவர நீ சென்ற வெகுநேரம் கழித்துதான் மூடினேன் என் கதவுகளை.

***************************

27 November, 2010

வானவில் வண்ண மின்னல் 8


தேஜா உடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். 'மகி.. உனக்கு பேய் பிசாசு மேல நம்பிக்கை இருக்கா' என்றான். 'கடவுள் மேல நம்பிக்கை இல்லை' என்றேன். 'எதுக்கும் நேரடியா பதில் சொல்லமாட்டியா நீ..' என்றான். 'ரெண்டும் ஒண்ணுதாண்டா.. கடவுள் மற்றும் சாத்தான். கடவுள் இல்லையென்றால் பேய் பிசாசு இல்லை அல்லது பேய் பிசாசு இருந்தா கடவுள் இருக்கார்.. என்றேன். "கடுப்பேத்தாத மகி.. மேட்டருக்கு வா.. பேய் பிசாசு இருக்கா இல்லையா.. " என்றான். "தெரியலடா.. ஒரு வேள இருந்தா அதுக்கு சரியான ஒரு அறிவியல் காரணம் இருக்கும்..நாம இருக்கோம் இல்லையா .. அதாவது மனுசங்க இருக்காங்க இல்லையா .. அதுக்கான அறிவியல் காரணம் இருக்கு.. இப்போதைக்கு எனக்கு இந்த எண்ணம்தான் ஒரு சமரசமில்லாத உண்மையா தோணுது..மனிதன் நேரடியா மனிதனா வரலை.. அவன் ஒரு பரிணாம வளர்ச்சி .. உயிர்களின் பரிணாமம் என்பது பொதுவான டார்வினிய கோட்பாடு..பிரபஞ்சம் எல்லாம் வேதிப்பண்புகளும் அதன் வினைகளும் மட்டுமே அப்பிடின்னு சொன்னால் நம்மளோட மொத்த இருப்பின் கொடும் அபத்தம் கொஞ்சம் புரியலாம்.. ஒரு வெடிப்பு ஒன்னும்இல்லாததிலிருந்து. அந்த மகா வெடிப்பு இன்னும் முடியல.. அந்த வெடிப்பின் விளைவுக்குள்ள இருக்கிறது நமது பூமி.. அதுக்குள்ளே நம்ம இருப்பு! ஒரு சரஸ்வதி வெடி வெடிச்சு அதுல சுத்திக்கிட்டு இருக்கிற காகிதம் சிதறி போய் எங்கயாவது விழும் அந்த காகிதத்துல ஒரு வாழ்க்கை இருந்ததுன்னா எப்படி இருக்குமோ அதுமாதிரிதான் நம்ம வாழ்க்கையும்..இதப்பத்தி யோசிக்கும் போது தலைசுத்தும்.."

"ஏன் இப்படி யோசிச்சு உடம்ப புண்ணாக்கிக்கிற.. " என்றான் தேஜா.

"நெசந்தாண்டா.. சிந்தனையும் ஒரு வெடிப்பு மாதிரிதான் மனுஷனுக்கு.. ஒரு பொறி கிளம்பிடுச்சுனா சாகுறவரைக்கும் இம்சைதான்..அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் .. " என்றேன்.

"அப்ப உனக்கு அறிவு பெருத்துப் போச்சுன்ற.. "

"அறிவுன்னா இங்க ரெண்டு விதமா சொல்லலாம் தேஜா.. ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிறது ஒரு வகை ஒரு விஷயத்தை புருஞ்சுக்கிறது இன்னொரு வகை .. உதாரணத்துக்கு அமெரிக்க அதிபர் யார் என்றால் ஒபாமா அப்பிடின்னு தெரிஞ்சுக்கிறது ஒரு அறிவு.. அதே நேரம் ஒபாமா எப்படி அமரிக்க அதிபரானார்னு புரிஞ்சுக்கிறது இன்னொரு வகை இந்த உலகத்துல தெரிஞ்சுக்கிற அறிவு பணத்த கொடுக்கும் புரிஞ்சுக்குற அறிவு பணத்த எடுக்கும்..புரிஞ்சுக்கிறது என்பதுதான் வலி.. அதுதான் பெருத்த நோவு.. "

" ஏன் படுத்துற இப்படி.. நான் என்ன கேட்டேன்.. உனுக்கு அறிவு கீதா இல்லாங்காட்டி லேதா..?

