31 October, 2009

எலிகாலம்

1

அவனுடையது ஒழுங்கான வீடு

அவன் ஒழுங்கானவன் அல்ல

தன் சகோதரர்களின் நண்பர்களின்

தெருவாசிகளுடைய குழந்தைகளின்

பெற்றோரின் மற்றும் நகரத்தின்

மற்றவர்களின் பழக்கத்தில் இல்லாததான

பாதாள சாக்கடையிலிருந்து தினமும்

பின்னிரவில் வீடு நுழையும் ஒரு

எலியுடன் பழகத்தொடங்கினான் . பளுத்த

எலி வால் நீண்டது

கரும் இருளின் சொட்டுக்களாய்

இரண்டு கண்கள் இரண்டு

வெளிச்ச புள்ளிகளை பிரதியெடுக்க

அலைபாயும். தேவகணத்தில் இருவரும் நெருக்கமானார்கள்

நகரின் அனைத்து வீடுகளுக்கும்

பாதாள சாக்கடையில் ஒரு வாசலிருப்பதை

அவனுக்கு பகிங்கிரப்படுத்தியது எலி

பின்பாக அவ்வெலி புத்தகங்களை

மட்டும் தின்று செழித்த காலத்தில்

அனைத்தையும் அறிந்த அவன்

நகரின் ஒழுக்க சீலன் என அறிவிக்கப்பட்டான்

எச்சில் ஒழுக உறங்கிக்கொண்டிருந்த

எலி வருவதற்கான முன்னான பொழுதில்

அவன் கனவின்கல்லில் பதித்த வாசகத்தை

உறக்கப்படித்தேன்

'புத்தகத்தை தின்பதும் மற்றவர்களின்

அந்தரங்கத்தை அறிந்து கொள்வதும்

ஒழுக்கத்தின் முதல் பாடமென...

2

அவனுடைய குப்பைத்தொட்டியை

தனது வீடாக்கிக்கொள்ள சம்மதங்கேட்ட

எலியை பரிதாபத்துடன் பார்த்து சம்மதிக்கிறான்

எலி தன் துணைஎலியுடன்

நிறைந்த அம்மாவாசையில் பால்காய்ச்சியது

பத்து மாதத்தில் ஒரு அழகான யானையை

ஈன்றது துணைஎலி. யானை போய்வர ஏதுவாய்

சாகடைத்துளையை அகலமாக்கினான்

வேறு வழியின்றி அவன்.

3

எலியுடனான பழக்கத்தில்

அவனுக்கான சிறு வால் முளைத்ததுகண்டு

தன் தாயிடம் பெருமை கொண்டான்

முன்பற்களும் பெரிதடைவதாய் தாய்

கண்டு சொன்னாள்தகப்பனுக்கு கொள்ளை

சந்தோசம். எலிப்பொறி சாதனங்களின்

கடையொன்றை நகரின் நடுவில் திறந்தான்

அரசன் வைத்த முதல் பொறியில்

தன் வாலை இழந்த அவனுக்கு

தாய் மருந்து வைத்து கொன்றுபோட்டாள்.

25 October, 2009

தொலைவான ஓரிரவு

என் அம்மா ..
உன் ஒரு முலையிலிருந்து மறு முலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது.
பிரிவென்று கருதாதே.

என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
நுடுவிரல் பற்றிக்கொள்ளும் பொழுது இது
தீண்டளற்ற இடை நொடி
தனிமையோ என்று திகைக்காதே.

என் தங்கையே உன்னை தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில்
நீ மிரளாதிரு.

உறங்கு என் மகளே
தோள் மாற்றி சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.

சகலமும் ஆன பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப்பார்த்தது...


யூமாவாசுகியின் என் தந்தயின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற தொகுப்பிலிருந்து.

