30 November, 2009

கமெண்ட்ஸ்


ஸ்ரீராம் ப்ளாகில் நான் படித்த கம்மென்ட். நன்றாக இருந்தது. கேள்வி ஸ்ரீராம் பதில் கௌதமன்!

*****


மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்?

தீவிரவாதிகள் டீ விற்கிறதுக்குப் போயிடுவாங்க!

*****

வருகை

புதுப்புனல் செப்டம்பர் இதழில் அலிஷியா பட்னாய் என்ற பெண் கவியின் கவிதை ஒன்றை கீழே கொடுத்துள்ளேன். அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது மகளுக்காக எழுதிய கவிதையென உணரமுடிகிறது. ஆனால் இதன் அகிலத்தன்மை இக்கவிதையின் வீச்சை முழுமை செய்கிறது.

வருகை:

வெள்ளிகிழமைகளில், அம்மா

பூட்டுகளையும் கதவுகளையும்

உடைத்து திறந்து கொண்டு வருகிறாள்

நிமிடங்களை கணக்கிட்டவாறு உன்னோடு

தட்டமாலை விளையாட . அப்பா

தொலைதூரத்தில் சுவரால் சூழப்பட்ட தனது நாளில்

உன்னுடைய கதகதப்பான தேகத்தையும்

உன்னுடைய கணக்கிடப்பட்ட குறைவான நிமிடங்களையும்

கனவு கண்ட வண்ணம் இருக்கிறார்

என்னால் மட்டும் முடியுமானால்

என்னருமை குழந்தையே, என்னால் மட்டும் இந்த

பூட்டுக்கள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

உனக்கு விளக்க முடியுமானால்

இந்த வாயிற்கதவுகள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

இந்த கம்பிகள் எல்லாவற்றிற்குமான காரணத்தை

உயரமான சுவர்ர்களுக்கான காரணத்தை

எல்லாவற்றிற்குமான.. எல்லாவற்றிற்குமான

கணக்கிடப்பட்ட நிமிடங்களுக்கான காரணத்தை

அதை மட்டும் என்னால் விளக்க முடியுமானால்

என் அருமை குழந்தையே

என்னால் மட்டும் 'வெளி' யை விழுங்க முடிந்தால்

ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் தொலைவாக

தட்டமாலை சுற்றமுடிந்தால் ..

ஹோ.. அப்படி மட்டும் முடிந்தால்

பின் நாம் சுதந்திரமாக விளையாடிக்கொண்டிருக்கலாம்

என் கைகளும்

காலக்கணக்கை

ஆனந்தமாய் தொலைத்துவிடும்..

*****

29 November, 2009

வாதை

அனுபவிக்க இயலாத துயரமொன்றை என் உடலுக்கு பழக்கப்படுத்திவிட தினமும் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். அவ்வாதை மிகப்புராதானமானது. மேலும் துல்லியமானதும் கூட. தாட்சண்யம் இல்லாததது என்றும் சொல்லலாம். மரணம் கூட அதை கண்டு மிரள்கிறது. போகிற போக்கில் அனைவரும் அதை புறம் தள்ளுகிறார்கள். சிலர் அதை கையில் பிடித்து லாவகத்துடன் என்முன் ஒரு நிகழ்வை நடத்துகிறார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. உடல் இற்று மனம் பேதலிக்கிறது இவ்வாதையை கடக்க. கடவுளை கூட நம்பிவிடலாம் என்கிற அளவு வேதனை.
அவ்வாதையின் இருப்பு ஸ்தூலமானது. ஆயிரமாயிரம் ஊசிகளாய் என் நகக்கண்ணில் நுழைந்து வெளியேற அதற்கு தெரிகிறது. ஒவ்வொரு கணமும் அதன் இருப்பு என்னை பயப்படுத்தி நடுநடுங்கசெய்கிறது. நேர்மை என்னும் அவ்வாதைக்கு சொல் தவிர எந்த வடிவமுமில்லை. நேர்மை பயங்கரமானது. வசீகரமற்ற ஒரு ஒட்டு உண்ணியது. உடனடியாக அடித்து கொல்லப்படவேண்டிய வீட்டினுள் நுழைந்த விசப்பூச்சியது. அது ஒழுங்கற்றைவைகளையும் சிதைவுகளையும் பார்த்து முகம் சுழிக்கிறது. தன்னை சமன் செய்துகொள்ள கடுமையாய் வற்புறுத்துகிறது. நேர்மை என்னும் அவ்வாதையை தினமும் நான் சிலமணிநேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளேன். மரகிளையில் தாவும் குரங்கின் இயல்பென அந்த பழக்கம் என்னை விட்டு அகலாதிருக்கிர்த்து.
மேலும் தொடந்து என்னை அவமானப்படுத்த முயற்சி செய்து என்னை ஒரு மடையனை போல் உணர்த்தும் அவ்வாதை என் தனியறையில் மதிப்பிழப்பதை காண சகிக்காமல் கதவை இழுத்து சாத்துகிறேன் நீங்கள் அறியா வண்ணம். ஒவ்வொரு முறையும் நான் கதவு திறந்து வெளியேறும் போது பழகிய நாயென என்மீது தாவி ஏறுகிறது. அதன் மலநாற்றத்தை என் நாசியில் கொட்டுகிறது. ஒரு அசுத்தமற்ற பள்ளி சீருடையென அது என்னுடனே இருக்கிறது.

ஓரியென்டலிசம்

Orientalism is the imitation or depiction of aspects of Eastern cultures in the West by writers, designers and artists. An "Orientalist" may be a person engaged in these activities, but it is also the traditional term for any scholar of Oriental studies.

பொதுவாக ஓரியேன்டலிசம் மேற்சொன்னவாறு விக்கிபீடியாவில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இனக்குழுக்களின் கலாச்சாரங்களை வேறொருவர் அவதானித்து இப்படித்தான் இவர்களின் கலாசாரம், வாழ்வுமுறை, பழக்கவழக்கங்கள் இருக்கிறது என்று பதிவு செய்வதை மற்றவர்கள் படித்து அவ்வகையான இனக்குழுக்களின் கலாச்சாரங்களை புரிந்துகொள்வது ஓரியேன்டலிசம். ஒரு இனக்குழுவின் அகத்தை புறமாக பார்த்து அவர்களின் இருப்பை யூகம் செய்து அதை பதிவு செய்வது என்ன தீமை வந்துவிடப்போகிறது.. நல்ல விசயம்தானே அது என்று நினைத்தால் நாம் தவறாக சிந்திக்கிறோம் என்று பொருள். இது கடந்த சில பதிமன் ஆண்டுகளாக பெரும் அரசியல் பரப்பாக நிகழ்ந்துவருகிறது. இந்த தொடர் பதிவில் ஓரியேன்டலிசம் பற்றிய எனது புரிதல்களை அவ்வப்போது எழுதி எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாமென நினைக்கிறேன். ஓரியேன்டலிசம் என்றவுடன் நமக்கு தவிர்க்க முடியாத பெயர் எட்வர்ட் செய்த். அவரின் ஓரியேன்டலிசம் என்கிற புத்தகம் ஆசியாவை பற்றிய - முக்கியமாக - முஸ்லிம்களை பற்றிய மேற்கத்திய புரிதல்கள் எவ்விதம் பரப்பபட்டது என்று எடுத்துக்காட்டுகிறது. மற்றவர்கள் பற்றி அதிகுறிப்பாய் விளிம்புநிலை மக்களை பற்றிய மேட்டுக்குடி கருத்தாக்கம் எவ்வாறு அவர்களை அடிமைத்தனம் படுத்துகிறது என்பதை ஆராயும் பார்வை இதில் உள்ளது. நான் இந்தியாவில் இருக்கும் இத்தகைய சூழல் பற்றி மட்டும் எனக்கு கிடைக்கும் தகவல்கள் மற்றும் படிப்பவைகளின் அடிப்படையில் தொடர்ந்து எழுதலாமென்று நினைக்கிறேன். ஓரியேன்டலிசம் ஒரு விலாசமான அரசியல் மற்றும் பண்பாட்டு சூழல். அதை பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதை படிப்பவர்கள் (!) ஏதாவது தவறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தெரிவியுங்கள்.