"தெரிஞ்சுக்கிற அறிவு இல்ல .. புரிஞ்சுக்கிற அறிவு இருக்கு.. "

"அறிவே.. எதப்புரிஞ்சுகிட்ட இப்ப நீ.."

"அது தெரிஞ்சிருந்தா ஒரு வேள நான் எப்பவோ பைத்தியமாகி சுத்திக்கிட்டு இருந்திருப்பேன்.. நீட்சே மாதிரி.. இல்லேனா ..."

"காந்தி மாதிரியா .. "

"இல்லை.. காந்தி மகாத்மான்னு அழைக்கப்பட்டவர்.. ஒரு சுதந்திர போராளி.. கடுமையான ஆயுதத்தை பிரயோகிக்கத் தெரிந்த கர்மவீரர்..போர்ப்படை தளபதி.. "

"கடுமையான ஆயுதமா.."

"ஆமாம் .. அதுக்கு பேரு அகிம்சை.. அகிம்சைய விட மிகபயங்கரமான ஆயுதம் இன்னொன்னு இருக்கு .. அதுக்கு பேரு அன்பு.."

"அதுசரி.. ஆரம்பிச்சுட்டியா .. பொழியாத உன்னோட தத்துவத்தை .. நிறுத்திட்டு டார்வினுக்கு வா .. " என்றாள்.

"சரி சொல்றேன்.. உலகம் தோன்றி உயிரினங்கள் தோன்றி பரவ தேவையான சூழலை இயற்கை உருவாக்கினதுக்கு அப்புறமா ஒரு செல் உயிர் முதல் ஒரு உடல் அமைப்பு உருவாகிற வரைக்குமான ஒரு நிகழ்வுப்போக்கு நடந்து முடிந்ததுக்கு அப்புறமா வளர்ச்சியின் உச்சபட்சமா பாலூட்டிகள் அதாவது குட்டி போட்டு பால் கொடுக்கும் இனங்கள் பூமியில் வாழ தகுதியானதாக இயற்கை தேர்வு செய்யுது.. அந்த சமயத்துல எல்லா வகையான மற்ற விலங்குகளும் தகுதிக்கு தக்க தண்ணியில போறதாகவோ தரையில போறதாகவோ பிரிஞ்சு வாழத்தொடங்க எல்லாவகையான பாலூட்டிகள் மட்டும் கட்டையில போச்சு.." என்றேன்.

"என்னது கட்டையில போச்சா..?"

"மரங்களில் வாழ தலைப்பட்டன... தேஜா கொஞ்சம் நீளமான பாராவா சொல்லப்போறேன் கவனம் ..என்ன? "

"நீ ரெண்டு வரி சொன்னாவே புரிமாடேணுது இதுல நீளமான பாரா வேறையா.."

"கேளுடா..பாலூட்டிகள் என்பதே சுவாரசியமா இல்லையா உனக்கு.. "

"சுவாரஷ்யமாதான் இருக்கு ஆனா நீ குடுக்கிற பில்ட்அப் கொஞ்சம் பயமா இருக்கு.."