24 October, 2009

புள்வனம்

மழைக்காற்றில் நடுங்கும் இலையென
இமைகள். மெல்லிய பிரவாகமென
பொங்கி வழிகிறது வெறுப்பின் நீர்
வெம்மை தாங்காமல் வெளியேறும்போது
தெரு நுழைகிறான் பிச்சாந்தேகி
புன்சிரிப்போடு கடக்கிறான் என்னை
வீடு திறந்து நீ அளித்ததை
உமிழ்நீர் வழிய உண்கிறான். தெருமுனையில்
அவன் மீண்டும் என்னை கடக்கும்போது
திருவோடை தவரவிடுகிறான். உடைந்து
சிதறிய பாத்திரத்திலிருந்து கிளம்பி
பறக்கிறது புள்வனம் ஒன்று
பசிய பூனையாய் மாறி
எவ்விக் கவ்வுகிறேன் அவற்றில் ஒன்றை
அதன் சிறகுகள் படபடக்க தின்னும்
என் கண்களுக்கு தெரியுமாறு
பெருங்கிளையின் கயிற்ரிலுன்
உடல் தொங்கும் சித்திரத்தை
வானத்தில் வரைந்திருக்கிறான்
பிச்சாந்தேகி.

23 October, 2009

பார்க்காத கோணம்

சாருநிவேதிதா மீது ஆயிரத்தெட்டு எரிச்சல் இருந்தாலும் அவரது சினிமா விமர்சனத்திற்கு நூறு சதம் நான் உடன்படுகிறேன். ஒரு சினிமாவை கூட விமர்சனம் செய்ய நான் முயன்றதில்லை.
நிறைய படங்கள் பார்க்கிறேன். ஸ்தம்பிக்க வைக்கிற அளவு கொட்டி கிடக்கிறது. தமிழ் சினிமா ஒரு சதவிகிதம் கூட கவரவில்லை. நான் பார்த்த உலக படங்களை நண்பர்கள் விமர்சனம் செய்வதை படிக்க நேருகிற போதுஒரு சந்தோசம். அதுவும் நான் பார்க்காத ஒரு கோணம் அவற்றில் தெரியும் போது ஒரு ஆச்சர்யம். சாருஒப்பீட்டளவில் பல தலங்களில் விமர்சனத்தை முன் வைப்பார். கமலை பற்றிய அவர் பார்வை விசேசமானது. உமாஷக்தியும் ராமகிருஷ்ணனும் தான் பார்த்த படங்களின் கதைகளை துல்லியமாக விவரிக்கிறார்கள். ஒரு படத்தை பார்த்துவிடுகிற நேர்த்தி கிடைத்து விடுகிறது. பழைய படங்களை தன் அனக்டோடில் குறிப்புகளாய் தெறிக்க விட்டு சிலிர்க்க வைக்கிறார் ராஜநாயஹம். போன வாரத்தில் நான் பார்த்த மூன்று படங்கள் த்ரி மன்கீஸ், ஹங்கர் , விக்கி muகிறிஸ்டினா பார்சிலோனா. முதல் படத்தை ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதனுடைய விசுவல் பிரம்மாண்டமானது. இரண்டாவது , சிறையில் அறுபத்தியாறு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்து இறந்து போகும் ஒரு கேரக்டர். ஒரு முறை சாப்பிட மாட்டாரா என்று ஏங்கவைத்தது. மூன்றாவது வூடிஆலனின் படம். தயவு செய்து படத்தை பாருங்கள் அவ்வளவுதான் இதற்குவிமர்சனம்.

22 October, 2009

போதை

ஒரு பயணம் அதன் நோக்கம் பொறுத்து அயர்வை அளிக்கிறது. நாற்பது மணி நேரங்களில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, சென்னை என வாகனத்தில் சுற்றுவது சம்பளம் தரப்படுவதால் செய்ய வேண்டிய வேலை என்பதால் அலுப்பு, சோர்வு , வலி, எரிச்சல் எல்லாம் சேர்ந்து ரணகளபடுத்துகிறது. நேற்று இரவு வசுவையும் சுரேசையும் பார்த்த பிறகுதான் கொஞ்சம் உற்சாகம். நாளைக்கு அக்டோபர் இருபத்தி இரண்டு என்றேன். என்ன விசேசம் என்றார்கள். அவர்களிடம் சொல்ல வில்லை. ஒரு அற்புதமான இல்லறத்தை நல்கி வரும் என் மனைவியை பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இந்த நாளில் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமண நாள்.

பத்து வருடங்களுக்கு முன் ஆவடிக்கு வந்தது. இன்றும் அதே மன அழுத்தத்தை அளிக்கிறது. ஹைதராபாத் பிரியாணி மட்டும் விலக்கு.!