தொடரும்...

26 November, 2009

வாழ்வு ஆப் கந்தராசு 1



உண்டிவில் கந்தராசுவின் போக்கில் அவன் அப்பன் ஆனந்தகுப்பன் பெரும் வருத்தம் அடையதொடங்கியிருந்தான். கந்தராசுக்கு உண்டிவில் கால்பையில் ஒரு அங்கமாகவே இருக்கும். அவனது தப்பாத குறிக்கு ஆச்சர்யப்பட்ட ஊர் ஜனங்கள் அவன் வாய் வார்த்தையை கேட்டு அருவருப்படைய தொடங்கியிருந்தார்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கெட்ட வார்த்தைகள் தெரியுமோ அத்தனையும் கந்தராசுக்கு தெரியும். மட்டுமில்லாமல் அதை எல்லாவற்றையும் அவன் சரம்சரமாக பேச தொடங்கினால் ஜனங்கள் எல்லாம் முக்கியமாக பெண்கள் எல்லாம் பஞ்சாய் தெறித்து போவார்கள். எல்லாவற்றையும் விட அவன் அப்பன் ஆனந்தகுப்பனுக்கு அடிவயிற்று நெருப்பாய் சுட்டது கந்தராசு பேணி வளர்த்த "ங்கோத்தா.." என்கிற வார்த்தை. கந்தராசுவின் வாய் இவ்வார்த்தை இல்லாமல் திறக்காது. வைத்தியர்கள், பூசாரிகள், பில்லிசூனியக்காரர்கள் தோற்றுபோனார்கள் கந்தராசுவிடம். விடிவெள்ளியாய் அவ்வூருக்கு வந்தார்கள் அவர்கள். சில வாரங்களிலேயே ஊரின் பிரதான இடத்தில் தோன்றியது கூம்பு வடிவ கட்டிடமும் சிலுவையில் தொங்கும் ஏசுவின் சிலையும். தந்தை மார்கரெட் ஆரோக்கியம் பெண்மையும் மென்மையும் கொண்டவரானாலும் உடல் ரீதியில் ஆண். ஏசுவை காதலித்து காதலித்து அனிச்சம் போல் ஆனவர். எல்லாம் வல்ல ஆண்டவரின் புகழ் கேட்டு புல்லரித்த ஆனந்தகுப்பன் கந்தராசுவை அழைத்துக்கொண்டு த்னதையிடம் போனான். அப்பம் உண்டு ஜீனானந்தம் ஆனார். கந்தராசுவுக்கு கஸ்பர் ராஜா என்ற பெயர் பிடிக்கவில்லை. பல வாத பிரதிவாதங்களுக்கு பின் அருட்தந்தையும் கந்தராசுவும் ஒரு தீர்வை கண்டுபிடித்தார்கள். உண்டிவில் போட்டி! சிலுவையின் கீழ் இருந்த நீண்ட மேஜையில் ஒரு மெழுகுதிரி ஏற்றப்பட்டது. ஒற்றைமெழுகுதான் குறி. மூன்று தவணைகள் கந்தராசுவிற்கும் ஆறு தவணைகள் அருட்தந்தைக்கும் என முடிவானது. கந்தராசு எப்பொழுதும் போல் ஒரு கல்லில் வேலையை முடித்து விட்டான். அடிபட்ட மெழுகுதிரி மீண்டும் உபயோகப்படுத்த லாயக்கற்றதாய் ஆனது. அருட்தந்தைக்கு மற்றொன்று பொருத்தி வைக்கப்பட்டது. முதல் கல் - ஏசுவின் பெயரால் ஜெபிக்கபட்டது - நேராய் வலது சுவர் அருகிலிருந்த முக்காலியின் மீதிருந்த ஒயினின் போத்தலை சிதறடித்தது. ஆரோக்கியம் நெஞ்சில் சிலுவையை இட்டுக்கொண்டார். இரண்டாவது கல் உத்திரத்தில் தொங்கிய அலங்கார விளக்கில் ஒன்றை தரைக்கு கொண்டுவந்தது. பெரும் வருத்தத்தில் ஏசுவே என்று கூவினார். மூன்றாவது கல் விரல் தவறி பின்புறமாக பாய்ந்து ஜீவானந்தத்தின் வயிற்றில் பட்டது. ஜீவானந்தம் கழிப்பறை தேடி போனார். நான்காவது கல்லும் ஐந்தாவது கல்லும் அன்னை மேரியின் பெயரால் ஜெபிக்கப்பட்டு முறையே சிலுவையின் வலது மற்றும் இடது பக்கங்களில் இருத்த ஆடி பொருட்களை ஒச்சப்படுத்தின. ஆறாவது கல் ஆரோக்கியத்தின் அவசரத்தில் தாவீதுக்கு பதிலாக தன் ஞாபகத்திற்கு வந்த யூதாசின் பெயரால் ஜெபிக்கப்பட்டது மிக சரியாக சிலுவையில் தொங்கிய ஏசுவின் ப்லாஷ்ட்டர் ஆப் பாரிஸ் நெற்றியில் நுழைந்தது. "ங்கோத்தா.. ஜஸ்ட் மிஸ் டா" என்ற அருட்தந்தை ஆரோக்கியம் பாவமன்னிப்பு சொல்லும் நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டார். இப்படியாக கந்தராசு தன் பெயரை தக்கவைத்துக்கொண்டான்.

How to Tell if Your Ass is Too Small..........!








25 November, 2009

அன்பு

அன்பு என்பதே ஒரு ஏமாற்று வேலை. அன்பின் கொல்திறன் திசை மற்றும் தூரத்தை வெல்லும் திறன். அனால் பேரன்பு எதிர்பார்ப்பை நிராகரிக்கிறது. ஏசுவுக்கும் புத்தனுக்கும் மகாவீரருக்கும் வாய்த்தததாக நம்பப்படும் அப்பேரன்பு அனைத்தையும் உள்ளடக்கும் ஆழ்கடல். அதன் அடர்த்தி சாதாரண மனிதனால் இயங்க முடியாத ஒரு சூழலை உருவாக்குகிறது.

அன்பின் பெயரால் அதிகாரம் செலுத்தவே முடியும். பாசம், நேசம்,அக்கறை, பிரியம் என பல சொற்களைத்தான் ஒட்டுமொத்தமாய் அன்பென்று நாம் உருவகம் கொள்கிறோம். காதலைக்கூட அன்பு கேலி செய்கிறது. எதிர்பார்ப்பின்மை மற்றும் மற்றமையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை மட்டுமே அன்பின் ஆதார அலகுகள். அதை புரிந்துகொள்பவர்களுக்கு அன்பு ஒரு இனிய வாழ்வின் சாத்தியப்பாடுகளை அளிக்கிறது. என்னை பொறுத்தவரையில் அன்பு செய்வது என்பது வேறு அன்பாகவே இருப்பது வேறு. நாம் சாதாரண வெகுமக்கள். நம்மால் அன்பு செலுத்தவே முடியும் பதிலாக அன்பையோ துரோகத்தையோ பரிசாக பெற்றுக்கொண்டு. !