"கேளு .. மொத்த பாலூடிகளும் மரங்கள்ல வாழ தொடங்கியதுதான் மனிதனின் வரலாற்றில் மிக ஆரம்ப புள்ளி.. இன்னைக்கு வரைக்கும் மரத்துல வாழ்ந்த படிமம் மனித DNA வில் படிந்திருக்கிறதுன்னு சொல்றாங்க.. இப்பவும் மனுஷன் தூங்கும்போது திடீர்னு உலுக்கி விழுற மாதிரி பீல் பண்றது மரத்துல இருந்து கீழ விழுரமாதிரியான ஆதி ஞாபகம்னு அறிவியல் சொல்லுது.. மரங்கள்ல வாழ்ந்த பாலூட்டிகள் பல்வேறு வகையான உடல் அமைப்புகளோட இருந்தது.. மரத்துல கிடைக்கிற இலைதளைகளும் பழம் கொட்டைகளும் போதாத பீல் பண்ண ஊன் உண்ணிகள் மற்றும் காலுல குளம்பு அமைப்போட இருந்த விலங்குகளும் மரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தரையில் வாழ ஆரபிச்சு அதற்கான புதிய உடல் அமைப்புகள காலப்போக்கில அமைசிகிடுச்சு.. உதாரணமா உறுதியான முன்னங்கால்கள், வேகமான ஓட்டம், அதிகப்படியான மோப்பசக்தி போன்றவைகள்.. அதே சமயம் மரங்களிலேயே இருந்ததுகளுக்கு குளம்போ கடுமையான மோப்ப சக்தியோ தேவை படல மாறாக கூர்மையான கண் பார்வையும் சமயோசித அறிவும் தேவை பட்டது அதுக்கு தகுந்த அமைப்பு அவைகளுக்கு வைக்க ஆரம்பிடுச்சு.. தாடை குறுகி மூக்கு அமைப்பு மாறி நகங்கள் தட்டையாகி பெருவிரல் மற்ற விரல்களுக்கு எதிரா திரும்பி ஒருவகையா மனிதக்குரங்கு வடிவத்துல உடல் அமைப்பு வர பல ஆயிரம் வருசங்கள் ஆச்சு.. கூடவே அதனோட மூளை பெருசாவும் மிக சிக்கலான அமைப்பாகவும் மாறியிருந்தது.. பிறகான ஒரு கால கட்டத்துல ஒரு சில பாலூட்டி இனங்கள் தனது வாழ்வு முறைய தரைக்கு கொண்டுவர இயற்கை உந்துதல் அடைஞ்சது.. அதுக்கு காரமணமாய் அவை முன்னங்கால்கள தூக்கிகிட்டு நிமிந்து நின்னு நடக்க முடியும்னு தெருஞ்சுகிட்டது என்பதாய் இருந்தது.. ஆனா தரையில வாழுறதுக்கு அது மிக மிக கடுமையான சோதனைகளை இயற்கையில எதிர்கொள்ள வேண்டி இருந்தது .. ஆனாலும் அதனுடைய மூளை அமைப்பு கொஞ்ச கொஞ்சமா எல்லாவற்றையும் புரிஞ்சுகிட்டு தனக்கான நிலையான வாழ்விடமா நிலத்தை தேர்வு செய்து கொண்டது..இனி தரையில தலைநிமிந்து பெரிய மூளை மற்றும் எதிர் திசையில் இயங்கும் கைகளோட இருக்கிற இந்த வகை பாலூடிகல நாம மனிதர்களின் மூதாதையர்கள் என்று சொல்லலாம்..இவர்களை அறிவியல் 'நியாண்டர்தால்' அப்பிடுன்னு பேர் வைக்குது. இவர்கள் ஏறக்குறைய ஒன்னேகால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால இந்த பூமியில தங்களோட முழு பரிணாமத்துக்கு வந்தாங்க.. இந்தவகையான மனிதர்கள் தோன்ற காரணம் இவர்கள் இயற்கையில கிடைக்கிற அனுகூலங்களை நேரடியாக பயன்படுத்துவதை விட்டுட்டு ஒரு புதுவகையான பரிமாணத்தை துவங்கி வெச்சதுதான்.. முரண்பட்டுவது அதன் மூலம் வளர்வது இதுதான் structure... அதுக்கப்புறம் 'ஆய்வாளர் 'ஜார்ஜ் தாம்சன்' என்பவரோட வார்த்தையில சொல்லனும்னா.. 'தொடர்ந்து மனிதனின் மூளையிலும் கையிலும் ஏற்பட்ட நேர்இணையான வளர்ச்சிதான் மனிதன் கருவிகளைப் பயன்படுத்தவும் மொழி என்பதை உருவாக்கவும் தேவையான அடிப்படை பண்பை அவர்களின் உடலியல் மூலாதாரமாக கொடுத்தது' புரியுதா?

"ஒரு எழவும் புரியல .. நான் போய் தூங்குறேன் மகி.. " என்றார் தேஜா.

**************************
தொடரும்
***********************




24 November, 2010

ஆணின் மரணம்.

முன்னால் கிடக்கிறது கடல். சாம்பலின் வெண்மையில். நிலாவுக்கு கீழே என்பதில் காட்சிபிழை ஏதுமில்லை. ஒளிரும் கருமையை சாத்தியமாக்குகிறது அந்தி. மணல் மிதித்தபடி நிற்கிறான். தூரத்தில் தெரியும் எதோ ஒன்றை பார்த்தபடி. கணத்தில் நிலா சாத்திக்கொண்டது தனதான ஜன்னலை. மூடப்பட்ட ஜன்னல் சிலுவையை ஒத்தது. பாரம் தாங்காது மணலுள் புதைக்கிறான். தூரத்து மீன்கள் வேடிக்கை பார்த்து கண்சிமிட்டுகின்றன. சிரிக்கவும் செய்யலாம். உடம்பொற்றி பரவுகிற துகள்மணலை உறுஞ்சி குடிக்கிறது துரோகம் நிரம்பிய ஊசிமுனைக் காற்று.

இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள் அவனைப் பார்த்தபடி. அவர்களுக்கு இடையில் இருக்கிறது வெளி. அவர்கள் கண்களில் இருந்து வெளியேறுகிறது விருப்பமின்மை. வேறொரு வெளியில் அவன் இருப்பை அவர்கள் பாரமென நினைத்து ஒரு துகள் மணலை விட்டெறிகிறார்கள். துகள் அவனை விரட்ட புதைந்த மணலை விட்டு ஓடமுடியாமல் அவன் கதறுகிறான். ஒரு சிவந்த நாற்சக்கர பட்டத்தின் வால் நீண்டு இறுக்குகிறது அவன் குரலை.

இரு ஓரங்களும் சீர்படுத்தப்பட்ட சாலையும் சாம்பல் வண்ணத்தில் நீள்கிறது. சாலையின் மறுமுனையில் இருக்கலாம் அவன் பார்த்துக்கொண்டிருந்த எதோ ஒன்று. இம்முனையில் அவன்மட்டுமே கடல் போன்ற தனிமையில். பறந்து வந்த ஒற்றை துகள் கண்ணில் பட சாலைக்குள் பாய்கிறான். உப்புசுவையில் எரிகிறது காலம். அவனது கடல் நீக்கத்தை விரும்பாத ஒன்று அவனை உற்று நோக்குகிறது.

பின் நிகழ்கிறது..