வலைப்பதிவு ஒரு விதமான போதையை உண்டுபண்ணுகிறது.

19 October, 2009

வியப்பின் பாடல்

காதலை பற்றிய பாடல்
ஒன்றை எழுதத்தேவையான
கச்சாபொருளை
எப்படி சேர்ப்பேன்
மனித கூட்டமாய் அது
இருக்கும் போது
அதிகாரப்படுதலில் ஆனந்திக்கும்
அதற்குத்தான் எத்தனை வேலைகள்
அவர்களின் தொலைந்து போன
கச்சா பொருள் காதல் தான் என்றால்
உருளைக்கிழங்கு கொதிக்க வைக்கும்
கலன்களில் என்னை அழுத்துகிறார்கள்
சமனற்ற உருளைக்கிழங்குகள்
கொதித்து நொதித்து இனிமையும்
தெயவீகமானதுமான சாராயம் வடிவது போல
நான் சொட்டு சொட்டாய் கரைவதை
அவர்கள் அலச்சியம் செய்கிறார்கள்
காற்றில் நான் மது வாசமாய் திரிகிறேன்
காற்று மாசு என்று எனை காணும்போதெல்லாம்
நாசி மூடுகிறார்கள்
நான் காதலை மட்டுமே பாடுகிறேன்
அதை அவர்கள் ஆணின் கொழுப்பென
நாய்களுக்கு இரையிடுகிறார்கள்
அவற்றை யுண்டு நிலவை பார்த்து
ஊளையிடும் நாய்களின் சத்தம்
காதலின் கச்சா பொருளென
என் விரல் நகங்களில் படருகிறது
கனவில் தூங்கிக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு என் விரல்களை
உண்ணத் தருகிறேன்
உயிர் நடுங்க உறிஞ்சிக்குடிக்கும்
அவர்களின் முகத்தில் தெரிவது
என்னவென்று அறியமுடியா வியப்பு.

வெடிக்கார பாண்டிகள்.

சுமாராக 15 கிராம் அலுமினியம் தூள் கொஞ்சம் வெடியுப்பு கலந்து சின்ன காகிதத்தில் வைத்து பொடிப்பொடியாக பத்து சரளை கற்களை போட்டு காகிதத்தை மடித்து நூலால் கட்டினால் கிடைக்கிறது வேங்காயவெடி. ஒரு மூடைக்கு 1000 வேங்காயவெடி வைத்து ரெண்டு மூடைகளை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறக்கும் போதுஒரு மூடை வெடித்து அவன் தலையை சிதறடித்தது. அவனருகில் இருந்த இன்னொருவன் உடல் கிழிந்து போனது.
பள்ளிப்பட்டு பட்டாசு குடோன் தீ பிடித்து 32 பேர் கருகி விட்டார்கள். தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான வெடிக்கார பாண்டிகள் தொழில் புரிகிறார்கள். படாசுக்கான மூலப்பொருள்கள் மிகமிக சுலபமாக நகர்களில் கிடைக்கிறது. தீபாவளி அன்று 15 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட்டமாக சாலையில் வெங்காய வெடிகளை உபயோகித்தார்கள். ஏறக்குறைய அனைவரும் குடித்திருந்தார்கள். வெடி பொருட்களுக்கு அறிவு இல்லை. வெடிபொருள் செய்பவர்களுக்கு அறிவு தேவையில்லை.