அன்பாகவே இருப்பது தவம். நம்மை போன்றவர்களுக்கு அது தேவையில்லை என்றே தோன்றுகிறது. நமது சூழல் கடுமையான காழ்ப்புணர்ச்சிகளாலும் எதிர் தாக்குதல்களாலும் ஆனது. இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கேடயமும் அன்பிற்கு எதிரானது. ஆனால் கேடயங்களை எடுப்பதும் குறுங்கத்திகளை பிரயோகிப்பதும் மனிதர்களின் அடிப்படை இயல்பு. சே.பிருந்தாவின் ஒரு வரி "என் நகங்கள் அன்பாலானவை" எப்போதோ படித்தது. மறக்கமுடியாத படிமம். நாம் அன்பை பிரயோகிக்கிறோம் ஒரு ஆயுதமாக! எதிர்தாக்குதல் யுத்த கடமை.

****


An Instinct




R P RAJANAYAHEM GETTING DILUTED.



24 November, 2009

உடல்மூடுதல்


புள்ளியைத்தேடி விரிகிறதென் கோடு
அம்பு நோக்கி பறக்கும் பறவையென
நிச்சலமாய் உடல் திறந்து கிடக்கிறாய்
சதுரம்
செவ்வகம்
முக்கோணம் போன்ற எதுவுமற்ற
கோளவடிவில்
எதை செய்து என்னை நிறுவுவது
உன்பொருட்டும்
என்பொருட்டும் அல்ல
புணர்ச்சி என்றபின் ?
மதிப்பிழந்த மரணத்திற்கு பின்?
நூற்றின் வாள்களுடன் போரிடும்
என்னை ஒற்றை கேடயத்தில்
கொன்றபின்?
துணியுடுத்தி உடல்மூடுகிறேன்
என்னைவெல்ல
உன்னைவெல்ல
இதைவிட ஏதேனும் வழியுண்டோ
லயம் இழந்த பாடல்
சிதறும் இவ்வேளையில் !
***
வசுமித்ர -வுக்காக.
***

23 November, 2009

ஏன்....

நாம் எமாற்றப்படுகிறோமா ?

இது ஒரு கேள்வி. இந்த கேள்வி தினமும் ஒருமுறையாவது என்னுள் எழுகிறது. ஏமாற்றப்படுகின்றோம் என்றால் எதற்காக. யார் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

Bt கத்தரிக்காய் என்ற திட்டத்தை வைத்துக்கொண்டு யார் யாரை ஏமாற்றுகிறார்கள். அரசாங்கம் வேளாண் திட்டத்தை கிடப்பில் போடுகிறது. அரசாங்கத்தின் வேளாண் பல்கலை Bt திட்டத்தை உறுதியாக வரவேற்கிறது. நம்மாழ்வார் போன்றவர்கள் எதிர்கிறார்கள். அரசியல் பார்ட்டி எப்பொழுதும் போல் அரசியல் மட்டுமே செய்கிறது. வெகுமக்கள் யாரை நம்புவது. நான் இப்போதைக்கு 'இன்றைய வேளாண்மை' நவம்பர் இதழில் வால்டேர் என்பவரின் தலையங்க கடிதத்தை நம்புகிறேன். ( மூலிகை மருத்துவத்திலும் மனிதர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்கிற சுவாரஷ்யமான தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது).
*******
தொலைக்காட்சியிலும் ஊடகங்களிலும் செய்யப்படும் விளம்பரங்கள் எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவைகள். அதன் உளவியல் ரீதியான விளைவுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் பற்றிய ஒரு கட்டுரையை யோசித்துக்கொன்டிருக்கிறேன். நண்பர்கள் உதவலாம். உதாரணத்திற்கு எனக்கு பிடித்த விளம்பரம் ஏர்டெல் , சர்ப் எக்சல். பிடிக்காதது ஆக்ஸ் எபக்ட்.
*******
டிஸ்கவரி போன்ற நம்பகத்தன்மை வாய்ந்தவைகள் என்று சொல்லப்படுகிற சேனல்களின் பித்தலாட்டங்களை இம்மாத உன்னதம் இதழின் ஆசிரியர் கௌமத சித்தார்த்தன் தனது அருமையான கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
(உன்னதம் இதழ் தமிழ்நாட்டின் மிகசிறந்த சிற்றிதழ்).
*******
மொபைல் போன்களின் உதவியால் ஒரே நேரத்தில்/நாளில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை பேர்களிடம் பேசுகிறார்கள். அவர்களில் யார் ஏமாறுகிறார்கள்/ ஏமாற்றுகிறார்கள் என்ற அனைவருக்கும் பதில் தெரிந்த கேள்வியுடன் இந்த பதிவை முடிக்கிறேன்!

******

படிப்பவர்கள் எதையாவது சொல்லுங்கள். நன்றி.

22 November, 2009

ஆதங்கம்

சில திருமணங்களுக்கு செல்ல முடியாமல் போவது பெரும் துக்கத்தை ஏற்படுத்தும். ஒரு இனிய தொழமைத்தனத்தை, அதை அனுபவிக்கும் கணங்களை இழப்பது போன்ற ஒரு உணர்வு. திருச்செந்தாழை திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. அவருக்கு ஒரு வாழ்த்து.
***
பின்யா மிகஅழகான சிறுமி. அந்த மழை கிராமத்தின் அழகுக்குள் ஒரு அற்புதமாய் சுற்றித்திரியும் அழகி. அவளுடன் கிராமத்து சிறுவர் பட்டாளம் ! அந்த கிராமத்தில் ஒரு டீகடை வைத்து பிழைப்பு நடத்தும் முதியவர் நந்து. அந்த முதியவரின் குழந்தைத்தனத்தால் ஏற்படும் பிரச்சனை படத்தின் கதை. கதைமூலம் ரஷ்கின்பான்ட் உடைய நாவல். இயக்கம் மற்றும் இசை விஷால்பரத்வாஜ். நடிகர் பங்கஜ்கபூர் அந்த வயதான ஆளாய் நடித்திருக்கிறார் (ரோஜா படத்தில் அரவிந்தசாமி பேச்சை கேட்டு திருந்தும் தீவிரவாதியாய் நடித்தவர்). படத்தின் பெயர் ப்ளூ அம்ப்ரெல்லா. தமிழ்கூறும் நல்லுலகின் சினிமா காரர்களே படத்தை பாருங்கள். திருந்துங்கள். கூடவே லோக்கல் மசாலா கதையை எப்படி உலகளாவிய உடலரசியல்/நுண்ணரசியல் மற்றும் தீவிர அரசியல் படமாக எடுப்பது என்பதை இயக்குனர் விஷால்பரத்வாஜின் காமினே படத்தையும் பாருங்கள். திருந்துங்க மக்கா...!!
***






20 November, 2009

அறிவியல் புனைவிலிருந்து வெளியேறும் நான்

முப்பரிமாணங்களின் எதிர்திசையில்
காலமென்கிற நான்காம் பரிமாணத்தின்
மத்தியில் ஒரு பெரிய ஓட்டை
விழுந்தது. முக்கடவுள்களில் முதலானவள்
அதை சூன்யம் என்றாள். இரண்டாமவள்
பொருட்களின் எதிர்மறை என்கிறாள்
மூன்றாமவள் வெளிஏறுதலின் ரகஸ்யம்
என்கிறாள். பின் மூவரும் அவ்வோட்டை
பற்றி ஒரு சமன்பாட்டை நிறுவ
முனைந்தார்கள். யுகம் கழிந்தது.
மூத்தவள் அல்ஜீப்ராவை கண்டுபிடித்தாள்
இரண்டாமவள் தங்கசுரங்கமொன்றின்
வரைபடத்தை நீட்டினாள். மூன்றாமவள்
இரும்புகோட்டையால் அவ்வோட்டையை
மூடி சாவியை காட்டினாள்
நான்
அல்ஜீப்ராவாகவும்
ரகஷ்ய சுரங்கத்தின் வரைபடமாகவும்
கோட்டைவாசலின் சாவியாகவும் ஆகிவிட்ட
காலத்தின் ஓட்டை பற்றி
ஒரு அக்கறையமில்லை எனக்கூறி
விழித்துக்கொண்டேன்.