18 November, 2010

வானவில் வண்ண மின்னல் 7

தேஜாவின் முகம் லேசான சோகத்தில் இருந்தது. என்னவென்று கேட்டேன். அப்பா திட்டிட்டார்.. மகி.. ஏன் அப்பா இப்படி இருக்கிறாரு.. என்னை புருஞ்சுக்கவே மாட்டேங்கறார்.. என்றான். நான் சொன்னேன்"எல்லா அப்பாக்களும் அப்படித்தாண்டா.. நாளைக்கு நீ அப்பாவானாலும் அப்படித்தான்". சிரித்தான். நான் அவனிடம் ஒரு சம்பவத்தை சொல்லத்தொடங்கினேன். நம்ம காந்தித்தாத்தா ஒரு தடவ ட்ரைன்ல அவர் பொண்டாட்டி கஷ்தூரிபாவோட போய்கிட்டு இருந்தாரு .. ஒவ்வொரு ஸ்டேசன்லையும் பயங்கரமான கூட்டம்.. எல்லா மக்களும் "மகாத்மா காந்திக்கு ஜே"ன்னு கோசம் பட்டைய கிளப்புது.. அப்ப வண்டி ஒரு ஸ்டேசன்ல நிக்கிது.. ஒரே கூட்டம் எல்லோரும் காந்தி கோசம் போடுறாங்க.. கூட்டத்துல ஒருத்தர் மட்டும் "கஸ்தூரிபாவுக்கு ஜே" ன்னு கத்திக்கிட்டே அவங்க பக்கத்துல போறாரு.. அவர பாத்து கஸ்தூரிபாவுக்கு கண்கலங்குது.. காந்திக்கு சங்கடம்..அந்த மனிதர் கஷ்தூரிபாவுக்கு பக்கத்துல போய் கையிலிருந்த ஒரு ஆரஞ் பழத்தை கொடுக்கிறார்..கஸ்தூரி அத வாங்கிட்டு என்கூடவே வான்னு அவர கூப்பிடுறார்.. அப்ப காந்தி அவரப்பாத்து எனக்கு ஏதும் இல்லையா..ன்னு கேக்குறாரு .. அதுக்கு அவர் "நீங்க உண்மையிலேயே மகாத்மாவா இருப்பீங்கன்னா அதுக்கு காரணம் கஷ்துரிபா தான் " அப்பிடின்னு சொல்றாரு. காந்தி அதை உண்மைன்னு ஒத்துக்கிறாரு. பிறகு தெருபைத்தியகாரன் மாதிரி கிழிஞ்ச சட்டையோட மிகுந்த போதையில இருந்த அந்த ஆள் கூட்டத்துல கலந்து வெளியேறி வரவங்க போறவங்ககிட்ட குடிக்க பணம் கொடுங்கன்னு பிச்சைஎடுக்க ஆரம்பிக்கிறாரு. அவர் பேரு ஹரிலால். மகாத்மாவோட முதல் மகன்".
"ஆக, அப்பனுக்கும் புள்ளைக்குமான உறவு அடிப்படையில முரணாத்தான் இருக்கு.. காரணம் மகன் மேல அப்பன் எடுத்துக்கிற உரிமையும் மகன் தான் ஒரு தனிமனிதன் என்று உணர்கிறதும் தான்னு நினைக்கிறேன்.. அதைவிட முக்கியமான காரணம் காலம். தலைமுறை இடைவெளி .. சராசரியா முப்பது வருசங்கள் இடைவெளி.. "
பணத்தை பத்தி சொல்றேன்னு கூப்டு இப்படி மொக்கைய போடுறீங்களே என்றான் தேஜா. இதுக்கே மொக்கைனா பணத்த பத்தி ஆரம்பிச்சா ஓடிப்போயிருவ போலிருக்கே.. சரிசரி.. ஆனா பணத்தை பத்தி சொல்லனும்னா மனித வரலாறையே மொத்தமா சொல்லணும். மனுசன் குரங்குல இருந்து வந்தான்கிற பரிணாம வளர்சியில எனக்கு நம்பிக்கை இருக்கு. அதானால நாம மனுஷங்களோட ஆதி வரலாறுக்கு போகத்தேவையில்ல. அதே சமயம் மனிதர்களோட தொடக்க வரலாற கொஞ்சம் தெரிஞ்சுக்கிறது நல்லது. மனிதர்கள் தனக்கு தேவையான உணவை இயற்கையில் கிடைக்கிற பொருட்களின் உதவியோட சேகரிக்க தொடங்கினபோது மனித வரலாற்றின் கற்காலம் தொடங்குது.
மனிதன் தனது தேவைக்காக தனது உடலை தவிர வேறொரு பொருளை உபயோகிக்க தொடங்குகிறான். பலவிதமான வடிவங்களைக் கொண்ட கற்களை அவன் உபயோகிக்க தொடங்குகிறான். இது அவனுக்கு இயற்கையில சில பொருட்களை தனது தேவைக்காக உபயோகிக்கலாம் என்கிற அறிவை தருது. இதன் மூலமா மனிதன் தனது சிந்தனையின் அடுத்த நிலைக்கு போக உடலை தவிர வேறொரு பொருள் உதவுது. ஆக மனித சிந்தனையில் 'பொருள்தான்' முதல். இந்த வார்த்தைக்கு இரண்டு அர்த்தம் இருக்கு. ஒன்று மனித சிந்தனைக்கு உதவிய விசயங்களில் முதல் (first) என்பதும் மற்றொன்று மனித சிந்தனை வளர்ச்சிக்கு அவனோட முதல் (investment) பொருள்தான் என்பதும்தான்.
ஒரு எழவும் புரியல மகி.. என்றாள் தேஜா.


யோசி.. போகப்போக புரியும்.. புரியனும்கிற அவசியமும் இல்லை.. மனுஷன் உடம்ப விட்டு இன்னொரு பொருளை உபயோகிக்க தொங்குறது என்பது எனக்கு வேறொன்னையும் தெளிவாக்குது. அது என்னன்னா மனிதன் இயற்கைக்கு முரண்படத்தொடங்கினான் என்பதுதான். ஆக முரண்பாடு என்பதுதான் மனிதனின் இன்றைய முழு வளர்ச்சிக்கும் ஆதாரம்னு சொல்லலாம். ஏன் அல்லது ஏன் கூடாது என்பதுதான் ஆதாரக்கேள்விகள். பிறகு மனித வரலாற்றில் மிக முக்கிய மூன்று கண்டுபிடிப்புகள் அவனின் அதிகாரத்தின் கீழ் புறஉலகை வரச்செய்தது. தீ. சக்கரம். வில் அம்பு. ஆனால் எனக்கு மனித கண்டுபிடிப்புகளில் மிக முக்கியம்னு படுவது மனிதர்கள் மரம் மற்றும் நார்களினால் ஆன பாத்திரங்களை (கொள்கலன்கள்) மண் கலயங்களை உருவாக்கியதுதான். ஆனாலும் மனிதர்களின் மிகசுவாரஷ்யமான மற்றும் ரகளையான கண்டுபிடிப்பு பாய்மரம்! மரக்கலயம் தீயில் எரிந்துபோவதை தவிர்க்க மூதாய் ஈரக் களிமண்ணை பூசுவதில் தொடங்கி படிப்படியாக சுட்டமண் கலயங்கள் உற்பத்திப் பொருளை சேமிக்க தொடங்க எதிர்காலத் தேவை என்பதில் போய் முடிகிறது. ஒரு மாபெரும் தொடரியக்கத் தகவமைப்பிற்கு அந்த முடிவு மனிதனை நிற்பந்தபடுத்துகிறது. இங்கு வியாபாரம் (trade) தொடங்குகிறது!