18 October, 2009

தெருவில் கிடந்த கல்

தீபாவளி என்னுடைய அத்தையம்மாவின் சிகேன்குனியா வுடன் தொடங்கியது. ஹாஸ்பிட்டலில் அனுமதித்து விட்டு மனைவி பார்த்துக்கொள்ள, நான் நண்பர்களுடன் கிராமத்துக்கு சென்றேன். ஊர் பழைய மாதிரி சுத்தமாய் இல்லை. நம்மை போல் நண்பர்கள் தொடர்ந்து புலம்புவதை போல் நானும் பழைய நாட்களைப் பற்றி புலம்பி விட்டு தெருத்தெருவாய் நடந்தலைந்தேன்.கொஞ்சம் குடித்திருந்தேன் . மறந்து போய் விட்டது என்று நினைத்தது எல்லாம் ஞாபகம் வந்தது . தாத்தா வாழ்ந்த தெரு நிறைய உயரமாகி விட்டது. போஸ்ட் மரத்தின் கீழே கிடந்த ஒரு கல் மட்டும் இன்னும் இருக்கிறது. சாக்கடையை மறைக்க உபயோகப்படுத்தப்பட்டது . எண்பதுகளின் கிராம தெருச் சாக்கடையின் வீச்சத்தையும் பள்ளி காலத்து நினைவுகளையும் நொடிக்கும் குறைவான நேரத்தில் மூளைக்குள் ரீப்ளே செய்தது அந்த கல். அப்புறம் அந்த வழுக்க பழ மரம். சற்று நெகிழ்ந்துதான் போய்விட்டேன். பல தடவை ஊருக்கு போயிருந்தாலும் ஊர் சுற்றாமல் வந்ததை நினைத்தது வெட்கமாய் இருந்தது. ஊரில் பாஷ்கர்சக்தி மற்றும் நூனையன் என்கிற ரமேஸ் ஆகியவர்களை பார்த்தது தீபாவளியை பழைய தாக்கியது.

17 October, 2009

வானம்

அனைத்து இனிய நண்பர் களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். எல்லோருக்கும் என் அன்பு.

16 October, 2009

என்னை பற்றி இரண்டு குறிப்புகள்.

1

பிரவகிக்கும் இயலாமையில்

ஒரு பறவையின் உடல்சூடு

கொள்ளும் மனவெளி

நீண்ட கூந்தல் கொண்ட

மேனியை உருவகிக்கும்

பின்பு அதிர அதிர புணரும்

சவம் விழித்துக்கொள்ள

நன்மையற்ற சொல் உதிரும்

நான் தலைகீழ் கருஞ் சுடர்

எரியவிட்டு தீக்குளிப்பேன்

உயிர் கசிய

மெல்லிய இருள் கண்களில் பரவும்

நிலைத்த மரணம் துவண்டு சரியும்

குழைந்த இதழ் கொண்டு மீண்டும்

உதிரும் சொல் கேட்டு

என் முதல் கொலை தொடங்க

விளைவில் நிகழும் ஓர்

ஆணின் மரணம்

2

பெண்களாலான ஆணின் புகைப்படம்

ஒன்றை காணவில்லை என

அறிவிப்பு வெளிவந்த நாளில்

எல்லா ஆண்களும் தங்கள் முன்னிருந்த

ஆடியில் தேடத்தொடங்கினார்கள்

தெரிந்ததெல்லாம்

மாடியிலிருந்து செங்குத்தாக

விழுந்து கொண்டிருக்கும் ஓர்

பெண்ணின் நிர்வாணம் மட்டுமே.

15 October, 2009

ரயில் நிலையம் - இரண்டு.

நடை சற்று நேரம் கிடைத்தது. மீதி ஐந்து ரயில் நிலைய குறிப்புகள்:



*
ஐந்து நடைமேடைகள் இருக்கின்றன

நிலையத்தில் .ஏதேனும் ஒன்றில்
தினம் பார்ப்பேன் அந்த பெண்ணை
தண்டவாள நிறத்தில் ஒரு துணியை
சுற்றியிருப்பாள் உடலில். பாதமும்
கழுத்தும் நிலகரி சாயல்
உறுப்புகள் வேறு எதுவும் தெரிய
விடமாட்டாள். இடது கையில் குச்சி
வலது கையில் நைந்த செருப்பு
குறுகி அமர்ந்து அந்த செருப்பால்
தொடர்ந்து தரையில் அடித்துக் கொண்டிருப்பாள்
உண்பது உறங்குவது
நடப்பது பேசுவது எதையும்
பார்த்ததில்லை. பாதையில் நடக்கும்
ஆண்களை கண்டதும்
செருப்பு காட்டி கண்களை வெருட்டி
பட்டினி நாயின் ஊளை போல
சத்தம் எழுப்பி மீண்டும் அடிக்க
தொடருவாள் தரையை. அவர்களின்
ஆண்மை நைந்து தெறிக்கும் அவ்வடிகளில்
பின்னான ஒரு மாலையில்
இரண்டாம் மற்றும் மூன்றாம்
நடைமேடைகள் மனிதர்களால்
நிரப்பப்பட்ட பொன் வெயிலில்
தன் ப்ருஷ்ட்டத்தை இரண்டாம் நடைமேடைக்கும்
யோனியை மூன்றாம் நடைமேடைக்கும்
காட்டியவாறு உடையை தூக்கி
மூத்திரம் பெய்தாள். சாதரணமாய்.
பின் அவள் நடந்து சென்றதை நான் பார்த்தேன்.
*
காலை ஏழு நாற்பதுக்கு
அவள் நிலையத்திற்கு வருகிறாள்
பருத்தி புடவையுடன் சுயமாய் மலரும்
ஒரு காட்டு பூ போல
கைபையில் இருக்கும் வளையல்களையும்
கடிகாரத்தையும் எடுத்து அணிந்து
நீள் இருக்கையில் சம்மணமிட்டு
அமர்கிறாள். ஏழு ஐம்பத்து ஐந்துக்கு
ஒரு முரட்டு தனமான வீம்பில்
என்னை பார்காமலேயே
நதி போல் சலசலத்து புறப்படும்
வைகையில் ஏறி செல்கிறாள் தினமும்
மறுநாள் தான் திரும்ப வருகிறாள்.
*
குஞ்சுகளுக்கு உணவிட
கூடடைந்து அமரும் கழுகை போல
நிலையத்தில் நுழைந்து
நிற்கிறது ரயில்.
*
நிலையத்தில் வந்து நிற்கும்
ரயில் என்ஜினின் முகப்பில்
அமர்த்திருந்த ஈக்கள் தண்டவாளத்திலும்
நடைமேடையிலும் பரவி அமர்கிறது
சிறிய இளைப்பாரலு க்கு பின்
மீண்டும்
தங்கள் பயணத்தை தொடர்கின்றன
அவைகள் எஞ்சின் முகப்புகளில் அமர்ந்து.
*
முது கிழவனின் சோர்வும்
சலிப்புமான மரணத்தில் பிரியும்
உயிர் போல நிலையத்திலிருந்து
மெதுவாய் வெளியேறுகிறது ரயில்.

*****





















ரயில் நிலையம் - ஒன்று.

ஒரு வழியாஹ நானும் இந்த நீரோட்டத்தில்.. திண்டுக்கல்லில் இருக்கிறேன். தீபாவளிக்கு முன்தானாள் இன்று.! காலையில் நல்ல மழை. ரயில்வே ஸ்டேஷன் கழுவி விட்டது மாதிரி ஆகிவிட்டது. ரயில்வே ஸ்டேஷன் பற்றிய முதல் பத்து குறிப்புகள் இங்கு:

*

ரயில் நிலையம் பற்றி

தெரியாதவற்றை தெரிந்து

கொள்ள ரயில் நிலையம் பற்றி

தெரியாமல் இருக்க வேண்டும்.

*

தண்டவாளத்துக்கு மேல்

ரயில் தெரிதிறது. ரயிலுக்குள் மனிதர்கள்

தெரிகிறார்கள். மனிதர்களுக்கு

வெளியில் ரயில் தெரிவதில்லை

*

அத்தனை மனிதர்களும் கலைந்த

பின்னாலும் காகத்திற்கு கரைய

தெரிகிறது. குழாயில் கசிந்து சொட்டும்

நீர் தெரிகிறது அதற்கு.

*

உலக பயங்கரவாதத்திற்கு

துளியும் குறைந்ததல்ல ரயில்

புறப்படும் பொருட்டு எழுப்பும் கூவல்.

*

ஒவ்வொரு ரயில் நிலையமும்

அஹாலத்தில் கொல்கிறது

காலத்தை.

*

குழந்தைகளுக்கு பொம்மை ஆகிப்போன

ரயில்களை யானை பாகனின்

நேர்த்தியோடு முன்னும் பின்னும்

செழுத்துகிறான் ரயிலோட்டி

நீண்ட பெருமூச்சை வெளியேற்றி

உறுமி பயமுறுத்தும் ரயிலை

பார்த்து பயப்படும் என்னை

கேலி செய்கிறார்கள் குழந்தைகள்.

*

மீதி நாளைக்கு..