உஷாஉதுப்

http://www.dhool.com/sotd/underthe.rm

http://www.dhool.com/sotd/lifeis.rm

முதல் பாட்டு மதனமாளிகை என்ற படத்தில். இசை எம் பி சீனிவாசன்..!

இரண்டாவது மேல்நாட்டுமருமகள். இசை குன்னக்குடி அவர்கள்..!!!!!

19 November, 2009

மல்லிகை பூ....

To-day is one of my good day!

நீண்ட நாள் கேட்க நினைத்து கொண்டிருந்த மூன்று பாடல்களை நான் கேட்டேன்! ஒன்று: உஷாஉதூப் பாடிய under the mango tree.. ! மதனமாளிகை என்ற படத்தில். இந்த பாடலை கேட்டு இருபத்திஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதில் அவர் உச்சரிக்கும் மல்லிகைப்பூ.. இன்னும் அற்புதம். தமிழ் படங்களில் உஷா பாடிய பாடல்களில் இதுதான் உச்சம். மேல்நாட்டுமருமகளில் ஒன்றும் இதயகனியில் ஒன்றும் அவர் பாடிய பாடல்களில் இப்போது நினைவில் வருகிறது. இரண்டாவது முத்தானமுத்தல்லவோ என்ற படத்தில் எனக்கொரு காதலி இருக்கின்றாள் விஸ்வநாதனின் தகரகுரல் அற்புதம். மூன்றாவதாக ஆஷா பாடிய தம் ஒர் தம் ..! ஹரே ராதா ஹரே கிருஷ்ணா.. படம். இதில் ஒரு சின்ன பிட் உஷா பாடியது..!

internet sucks me..!

சங்கீத சாகரம்

எனக்கு இல்லாத பல அறிவுகளில் மிகமுக்கியமானது இசையறிவு. அதை பற்றிய குற்றவுணர்வை எனக்கு முதலில் ஏற்பதியது ரமேஷ்வைத்யா. என் இசையறிவு வெறும் சினிமா பாடல்கள்தான். மற்றவையெல்லாம் எனக்கு பாகவதர் பாடல்கள் வகைகளே. பாகவதர்கள் பாடல்கள் என்றாலே அறுவை. இப்படியிருந்த என்னை ஞானசூன்யம் என்று நம்பவைத்தது ரமேஷ். அது அவருக்கே தெரியாத விஷயம். நான் இது பற்றி ஒருதடவை கூட அவரிடம் பேசியதில்லை. பொதுவாக எல்லா நேரத்திலும் அவர் பேச நாங்கள் கேட்டுகொண்டிருப்போம். தனியாக சந்திக்க நேர்ந்தாலும் அதுவே. எனக்கும் ரமேஷுக்கும் ஆன நட்பை எனது நாவலுக்காக சேமித்து வைத்திருக்கிறேன். மூளைக்குள் இருக்கும் அந்த அனுபவங்களை எப்போது எழுதுவேன் என்று தெரியாது. ஆனால் அந்த அத்தியாயத்தின் முதல் வரி மட்டும் மாறவே மாறாது. அது இப்படி ஆரம்பிக்கும்: அக்கக்கா கிளி செத்து போச்சு.. எப்ப.. இப்ப..எப்பிடி.. இப்பிடி...! பதினைந்து வருடங்களுக்கு முன் அவர் எழுதிய ஒரு பாடலை பாலுசத்யா என் வாகனத்தில் பில்லியனில் அமர்ந்து என் காதருகே பாடிக்கொண்டு வர நான் வாகனத்தை பெரியகுளத்திலிருந்து தேனிக்கு ஓட்டி சென்றது ஒரு இனிமையான நினைவு. முல்ல பூ வாசம் மூக்குல வீசும் கன்னிப்பெண் வாசம் என் நெஞ்சுக்குள்ள.. அத்த மகளே மெத்த வேணுமா.. என்று தொடங்கும் அப்பாடல் எனக்கு முதல் தனிப்பாடல்! அதில் வரும் ஒருவரி: குண்டு விளையாட சேக்கலைனு ரெண்டு வண்டு கண்ணால கண்ணீர் வடிச்சவளே..." இன்னும் இனிமேலும் மறக்காது. அதன் பிறகு த மு எ ச பாடல்கள் முதல் உலகில் எனக்கு கேட்க கிடைக்கும் அனைத்து வகையான சங்கீதத்தையும் கேட்டு வருகிறேன். பல விதமான உணர்வுகளுக்கும் ஆட்படுகிறேன். இதுவரை அதன் கிரமப்படிகள் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. மேற்கத்தி இசை கலந்த இந்திய இசை எனக்கு பெருவிருப்பமாய் இருக்கிறது. இதை எழுதும் பொது பாலமுரளிக்ருஷ்ணா அவர்ளின் ஒருநாள் போதுமா பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

17 November, 2009

மணமும் மழையும்

ஐந்தாறு நாட்கள் பதிவு வேலை செய்யவில்லை. இடையில் பணி நிமித்தமாக தஞ்சாவூர் சென்றிருந்தேன். பிரகதீஸ்வரர் கோவில் (கோவிலா கோயிலா ?) கட்டமைப்புகளை மீண்டும் பார்த்து பரவசம் அடைந்தேன். ஆனாலும் எனக்கு பிடித்த கோவில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம். நெல்லையப்பர் கோவில் உள்ளே சுற்றுப்பிரகாரத்தில் நுழையும்போது மூச்சில் ஒரு வாசனை தெரியும். மல்லிகை, வவ்வால் கழிவு, விபூதி ஆகியவை கலந்த ஒரு அபூர்வ மணம். மிகுந்த மன சிலாகிப்பை அந்த வாசம் எனக்கு கொடுக்கும். அது போல பெரும் மன சிலாகிப்பையும் ஒரு பூதகணத்தையும் தஞ்சாவூர் மியூசியத்தில் பார்த்த ஒரு சிலை எனக்கு அளித்தது. ஆயிரம் வருட பழமை கொண்ட கற்சிலை.! அம்மன் சிலை. அதன் முகத்தில் ஒரு புன்னகை. ஆயிரம் வருட புன்னகை. அற்புதமாக உறைந்திருந்தது. நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன் சட்டென்று தோன்றிய பயத்தில் திரும்ப அதை பார்க்கவேயில்லை. இனிவரும் நாட்களில் இது பற்றி ஏதாவது கவிதை எழுதினால் கண்டுகொள்ளாதீர்கள். அப்புறம் மழை.! தஞ்சாவூரில் நண்பருடன் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்தேன். எழும்போதே நல்ல மழை. கருப்பில் குவாட்டர் நூறுரூபாய்க்கு வாங்கி குடிக்கும் போது காலை எட்டரை! துண்டை மட்டும் எடுத்துகொண்டு வெளியில் கிளம்பி விட்டோம். ரயில்நிலையத்திலிருந்து பெரிய கோவில் வரை நனைத்து கொண்டே நடந்தோம்! நாங்கள் நனைவதை வேடிக்கை பார்த்தவர்கள் கண்ணில் தெரிந்த பொறாமையை பார்க்க வேண்டுமே! அப்படியே போய் ஆற்றில் விழுந்ததுதான் ஒரு ஒன்றரை மணி நேரம் ஊறல். பின்பு கிடைத்த உணவுதான் அற்புதம். மலர் சுயவுதவி குழு நத்தும் சின்ன உணவகம். ரயில்நிலையத்தின் எதிரிலேயே இருக்கிறது. அளவில்லா சாப்பாடு முப்பது ரூபாய். மீன் குழம்பு இருபது ரூபாய். சாப்பிட்டவுடன் எனக்கு தண்ணீர் குடிக்க வயிற்றில் இடமில்லை.