இதைப்பற்றி பேசுவதற்கு முன் டார்வினிய கோட்பாடை மிக சுருக்கமாக அடுத்து பேசலாம்..

அதுக்கும் வியாபாரத்திற்கும் என்ன சம்பந்தம்.. என்றார் தேஜா.

சேந்து கண்டுபிடிப்போம் .. என்றேன்.

*****************************

தொடரும்

**********************




08 November, 2010

வானவில்வண்ண மின்னல் 6

எல்லாம் கிடைக்கறது பிரதிகளில். இவ்வாதம் பற்றிய ஆழ உரையாடலுக்கு விரிவாக படிக்கவேண்டும் என்று சொல்கிறான் வசு. ஒப்புக்கொள்கிறேன். தொடங்கியிருக்கிறேன் சோதிப்பிரகாசத்தின் வரலாற்றின் முரண் இயக்கத்திலிருந்து. பார்க்கலாம். இனி இப்பதிவை ஒரு சுய மதிப்பீட்டு பார்வையில் எழுத உத்தேசம். என்னில் இருக்கும் கருத்துகளை தொகுக்கவும் அதை தனியாக நின்று மதிப்பிடவும் முடியுமாவென்று பார்க்க எண்ணம். பொதுவாகப் பார்க்கும் போது ஆழத்தின் அலையொன்றில் சிறுவுயிராய் இழுபடுகிறது மனம். கொந்தளிப்பின் வேர் விளங்கா காலம். எந்த பொருளை வாழ்க்கையின் வெளிக்கு அர்த்தமாய்க் கொள்கிறது என் மனம். இந்த கேள்வி சிந்தனையில் தோன்றிய கணத்தில் வெடித்துசிதறுகிறது சொற்களாலான லார்வா நதி. போக்கிடம் அற்ற அத்வானம் மனம்.

***************************

நான் எழுதுகிற கவிதைகளில் இருந்து தொடங்குகிறேன். என்னளவில் கவிதை என்பது என்னவென்று மீண்டும் தெரியாமல் போய்விட்டது. கவிதை மற்ற எல்லாவறையும் போலவே ஏககாலத்தில் 'இருக்கிறது' மற்றும் 'இல்லாமல் இருக்கிறது' அணுபிளவில் ஒளித்துகள் போல. மனித சாரம் இன்பத்தை விழைந்து செல்கிறது அல்லது குறைந்தபட்சம் துன்பத்தை தவிர்க்க பாடுபடுகிறது. அப்படிஎன்றால் கவிதையும் இன்பத்திற்கான விழைவெனவே எடுத்துக்கொள்கிறேன். என்றால், இன்பம் என்பது என்ன. நல்லது எல்லாம் இன்பம். என்றால், நல்லது என்றால் என்ன. எனக்கு எது நல்லதோ அது நல்லது. என்றால், அது சுயநலம். இந்த அளவில் நான் கடுமையான சுயநலவாதி என்று ஒப்புக்கொள்கிறேன். ஆக என் சுயநலத்துக்காவே என்னால் கவிதை எழுதப்படுகிறதா என்றால், ஆமாம் மற்றும் இல்லை என்று முரணான பதில் மனதில் எழுகிறது. ஏனென்றால், கவிதை எழுதலாம் என்கிற எண்ணத்துடன் நான் எழுதும் அனைத்து வரிகளும் படிப்பவர்களால் கண்டுபிடித்துவிடமுடிகிறது. எதையாவது எழுதிவிட்டு கவிதை என்று சொல்லும்போது கவிதையென ஒப்புக்கொள்ளபடுகிறது. ஆக ஏககாலத்தில் இருக்கவும் இல்லாமல் இருக்கவும் கவிதையால் முடிகிறது. என்னால் முடியவில்லை. நான் ஏககாலத்தில் இருக்கிறேன். இல்லாமல் இருப்பதென் மரணம். ஆக கவிதை என்றால் என் நிலை என்பது இவ்வாறானதாக இருக்கிறது: எனது மனம் பின்நவீனத்துவத்தை நிலைப்பாடாக கொள்கிறது. அதன் களம் பின் காலனீயக் களம். இவற்றில் கவிதைக்கு கவிதை என்கிற நிலைப்பாடிற்கு இடமில்லை. எனவே கவிதை தேவையில்லாத ஒன்று என்கிறது அறிவு. ஆனால் மனம் தனது மூன்று நிலைகளும் (உணர்வு நிலை, ஆழ்மன நிலை, மயக்க நிலை) தனதான படிமப் பார்வையை கண்டு பேதளிகும்போது கிடைக்கும் சொற்கள் கவிதையின்றி வேறென்ன. இப்படி ஒரு முரணான நிலையில் நான் எழுதுவதை கவிதை என்று எந்த தைரியத்தில் சொல்லுகிறேன் என்றும் விளங்கவில்லை. நெகிழ் உலர் சதுப்புநில பிச்சிகாடு மனத்தில் தோன்றும் தாந்தோன்றிப்பூக்கள் சொற்களாய் மாறும்காலம் கவிதையாய் மணக்கலாம். இப்போது நான் என்ன செய்யவேண்டும்: எவ்வித நிபந்தனையும் இல்லாமல் எனது கவிதைகளை திரும்ப பெறவேண்டும். ஆனால் முடியாது. ஏனென்றால் எழுதிய வரிகள் என்னை ஆயிரமாயிரம் ஊசிகளாய் மாறி என்னை குத்திக்கிழித்து பனிக்கடலின் ஆழத்தில் இழுத்துக்கொண்டு போய்.... உறைகிறது வலி.

************************

மீண்டும் நிகழ்கிறது எல்லாம். மீண்டும் மீண்டும். அதனால்தான் நானும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் நிற்கவேண்டிய நிர்பந்தம். எனவேதான் மீண்டும் மீண்டும் ஒரே சொல். தேஜா வூ (.teja vu.) இந்த வார்த்தை பார்த்திபனால் எனக்கு ஞாபகப்படுத்த பட்ட போது ஒரு கத்தி செருகல் நிகழ்ந்தது. நான் நிதானிக்கிறேன். உண்மையில் எல்லாம் மீண்டும் மீண்டும் நிகழ்வது போல மாயம்தானா அல்லது மீண்டும் நிகழ்வதே புதிதுதானா. 'தேஜா வூ' இவ்வார்த்தை என்னுள் தத்துவமாக அறிவியலாக இலக்கற்ற கற்பனையாக கவிதையாக நினைவுகளற்ற எதோ ஒன்றாக ஸ்தூல இருப்பாக பயமாக பதிகிறது ஏக காலத்தில். என்ன காரணம் என தெளிவில்லை. அப்படி தெளிவுடனும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் நம்பிக்கையிழப்பையும் அமைதிப்பரவலையும் நிகழ்த்துகிறது இவ்வார்த்தை. ஒன்றில் தெளிவு பெற்றுவிட்டேன்: நான் சுயநலவாதி. எனது சுயநலம் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் இருந்து பறிக்கப்பட்டது அல்ல. மாறாக எனது சக மனிதர்களிடமிருந்து இரவலாய் பெறப்பட்டது. சரி எனது கவிதை நிலைப்பாட்டிற்கும் இந்த பிரகடனத்திற்கும்(?!) என்ன சம்பந்தம்? எதோ இருக்கிறதாகப் படுகிறது. தொடர்ந்து விளக்க முயல்கிறேன்.

***********************

கவிதைக்கு பிறகு? உரைநடை. சிறுகதை மற்றும் நாவல்களை (!) முயற்சிக்கிறேன். சில சிறுகதைகளும் இருக்கிறது. அவற்றை படித்துப் பார்க்கும்போது நான் கவிஞன் அல்ல என்றே தோன்றுகிறது. பார்க்கலாம். இந்த பதிவை நான் அதற்கான களமாக எடுத்துக்கொள்கிறேன். பயிற்சி களமாமாக.