சுகவாசி

தெரியாததை பற்றி
ஒரு போதும் எழுதுவதில்லை
தெரிந்ததை பற்றி எழுதாதவை போலவே
ஆயிரங்களின் வருடங்களில்
சிதைவுகளால் உருவாக்கப்பட்ட
நமதான சமூகத்தை யாருக்கு சொல்ல
ஏனென்றால் நான் ஒரு முழுச்சோம்பேறி
அற்புதமான சுகவாசி. கவலை கொண்டு
என் மணித்துளிகளை கொல்ல
உரிமையில்லை எனக்கு. இந்த
சமூகம் அடைந்து விட்ட மலட்டுத்தன்மை
என்னை என்ன செய்துவிடும். இதை
நான் யாரிடம் சொல்ல வேண்டும்
அல்லது யாரிடம் சொல்லாமல் இருக்க
வேண்டும். மலட்டுத்தன்மையை யார் உணர
முடியும் எல்லா ஆண்களிடமும் விந்து
பெருகும் போதும் எல்லா பெண்களும்
அண்டத்தை பொழியும்
போதும். மொழிகளும் நிறங்களும்
மனிதர்களை தீர்மானிக்கிற
ஆதிப்பழக்கத்தின் மீதான எனது
உமிழ்வு என்ன செய்து விட
போகிறது. நான் பாசாங்கு செய்கிறேன்
சந்தோசமான மனிதனாக
சமூகத்தின் வரையறைக்குள் என்னை
பொருத்திககொண்டதற்காக
பெருமைபடுபவனாக. ஆணென
சொல்லிக்கொள்பவனாக. என்
பாசாங்கு எவ்வளவு தூய்மையானது
வன்முறையை அது வெறுக்கிறது ஒரு
நடனப்பெண்ணை வெறுக்குமளவிற்கு
அடிநாதமாய் அதனுள் இருக்கும்
குரூரதன்மையை
எளிதாய் உதறி தள்ளுகிறது. ஒரு நடன
மாது
அவள் புகைப்பதையும் மதுவுண்பதையும்
நான் எவ்வாறு வெறுக்க முடியும். எனது
விழிகள் அவற்றை எவ்வளவு தாகத்துடன்
உறிஞ்சி விழுங்குகிறது பல்வழி
நீர்கசிய. எனது விருப்ப மஜ்ஜைகள் உற்பத்தி
செய்கிற குருதி கேளிக்கைகளுக்கானது
எல்லோரிடத்திலும் ஒரே நிறத்திலிருக்கும்
அக்குருதியை அரசியலுக்கு குடிக்க தருவது
எவ்விதத்தில் பொருத்தமானது. எனது
குருதி எனக்குமட்டுமேயானது
முடிவு
ஆரம்பம்
அல்லது இவையிரண்டுமேயான
உங்கள் சுயத்தில் அதன் ஒரு துளியை
உருளவிடுகிறேன். அது நிற்குமிடத்தில்
இவ்வுலகம் நின்று போக கடவது
சுகவாசி சொன்ன சொல்
பலிக்கும்.

******* உரையாடல் - கவிதை போட்டிக்காக.

11 November, 2009

லியோ நார்ட் கோகன்- ஐ அம் யுவர் மேன்

If you want a lover
I'll do anything you ask me to
And if you want another kind of love
I'll wear a mask for youIf you
want a partnerTake my hand
Or if you want to strike me down in anger
Here I stand
I'm your man

If you want a boxer
I will step into the ring for you
And if you want a doctor
I'll examine every inch of you
If you want a driver
Climb inside Or if
you want to take me for a ride
You know you can
I'm your man

Ah, the moon's too bright
The chain's too tight
The beast won't go to sleep
I've been running through these promises to
youThat I made and I could not keep
Ah but a man never got a woman back
Not by begging on his knees
Or I'd crawl to you baby
And I'd fall at your feet
And I'd howl at your beauty
Like a dog in heat
And I'd claw at your heart
And I'd tear at your sheet
I'd say please, pleaseI'm your man
And if you've got to sleep
A moment on the road
I will steer for you
And if you want to work the street alone
I'll disappear for you
If you want a father for your child
Or only want to walk with me a whileAcross the sand
I'm your man
If you want a lover
I'll do anything you ask me to
And if you want another kind of love
I'll wear a mask for you

நான்குவழிசாலை

**

எல்லாம் போய்விட்ட பின்பும்

ஒன்று உள்ளதாய் சொல்கிறாய்

நம்பிக்கை என்றதன் பெரேன்கிறாய்

அனைவர்க்கும் தெரியும் இந்த பொய்

சாலையை குறுக்கிடும் ஆமை

பொறுமையற்றது என்றால் நம்பவா முடிகிறது.

**

விடுதியொன்றின் கறைபடிந்த

கழிப்பறையில் உரித்து கொண்டிருக்கும்

சுவரில் கருஞ்சிவப்பு பொட்டை பார்த்தேன்

நீர் வரும் குழாயின் மீதொரு கருப்பு பொட்டு

நாள்பட்டு சுருங்கதொடங்கியிருந்தது

நங்கூர வடிவில் மற்றொன்று

ஆறு விழிகளுடன் நான் குளிப்பதை

ரசித்துகொண்டிருந்தன அவைகள்.

**

பெண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றை

தம் கைப்பையில் வைத்திருக்கக்கூடும்

ஆண்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாய்

பெண்களை வைத்திருக்கிறார்கள்

**

கடலற்ற அலையொன்று எந்நேரமும்

பொங்குகிறது வாய்க்கால் வழி

வழிந்தோடுகிறது காலம்.

**

பதிவர்கள்

பதிவில் நான் தொடர்ந்து வாசிப்பது இவர்களை:

நாகார்ஜுனன்.
வளர்மதி.
ஜமாலன்.
கலையகம் கலை.
சுந்தர்.
ராஜநாயஹம்.
சாரு நிவேதிதா.
ராமகிர்ஷ்ணன்.
ஜெயமோகன்.
உமாஷக்தி.
சந்திரா.