**************************

இதன் தொடர்ச்சியாக நான் புரிந்துகொண்டிருக்கிற இரண்டு விஷயங்கள் பற்றி எழுத தொடங்குகிறேன். ஒன்று பணம் மற்றொன்று மொழி. இவற்றை பற்றிய எனதான புரிதலை எழுதவதன் மூலம் என்னை தொகுத்துக்கொள்வதாக உத்தேசம். இதற்காக இங்கு 'தேஜா' என்கிற கற்பனை மனிதனை உருவாக்கி இருக்கிறேன். இனி அவனுடனான உரையாடலே இந்த தொடரை இட்டுச்செல்லும். தேஜா என்பவன். ஆண் அல்லது பெண் அல்லது இண். பதினைந்து வயது தமிழ்நாட்டுக்காரன்.

*************************

போர்னோகிராபி பற்றிய விவாதம்: ஓர் அபிப்பிராயம்

சிந்திப்பதை போல ஒழுக்கம் கெட்ட
காரியம் வேறேதுமில்லை. இந்த கேடு கெட்ட
ஆபாச நடவடிக்கையானது
பசும்புல் தரையில் படரும்
களைச்செடி போன்றது
சிந்திப்பவர்களுக்கு புனிதம் என்று ஏதுமில்லை
பெயர் குறிப்பிட்டு நேரடியாகத்தான் சுட்டுவர்
அம்மணமான பிரச்சனைகளை தூக்கித்திரிவர்
கவனம்பெறும் சமாச்சாரங்களை
அழுக்குவிரல்களில் தொட்டு விவாதிப்பர்
அவர் காதுகளுக்கு அது இசை
பட்டப்பகலில் அல்லது இரவுப்போர்வையின் கீழ்
வட்டமாகவும் இருப்பார் முக்கோணமாகவும் ஆவர்
ஜோடிஜோடியாக இணைவர்
சேருபவர்களின் வயதும் பால் அடையாளமும்
முக்கியத்துவமில்லாதவை. அவர்தம்
கண்கள் ஜொலிக்கும்
கன்னம் கனிந்திருக்கும். சிநேகிதர்கள்
தம் இநேகிதர்களையே
கெடுப்பார்கள்.
ஒழுக்கம் கெட்ட மகள்கள் தங்கள்
தந்தையர்களை கெடுப்பார்கள்..
சின்னதங்கைக்காக
அவள் சகோதரன் தரகு வேலை
பார்ப்பான். சபிக்கப்பட்ட
மரத்திலிருந்து அவர்கள்
கனிகளை கேட்பர். பளபளப்பான
சஞ்சிகைகளில் காணப்படும்
கன்றிய புட்டங்களை விடவும்
அசிங்கமானவர்கள்.
நேரங்கெட்ட நேரத்தில் பிறந்த இந்த
குறுகிய புத்திகாரர்கள் கொண்டிருக்கும்
புத்தகங்களில்
படங்களிருக்காது. அவர்களது
உடலின் நிலைகள் அதிர்ச்சியூட்டும்
ஒரு மூளையிலிருந்து
இன்னொரு மூளைக்கு உணர்ச்சியேற்றும்
அவர்களின் அனாவசியமான
வெளிப்படையான உடலசைவுகளை
காமசூத்ரா நூல் கூட அறியாது.
களியாட்டத்தில் சூடாய் இருக்கும்
ஒரே திரவம் காபிதான். மனிதர்கள் தம்
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
தம் இடுப்பை அசைப்பார். தத்தம்
கால்களின் மீதே கால்களை போட்டு கொள்வர்
ஏனென்றால்
அப்போதுதான் ஒரு காலில் தரையின் மீது இருக்கமுடியும்
மற்றொரு கால் சுதந்திரமாக காற்றில்
ஆடிக்கொண்டிருக்க முடியும்
அவ்வப்போது அவர்களில் ஓரிருவர்
எழுவார்கள் ஜன்னலை நோக்கிப்
போவார்கள். திரைச்சீலையில் இருக்கும்
துவாரத்தின் வழி தெருக்களை
ஜாக்கிரதையாக ஊடுருவிப்பார்த்துக்கொள்வார்கள்.
*******************
விஸ்லாவா ஷிம்போஷ்க்கா (vislawa szymborska). நோபல் கவி. போலந்து பெண்.
*******************