இவார்களை என் மதிப்பின் படி வரிசைக்கிரமமாக எழுதியுள்ளேன். நாகார்ஜுனன் இஸ் வெரி பெஸ்ட். என் வாசிப்புகளின் மொத்த இயங்குதளமும் இவரின் அறிமுகங்களை வைத்தே நிகழ்கிறது. வாசகர்களுக்காக கடுமையாக உழைக்கிறார். அவர் பதிவு ஒவ்வொன்றும் ஒரு வாசலை என்னுள் திறக்கிறது.
வளர்மதி நாகார்ஜுனனுக்கு சற்றும் குறையாதவர். ஆனால் பதிவுகள் குறைவு. உலகின் பல்வேறு நிகழ்வுகளை துரிதமாகவும் நேர்த்தியுடனும் ஒளிக்காட்சிகளுடன் பதிவேற்றுகிறார் கலை. ராஜநாயஹம் நினைவு மீட்புகள் என்னை ஆச்சர்யபடுதுகிறது. மற்றவர்கள் நல்ல வாசிப்பனுபவத்தை கொடுக்கிறார்கள்.

09 November, 2009

பேய்கிறுக்கு

வசுபாரதியும் நானும் சேர்ந்து எழுதிய கவிதைகளை கருப்புபிரதிகள் நீலகண்டன் பதிப்பித்தார். கவிதை தொகுப்பின் தலைப்பு 'கள்ளக் காதல்'. புத்தகத்திற்கு ஓவியம் பேய்க்காமன். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு இதழ் தொடங்கலாம் என்று எண்ணம் இருந்தது. இபோழுதும் இருக்கிறது. இதழுக்கு பெயர்தான் பேய்கிறுக்கு. இடையில் எபொழுதும் போல ஒரு விடுபட்ட புரிதல். இதழை கொண்டு வருவதில் இனி கால வரையற்ற தாமதம் ஏற்படலாம். இந்த இடைவெளியில் ஒரு இதழ் தொடங்குவது தேவைதானா என்கிற எண்ணம் தோன்றுகிறது. கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பலமுறை நீயும் நானும் பேசாமல் இருந்து விடுவோம் என்று முடிவு செய்து..அதிகமாக ஒரு இரவு நேரம் நீடிக்கும் வசுபாரதிக்கும் எனக்குமான பிரிவு. சச்சரவற்ற காலங்களில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்போம். இந்த மழை நாளில் எங்கள் கவிதை தொகுப்பை நான் மீண்டும் வாசித்தேன். அதி ஏற்பட்ட நெகிழ்வுதான் இந்த பதிவு. இந்த புத்தகம் எங்களை ஒரு கை பார்த்து விட்டது. ஆனாலும் மீண்டுவிட்டேன்/விட்டோம். எதோ ஒரு கன்னி அல்லது முடிச்சு என்றால் எனக்கே சிரிப்பு வருகிறது அவன் இதை படித்தால் செய்யும் கேலிக்கு குறைவிருக்காது. இருந்தாலும் பதிகிறேன்.

06 November, 2009

நீள்வலி

தெருவெல்லாம் சிதறிக்கிடந்தன அந்த பெண்ணின் தலையில் வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூக்கள். குழந்தைகள் யாரும் விளையாடாத வண்ணம் தெருவின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்தன. ஊர் பாலத்தை தாண்டியதும் அந்த பெண்ணுடைய அம்மாவின் ஓலம் அம்பட்டையனின் சங்கொலியில் அமுங்கியது. அந்திக்கு மேல் புகை வாடை சுவாசித்து வெளியேறின சில அரவங்கள். கங்கு பொரிந்த சிதைக்குள் வெந்து கொண்டிருந்தது அந்த பெண்ணின் உடல். கீழ் வான சிவப்பில் கன்றியது மயானம்.

காட்சி ஒன்று:

சாட்சி:

பொம்மிநாயக்கன்பட்டி பள்ளிகூட தெரு. சில மனிதர்கள். அவர்களின் மூதாதையர்களின் ஆவி. பேரக்குழந்தைகள். பேரக்குழந்தைகளின் அறியாமை. நான்கு மாடுகள். பதிமூன்று ஆடுகள். இரண்டு வைக்கோல்போர்கள். காக்கை பித்ருக்கள். கருப்பசாமி சிலைகல். சில சுவர்கள். மதியநேரதிலும் ஈரப்பதம் உணர்த்தும் காத்து. மனிதர்களின் மனவெளியில் இயங்கும் கருப்பு. சில பூச்சிகள். சம்பவம் நடந்த கணம்.

உரையாடல் ஒன்று:

"இந்த தடவ ங்கொம்மா ஏன் அவள அனுப்பல.."

"போன தடவ என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு தெரியாதா.."

"வகுத்துபிள்ளகாரிக்கு ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு கேட்டா பிகு பன்றயே.."

"ஒத்தாசைக்கு வந்தவள கொளுந்தியானு பாக்காம கூப்ட ஆளுதான நீயி.."

"ஆமாமா ரெண்டு பேரும் ரம்பா ஊர்வசின்னு நெனப்பு.."

"இல்லைனாலும் உன் பவுசு தெரியாதாக்கும்.. வாத்தியார்னுதான் பேரு.. பள்ளிக்கூட பிள்ளைகளபாக்குறதே சரியில்ல.."

"நிறுத்துடி.. நீ மட்டும் யோக்கியமாக்கும் .. ஊர் மேயத்தான டிரான்ச்பிர்ல போன.."

"இதப்பாருங்க இப்படியெல்லாம் அசிங்கமா பேசாதீங்க .. என்னோட யோக்கியத என்னான்னு எனக்கு தெரியும்..எல்லாம் உங்க மாதிரியில்ல.."

"நல்லாத்தெரியுது உன் யோக்கியம்..மூத்தவளுக்கு உன்ஜாடையா போச்சு.. ஆம்பளையா பொறக்கட்டும் அடுத்து .. அப்பல்ல தெரியும் எவன் ஜாடைனு.."

"................................................."

"என்னடி பதிலக்கானோம்.."



அகங்காரத்தாலும் ஆற்றாமையினாலும் கோபத்தாலும் குரூரத்தாலும் ஆன ஒன்னரைப்படி சொற்கள் தெருவில் சிதறத்தொடங்கின.



உரையாடல் இரண்டு:

"எண்டா.. உப்புத்தொற பூசாரி அடுத்ததும் மகாராணிதான்னு சூடத்த ஆத்துறான்.. என்னடா செய்றது.."

"என்னத்த செய்ய சொல்ற.."

"முத்துத்தேவன்பட்டி வைத்தியச்சிக்கு நெறைய டிமாண்டாம்டா .. நாளப்பாதது இப்பவே சொல்லி வையிடா.."

"எம்மா உனக்கு அறிவே கெடையாதா.. எத.. எத.. எப்ப பேசனும்னு.. "

"ஒம்பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்குற..எங்க அவ.. அடுப்படியில ஓக்காந்து ஒட்டு கேக்குராளா.."

"சும்மாயிருக்கமாட்டியாம்மா நீயி.."

".........................."

".................................."

".................................."



தேள்களும் பெருச்சாளிகளும் தின்றது போக தெருக்களில் ஓடத்தொடங்கின வீச்சமெடுத்த சொற்கள்.



உரையாடல் மூன்று:

"அப்பா .. நான்தான்பா.."

".............................................."

"முடியலப்பா.."

"..................................."

"பாத்துட்டேன்.. ஒண்ணுமே செய்ய முடியல.."

".......................... ................................................"

"எல்லா வழியிலையும் பாத்துட்டேன்..முடி..."

"..............................................."

"அம்மா.."

"............................"

"அதான் அப்பாகிட்டே சொன்னேன்.. முடியலம்மா.."

"..............................................."

"காசு சரியா போச்சும்மா.. முடியல.. வெக்கிறேன்.. "



உரையாடல் நான்கு:

"..........................................................................................................................................."

அவள் பேசிய பேச்சுகள் அவளை சுற்றியிருந்த யாருக்கும் விளங்காத வெறும் ஒலிகளாய் மட்டுமே இருந்ததால் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் அவற்றை காற்றில் மிதக்க விட்டார்கள். காற்று தள்ளாடியவாறு கனமான அவ்வார்த்தைகளை மரக்கிளைகளில் தலைகீழாய் தொங்க விட்டு சென்றன.

அவளை சுற்றி இருந்தவர்கள்:

சுவர்கள். பலாமரத்தாலான அலமாரி. சில காட்டன் துணிகள். துரு பிடித்த ஜன்னல் கம்பிகள். சிங்கர் சாந்து பொட்டு. ஜிமிக்கிகள். கண்ணாடி வளையல்கள். முடிகற்றை நிரம்பிய சீப்பு. சில கரப்பான்கள். அழுக்கு பெட்டியை சுற்றி கொசுக்கள். கழிப்பறை. தட தட வென்று சுற்றும் மின்விசிறி. சில பெருமூச்சுகள். புழுக்கம். சில சென்சார் செய்யப்பட்ட பொருட்கள்.



காட்சி இரண்டு:

சாட்சி:
வேப்ப மரங்கள். காங்க்ரீட் கட்டிடங்கள். நாய் நுழையக்கூடிய அளவு துளைகள் கொண்ட ஜன்னல்கள். தகர கட்டில்கள். ரொட்டித்துண்டுகள். பால் வாசனை. பீடி வாசனை. அழுகுரல்கள். பெண்கள். வலுவற்ற ஆண்கள். பீதியூட்டப்பட்ட ஒரு பிணவறை. அவளின் உடல்.
உரையாடல் ஐந்து:
"போஸ்ட் மாடம் பண்ணுறதுக்கு முன்னாடி வேற பார்மாலிட்டீஸ் எதுவும் இருக்கா .."
"இல்ல சார்.. அனா விசரா எடுக்கணும் சார்.."
"எடுத்துடலாம்.."
"ரேகொசிசன் எதுவும் தேவைப்படுமா சார்.."
"வேண்டியதில்லை.. எடுத்துடலாம்.."
"தேங்க்ஸ் சார்.."
"அஞ்சு மாச பேபி ஒன்னு இருக்கு ஷ்பெசிமனுக்கு எடுத்துக்கலாமா.."
"எதுவும் பிரச்சனை வராதில்லை சார்.."
"பார்மாலிட்டீஸ் எதுவும் இல்ல .. பட் அவங்களுக்கு என்ன தெரியவா போகுது.."
"எடுத்துக்கலாம் சார்.."
"கல்யாணம் ஆகி அஞ்சு வருசம்தான் ஆகுது..ஆர்.டி.ஒ என்கொயரி சார்.."
"அப்ப வேணாம் .. எதுக்காக பண்ணிக்கிட்டாளாம்.."
"வேற எதுக்கு சார்.. வகுத்து வலிக்குதான்.."
"ஹ..ஹ..ஹா.. பி எம் முடிஞ்சதும் பியூன் பார்சல் பண்ணிடுவான் கையெழுத்த போட்டு வாங்கிகிட்டு போக சொல்லுங்க.."
"சரிங்க சார்.."

சில கேள்விகள்
பேர் விலாசம் என்ன. மொதல்ல பொணத்த பாத்தது யாரு. கடைசியா உசிரோட யார் பாத்தது. புருசனுக்கு ஒரே பொண்டாட்டியா. காது குத்தியிருக்கா. இன்சூரன்ஸ் பண்ணியிருக்கா. எந்தப்பக்கம் கெடந்துச்சு. பஞ்சாயத்து ஆளுக யாரு. பாடி வாங்க யார் கையெழுத்து போடுவா. எந்த சுடுகாடு. சொன்னத வாங்கிட்டு வந்தாச்சா.

குஷ்டம் பிடித்த சொற்கள் ஈக்களுக்கு இரையாகி கழிவுகளாய் சாக்கடையில் மிதக்கின்றன.

காட்சி மூன்று:
சாட்சி:
செழுமையாக ஒழுக்கமற்று கட்டப்பட்ட பெரிய கட்டிடம். பல அறைகள். மரத்தாலான நாற்காலிகள். வயர்கள். மரங்களை மூலக்கூறுகளாய் கொண்ட எண்ணிலடங்கா காகிதங்கள். குப்பை தொட்டிகள. தலை முடி இழந்த மனிதர்கள். திருவுருவப்படங்கள். பெரிய குளிர் பதன அறை. கண்ணாடி ஜன்னல்கள். திரைச்சீலைகள். அக்குவாபினா பாட்டில்கள். கப் அண்டு சாசர். ஆணைகள்.

உரையாடல் ஆறு:
"அடுத்த மீட்டிங் ஷெட்டியூல் என்ன.."
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பத்தினது..சார்.."
"யார் வந்திருக்கா .."
"கவுன்சலிங் டீம்..ஹெல்ப் லைன் மெம்பெர்ஸ்.. டி எஸ் பி டௌரி செல்.."
"வெல்.. அவங்கள கொஞ்சம் வெய்ட் பண்ண சொல்லுங்க.. நாம கலால் மீட்டிங் முடிச்சிடலாம்.. "
"அசிஷ்ட்டேன்ட் கமிஷனர் கலால் .. நீங்கதான.."
"எஸ் சார்.. "
"இந்த மாசம் ஆப்டேக் என்ன.."
"ஒன் ட்வென்டி பெர்சென்ட் சார்.."
"லாஸ்ட் டைம் ஒன் சிக்ஸ்டி இருந்தது இல்ல... கேஸ்கள் எதுவும் இருக்கா.."
"இருபத்தியேழு இருக்கு சார்.. ஆல் ஆர் மைனர் இன் நேச்சர்..சார்.. "
"குட்..ட்ரை டு கீப் ரைஸ் தி ஆப்டேக்.. மீட்டிங் மே பி வின்ட் அப்.. ஸிராஸ்தார்.. அவங்கள வர சொல்லலாம்.. "

போதையேறிய சொற்கள் தெருவில் ஆண்களை அம்மணமாக்கி கிடத்தின.

உரையாடல் ஏழு:

"வெல்கம்.. இந்த மாசம் என்ன விசேசம்.. "
"ஒன்னும் இல்ல சார்.. இயர் எண்டு .. சூசைடு பர்சென்ட் அதிகமாயிருக்கு.."
"எல்லாமே பெண்களா.. "
"இல்ல சார்.. மொத்தம் நூத்திநாற்பத்துஏழுல தொன்னுத்துநாலு பெண்கள்.. ஐம்பத்துமூணு ஆண்கள்..சார்.."
இது என்ன பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல வருதா.. "
"இல்ல சார்.. பட் .. கவுன்சிலிங் டீம்ல இருந்து முறையா உங்க நோடீஷ்க்கு கொண்டு வரணும்.. அதனால்தான் சார்.. சொல்றோம்.. "
"இதுக்குன்னு தனி மீட்டிங் இருக்கில்ல அப்ப பாத்துக்கலாம்.. "
"சரிங்க சார்... ஆனா..."
"என்ன சொல்லுங்க.."
"எல்லாம் வயித்து வலியில தற்கொல பண்ணிக்கிட்டதா சொல்றாங்க சார்.. "
"எல்லாருமேவா.. "
"இல்ல சார்.. நூத்திநாற்பத்து ஏழு பேர்ல நூத்திஏழு பேரு வயித்துவலியில மனம் வெறுத்து தற்கொல பண்ணிக்கிட்டதா போலிஷ் சைடு சொல்றாங்க சார்.."
"நாங்க சொல்லலை சார்.. புகார்ல அப்படித்தான் கொடுக்குறாங்க.. நாங்க என்ன செய்றது.."
"வருசா வருஷம் சூசடு ரேட் அதிகமாயிட்டுதான் இருக்கு.. பாப்புலேசன் அதிகமாகிட்டு இருக்கில்ல.. ஹ..ஹா.. "
"சிரிக்க முடியாது.. டீ அரேஞ் பண்ணுங்க.."

வெள்ளை சட்டை போட்ட சொற்கள் கழிப்பறை குழாய்கள் வழியாக நகரை கடக்கின்றன. சொற்களை உண்டு கொழுக்கின்றன பன்றிகள்.

காட்சி நான்கு:
சாட்சி:
கடவுள் என்கிற நிகழ்வுபோக்கு. இயற்கை என்கிற அர்த்தத்தில் வருகிற அனைத்தும். எதார்த்தம் என்கிற முட்டாள்தனம். மலட்டுத்தனத்தை வெளியெங்கும் விதைத்த பிரத்தியேகமானதொரு குழுமனம். குடித்து செழித்து துடைத்து அலையும் அறிவு வாடை வீசும் எழுத்தாளர் உடல்கள். நான். அவரவர் ஊர்களில் இருக்கும் சுடுகாடு மற்றும் இடுகாடு.

உரையாடல் எட்டு:
கேட்பத்தற்கு யாரும் இல்லாததால் சொல்லப்படவில்லை.

அவளின் மகளை அவளின் தாய் அழைக்க வந்தபோது மகள் தெருவில் சிதறிக்கிடந்த பூக்கள்களை பொறுக்கிக்கொண்டிருந்தாள். ஆச்சர்யப்படும்படியாக தெருவெங்கும் மல்லிகை மனம் கமழ்ந்தது.

நீண்ட தெருக்கள் இருக்கின்றன. நீண்ட சாலைகள் இருக்கின்றன. தேவையற்றவை மற்றும் தேவையானவை எல்லாம் நீண்டு கிடக்கின்றன. சவ ஊர்வலங்களின் நீளம் மட்டும் குறையத்தொடங்கியுள்ளன. அதனால் காக்கை பித்ருக்கள் கவலை கொண்டு கரைந்தலைகின்றன. வெளியெங்கும் சொற்கள் தொடர்ந்து பிறந்து பரவிக்கொண்டுள்ளன. சப்தத்தினால் ஆன சொற்கள் சில மீட்டர்கள் பயணம் செய்கின்றன. காகிதங்களின் மீதும் அறிவியல் உபகரணங்களின் மீதும் அறையப்பட்ட சொற்கள் சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்கின்றன. பின்னர் ஏதோ ஒரு மர்மப்புள்ளியில் மரணித்து வீழ்கின்றன. மரணம். சுபம்.

04 November, 2009

கே பி.

கொடியது கேட்கின் வரி வடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றேனார்க்கொரு நோய்

அதனினும் கொடிது அன்பிலா பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையார் புற உண்பதுதானே.

********************

கடைசி வரியை சரியாய் எழுத கேட்டு எழுத முடியவில்லை நண்பர்களே.!

*********************

புண்ணியம்

மரணத்தை பற்றி பேசிய பின் நேற்று மீண்டும் ஒரு உடல் பார்த்தேன். காலம் விரும்பியோ விரும்பாமலோ என்னை ஒரு வெட்டியானாக்கி இருக்கிறது. கடந்த மாதத்தில் மூன்று உடல்கள். நேற்று பார்த்ததுதான் கொஞ்சம் முழுசாக இருந்தது. தலையும் உடலும் தனித்தனியாக. இன்னொன்று சிதைந்த சிறுபெண். பதினேழு வயது. அந்த கிராமத்தில் அழகான பெண் என்று சொன்னார்கள். அவளுடன்இருந்தது அவள் தாய். அவளுடன் இறந்ததும் அவள் தாய். தாயும் மகளும் வாழ்க்கை பிடிக்காமல் ரயிலுக்கு முன் பாய்ந்து விட்டார்கள். தாய் அறைந்துபோனாள். சிறுபெண் உடல் துண்டுகளுக்கும் தண்டவாள கற்களுக்கும் வித்யாசம் தெரியவில்லை. அப்புறம் இன்னொரு நாளில் ஒரு ஆண் கொத்துகறி கிடைத்தது. அநாதியாய். ரயில்வே நிர்வாகம் அடையாளம் தெரியாத உடல்களுக்கு புதைக்கும் கூலியாக எண்ணூறு ரூபாயும் காவல் நிர்வாகம் நானூறு ரூபாயும் கொடுக்கிறது. ராஜா என்கிற அழகான இளைஞன் ஒற்றை ஆளாய் போஸ்ட் மாடம் செய்த உடலை சைக்கிளில் வைத்து இடுகாட்டுக்கு அழுத்துகிறான். நானும் சில வேளைகளில் மண் அள்ளி போடுகிறேன் யாரென்று தெரியாத முகங்களில். புண்ணியங்களின் மேல் நம்பிக்கையில்லை. ஆனாலும் இது புண்ணியம் என்று உடனிருப்புவர்கள் சொல்லும் போது மனசு நிறைகிறது. ரயிலுக்கு முன் பாய தைரியமளிக்கும் வாழ்க்கைக்குள் பாய சமுதாய அமைப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இது பற்றி மீண்டும் எழுதுவேன்.

01 November, 2009

சிலுவைச்செடி

இரவு மழை பொழிந்தது தெரியவில்லை காலையில் இதமான குளிரில் கழுவிவிட்ட மாதிரியான சாலையில் வாகனத்தை ஓட்டிவந்தேன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு. நிறைய பச்சை. தாமரைப்பாடி தாண்டியதும் சாலையில் மேற்கில் ஒரு சிறிய கல்லறை இருக்கிறது. நாலைந்து பேர் மண்வெட்டி கொண்டு கல்லறையை களையெடுத்து கொண்டிருந்தார்கள்! சுத்தமான நிலத்தில் நடப்பட்ட சிலுவைகள் பளிச்சென தெரிந்தது. உடல் தின்று வளர்ந்த சிலுவை செடிகள். தினமும் மாலை வேளைகளில் வரும் மரணத்தை பற்றிய எண்ணம் இன்று காலையிலேயே வந்தது. பொதுவாக மாலை நேரத்தில் பயமுறுத்தும் மரணம் காலை வேளையில் நேர்மறையான மனநிறைவை அளித்தது. ஒரு சுகமான சிறந்த தப்பித்தல் மரணம். எவற்றிடமிருந்து என்றுதான் தெரியவில்லை. கே பி சுந்தராம்பாள் பாடல்கள் பதினைந்தை தொடர்ந்து கேட்டேன். மரணபயம் மீறி உயிர் வாழலாம் தப்பில்லை என்றே தோன்றுகிறது.